Published : 19 Jan 2020 11:34 AM
Last Updated : 19 Jan 2020 11:34 AM

வாசிப்பை நேசிப்போம்: தொடரும் புத்தகச் சண்டை

தொடரும் புத்தகச் சண்டை

நான் இன்று தன்னம்பிக்கையோடும் தெளிவோடும் வாழப் புத்தகங்களே காரணம். நான் ஆறாம் வகுப்புப் படித்தபோது அலுவலகத்திலிருந்து வரும் தந்தைக்காகக் காத்திருந்து அவர் எடுத்துவரும் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். திங்கள் ‘சாவி’, செவ்வாய் ‘குங்குமம்’, புதன் ‘ராணி’, வியாழன் ‘விகடன்’, வெள்ளி ‘குமுதம்’, சனி ‘கல்கண்டு’ என ஒரு நாளுக்கு ஒரு புத்தகம் என்று அட்டவணையிட்டுப் படிப்பேன். மருத்துவப் படிப்புக் காலத்தில் விடுதியில் வாரப் பத்திரிகைகளைத் தவறாமல் படித்துவிடுவேன். கல்லூரிக் காலத்தில்தான் புத்தகக் காட்சிகளுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், வண்ணதாசன், வைக்கம் முகமது பஷீர் ஆகியோரின் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். முன்பெல்லாம் வீட்டுக்கு அப்பா கொண்டுவரும் புத்தகத்தை யார் படிப்பது எனப் போட்டி நடக்கும். இப்போது என் கணவர், மகன்கள், நான் எனப் புதிய கூட்டணியோடு வாசிப்புப் போட்டி தொடர்கிறது.

என்னுடைய கணவர், “உன்னை யாருமில்லாத தீவில் விட்டால் என்ன செய்வாய்?” என்று அடிக்கடி கேட்பார். அதற்கு நான் பதில் சொல்வதற்கு முன், “இல்லை உனக்குப் புத்தகங்கள் இருந்தால் போதும்” என்று பதிலையும் அவரே கூறிவிடுவார். மதன் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’, பிரியா தம்பியின் ‘பேசாத பேச்செல்லாம்’, நா. முத்துகுமாரின் ‘அணிலாடும் முன்றில்’, ஸ்டெல்லா புரூஸ் எழுதிய ‘அது ஒரு நிலாக்காலம்’, வைக்கம் முகமது பஷீரின் ‘உலகப் புகழ்பெற்ற மூக்கு’, பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘ஏழுதலை நகரம்’, ‘கைகால் முளைத்த கதைகள்’, சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ உள்ளிட்ட புத்தகங்கள் என் தனிமைக்குத் துணையாகவும் துயரங்களை துடைத்தெறியவும் துணையாக நின்றன.
- குமுதாசலம், ஆத்தூர்.

நட்பின் அடையாளம்

சிறுவயது முதல் புத்தகம் படிக்கும் ஆர்வம் எனக்குண்டு. அதற்குக் காரணம் வீட்டில் அனைவருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்ததுதான். ‘அம்புலி மாமா’ இதழ்தான் நான் படித்த முதல் இதழ். பிறகு சிறுவர் இலக்கியத்திலிருந்து சிறுகதைகள் பக்கம் என் வாசிப்பு நகர்ந்தது. பின்னர் நாவல்களைப் படிக்கத் தொடங்கினேன். என் தோழி மல்லிகாவின் வீட்டில் அனைத்துவிதமான புத்தகங்களையும் வாங்குவார்கள். எங்கள் வீட்டிலிருந்து அவர்களின் வீடு சற்றுத் தள்ளியிருந்தாலும் புத்தகம் வாசிக்க வேண்டும் என்பதற்காகவே நீண்ட தொலைவு நடந்து மல்லிகாவின் வீட்டுக்குச் செல்வேன். பிறகு என் அப்பாவுக்கு ஈரோட்டுக்குப் பணிமாறுதல் ஆனதால் அங்குள்ள அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அப்பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் என்னிடம் அன்பாகவும் அரவணைப்புடனும் நடந்துகொண்டனர். பள்ளியில் மாதந்தோறும் நடக்கும் இலக்கிய விழாவில் பேசுவதற்கு என்னை ஊக்கப்படுத்துவார்கள். பேச்சுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காகவே கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘அலை ஓசை’ பி.வி.ஆர்.

எழுதிய ‘காகிதப் பூக்கள்’, எஸ். ரங்கநாயகியின் ‘குடை ராட்டினம்’, சிவசங்கரியின் ‘பாலங்கள்’, லக்ஷ்மியின் ‘சூரியகாந்தம்’ எனப் பல புத்தகங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அவை வாசிப்பை என் தினசரி வழக்கமாகிவிட்டன. புத்தக வாசிப்பு, ஒரு நல்ல நட்புக்கு உதாரணம். நல்லதொரு புத்தகத்தைப் படிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை அளவிட முடியாது.
- நிர்மலா, சென்னை.

கருவிலிருந்தே தொடங்குவோம்

நான்காம் வகுப்பு படித்தபோதே நூலகத்துக்குச் செல்லும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. நூலகம் என் வீட்டுக்கு அருகே இருந்ததும் அதற்குக் காரணம். என் அக்கா தோழிகளுடன் நூலகத்துக்குச் செல்லும்போது என்னை அழைத்துச்செல்ல மாட்டார். ஆனால், நான் அவர்கள் பின்னாலேயே சென்றுவிடுவேன். நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிறுவர் இதழ்களை எடுத்துப் படம் பார்த்துவிட்டுப் படிப்பதுபோல் நடிப்பேன். ‘பூந்தளிர்’, ‘அம்புலி மாமா’ போன்ற சிறுவர் இதழ்களைத்தான் விரும்பிப் படிப்பேன். ஆறாம் வகுப்பு முதல் பள்ளியிலேயே நூலக வகுப்பு இருக்கும். அப்போது வகுப்பில் ஒருவர் கதைகள் வாசிப்பார். அப்படி ஒருமுறை சிந்துபாத் கதையைப் பள்ளியில் வாசித்தபோது அந்தக் கதையோடு நான் ஒன்றிப்போனேன்.

விடுமுறை நாளில் என் அக்காவின் தோழி ராஜேஷ்குமார் நாவலைப் படித்துக்கொண்டிருந்தார். நான் அந்தப் புத்தகத்தைப் படிக்கக் கேட்டதற்கு, “சின்ன பிள்ளைங்க எல்லாம் படிக்கக் கூடாது. பயந்துடுவீங்க” என்று சொல்லிப் புத்தகத்தை மறைத்து வைத்துவிட்டார். ஆனால், அந்தக் கதையை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது நான் கேட்டுவிட்டேன். மிகவும் திகிலான அந்தக் கதையைப் படிக்கும் ஆர்வம் எழுந்தது. அந்த அக்காவிடம் அழுது, கெஞ்சி புத்தகத்தை வாங்கி வாசித்துவிட்டேன். அந்த மர்ம நாவலைப் படிக்கும்போதே மனம் பட்பட்டென்று அடித்துக்கொண்டது. வாசிப்பின் சுகத்தை அப்போதுதான் முதன்முதலில் அறிந்தேன். பின் விடுமுறை கிடைக்கும்போதெல்லாம் நூலகம் சென்று புத்தகம் எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தேன்.

‘பூந்தளிர்’, ‘அம்புலி மாமா’ எனப் படித்த நான் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோரின் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். ஜாவர் சீதாராமன் எழுதிய ‘உடல் பொருள் ஆனந்தி’ எனும் புத்தகம் அந்நாளில் எனக்கு மிகப் பிடித்த புத்தகமாக இருந்தது. நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது பொங்கலுக்காக வீட்டைச் சுத்தம் செய்தேன். அப்போது அப்பாவின் பெட்டியில் ஒரு புத்தகம் இருந்தது. எழுத்தாளர் அகிலன் எழுதிய ‘புது வெள்ளம்’ என்கிற நாவல்தான் அது. வாசிப்பு மீதான என் காதலை அந்தப் புத்தகம்தான் தீவிரப்படுத்தியது. இன்றுவரை அந்தப் புத்தகத்தையும் அதைப் படித்தபோது ஏற்பட்ட அனுபவத்தையும் நினைவில் பத்திரமாகப் பாதுகாத்துவருகிறேன்.

நான் கருவுற்றிருந்தபோது என் குழந்தைக்கும் வாசிப்பு மீதான தாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ உள்ளிட்ட புத்தகங்களை அந்த நாட்களில் படித்தேன். சமீபத்தில் நான் படித்த புத்தகம் சு. வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவல், பறம்பு மலைக்கே என்னை அழைத்துச் சென்றது. அதைப் படித்துவிட்டு சு.வெங்கடேசனின் ரசிகையாகவே மாறிவிட்டேன். அவர் எழுதிய ‘காவல் கோட்டம்’ நாவலைப் படிக்க நல்லதொரு பொழுதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
- முகில் சிவராமன், சிவகங்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x