Published : 19 Jan 2020 11:30 AM
Last Updated : 19 Jan 2020 11:30 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 41 : தபால்காரருக்காகக் காத்திருக்கும் கிராமம்

வறண்ட காலங்களில் பிழைப்புக்காகப் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மலையையொட்டிய வனத்தை நோக்கிப் புறப்பட்டுவிடுவார்கள். விறகு, புளியம்பழம், தெளுக்கா (இதை மாவாக்கிக் கூழ் செய்து ஒட்டினால் கப்பென்று ஒட்டிக்கொள்ளும்) சுண்டைக்காய், எலந்தப்பழம், நெல்லிக்காய் என்று பலவகைப் பொருள்களை வனத்தினூடே தேடி பெறக்கிக்கொண்டு வருவார்கள்.

இதற்காக மூன்று மணிக்கே எழுந்து நடக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்போதோ இந்த வேலைகளைச் செய்ய அலுப்பும் சலிப்பும் ஏற்படுவதோடு இது என்ன வாழ்க்கை என்று விரக்தி அடைந்துவிடுகிறோம். அப்போது அப்படிக் கிடையாது. இத்தனை கஷ்டங்களையும் சுமந்துகொண்டு வாழ்ந்தார்கள். அதுவும் உற்சாகத் தோடு வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதற்கு எடுத்துக்காட்டாக ஊரே கூடி வாழ்ந்தது.

நேசத்தைச் சொல்லும் வெற்றிலை

அன்றைய சாப்பாடும் அன்றைய தூக்கமும் மட்டுமே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.

வெற்றிலை, பாக்கு, போயிலை என்பது அவர்களின் வாழ்க்கையில் பிரதானமாக இருந்தது. அதை வாய் நிறைய ஒதுக்கிக் கொண்டுதான் வேலை செய்தார்கள். இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் வெற்றிலையைக் கொடுக்கும்போது கைகளின் நெருக்கத்திலேயே அவர்களின் நேசமும் பாசமும் தெரிந்துவிடும்.

வெற்றிலை கிடைக்காத நேரத்தில் உழவில் புரண்டு கிடைக்கும் செம்மண்ணின் சிறு சிறு கட்டிகளைப் புட்டு வாயில் போட்டுக்கொண்டார்கள். அது செம்மண் நிலம். பூமித்தாயே சிவந்த குங்குமத்தில் மூழ்கியது போல் தரையெங்கும் சிவப்புப் பட்டாடையில் போர்வையைப் போர்த்தியிருக்கும்.

ஆண்களுக்குப் பெண்களைப் போல் காடுகளுக்குச் செல்ல முடியவில்லை. அப்படியே போனாலும் பட்டுப்போன மரங்களை வெட்டி சுமந்துகொண்டு வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். கூரை மேய்வதற்காகத் தரகு அறுத்தார்கள். மூங்கில்களை வெட்டிக்கொண்டு வந்தார்கள். சிலரோ இந்த வேலையெல்லாம் நமக்கு லாயக்குப்படாது என்று செழித்த காடுகளைத் தேடிப் போய் பெரிய பெரிய பண்ணையார்களிடம் வேலைக்கு அமர்ந்து வேலை பார்த்தார்கள். அப்படிப் பார்த்தவர்கள்தாம் கூலியாக வாங்கிய தானியத்தைச் சுமந்துகொண்டு வந்து வீட்டில் கொடுப்பார்கள். அப்படிச் சுமக்க முடியாதவர்கள் பண்ணையார்களிடம் ரூபாயாகக் கேட்டு மடியில் பதுக்கிக்கொண்டு வந்தார்கள்.

நன்றியால் நிறையும் கண்கள்

வேலைச்சுமையால் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாதவர்கள் அடுத்தவரை வைத்து மனைவி, பிள்ளைகள் மற்ற உறவினர் சுகத்தைக் கேட்டு கடுதாசி எழுதிப்போடுவார்கள். ஊருக்குள்ள தபால்காரர் வந்துவிட்டால் யாருக்கும் வேலையில் நாட்டம் செல்லாது.

பால் குடிக்கும் பிள்ளையைக்கூட இடுப்பில் தூக்கிக்கொண்டு மந்தைக்கு ஓடிவந்துவிடுவார்கள். அந்தக் காலத்தில் யாருக்கும் படிக்கத் தெரியாததால் தபால்காரர்தான் படித்துக்காட்ட வேண்டும். அதுவும் சின்னய்யா மருமவன், அத்தை, மாமா என்று குவிந்திருப்பதால் அந்தக் கடிதத்தை நாலைந்து முறை படித்துக்காட்ட வேண்டும். பிறகு அவரே கடிதம் போட்டவருக்குப் பதில் கடிதம் எழுத வேண்டும். இது தெரிந்தே அவர் அரையணா அட்டையைக் கொண்டு வருவார். கடிதம் போட்டவரின் பெண்டாட்டி, பிள்ளைகள் சொன்னதுபோக மற்றவர்களும் ஆளாளுக்கு ஒன்று சொல்வார்கள். எல்லாவற்றுக்கும் தலையாட்டும் தபால்காரர் அவர் இஷ்டப்படிதான் கடிதத்தை எழுதி முடிப்பார். ஆனால், படிக்கும்போது மட்டும் எல்லோரும் சொன்ன விஷயத்தை எல்லாம் எழுதியதுபோல் வாசித்துக்காட்டிவிடுவார். இப்படி அவர் அனுபவத்தில் எத்தனை கிராமங்களைக் கண்டிருப்பார். உடனே ஊர்க்காரர்கள் அவரைக் கையெடுத்துக் கும்பிடாத குறையாகப் புகழ்ந்து தள்ளுவார்கள். அந்தக் கிராம மக்களுக்கு வார்த்தைகளால் நன்றி சொல்லத் தெரியாது. எல்லோரின் கண்களிலும் ஈரம் தளும்பி நிற்கும். அதுதான் அவர்கள் நன்றி சொல்லும் முறை.

அதோடு யாராவது ஒருத்தி சோளச் சோற்றில் உப்புப்போட்டு மோர்விட்டுக் கரைத்து வனத்தில் பறித்த கிளாக்காய் ஊறுகாயோடும் வறுத்த சுண்டவத்தலோடும் வருவாள். அவள் வரும் முன்னே நாட்டுப் பசுவின் மோர் வாசம் தபால்காரரின் பசியைக் கிளறிவிடும். தபாலுக்காக வெகுதொலைவு நடந்து வந்த களைப்பு தீர அதைக் குடித்து முடிப்பார். அவர் வயிறு மட்டுமல்ல, அவரின் நெஞ்சு இடுக்குகளிலும் இந்தக் கிராம மக்களின் அன்பு சீராட்டுப்படும். அதற்குள் ஒருவர் பாக்கோடு நடுக்காம்பைக் கிள்ளிய வெற்றிலையில் சுண்ணாம்பு தடவிக்கொடுக்க, இன்னொருவர் வாசம் மிக்க புகையிலையை வாழை மட்டையிலிருந்து எடுத்துக் கொடுப்பார்.

மனத்தைக் குளிர்வித்த மழை

மழை இல்லாத வாட்டத்தில் இருந்தால்கூட அவர் உட்கார்ந்திருக்கும் பல விழுதுகள் ஊன்றிய அந்த மேடை ஆலமரம், தன் ஊது காற்றால் அனைவரையும் ஆசுவாசப் படுத்தும். வெயில் அனலாய்ப் பறக்க மழையே பெய்யாது என்று ஊர் மக்கள் எல்லோரும் விரக்தியடைந்த ஒரு நாளில் ராத்திரியோடு ராத்திரியாக மழை கொட்டித் தீர்த்தது. ரொம்ப வருசமாகக் கூரையை மேயாததால் வீட்டுக்குள் ஒழுகிய நீரைச் சருவச்சட்டி, சொம்பு, வாளி என்று வைத்துப் பிடித்துப் பிடித்து வெளியே ஊற்றினார்கள். மிச்சம் உள்ள தண்ணீரில் நின்று போன மழைத் தண்ணீர் ஒவ்வொரு சொட்டாக விழுந்து குமிழ் அடித்துத் தன் ஆசையைத் தீர்த்துக்கொண்டது.

அந்தக் கிராமத்து மக்களுக்கு மகிழ்ச்சியென்றால் இந்த மட்டு இல்லை. வெயிலில் தகித்த மக்கள் இப்போது குளிர்ந்து கிடந்தார்கள். சிறுபிள்ளைகள் அம்மணமாகத் தண்ணீரில் புரண்டு விளையாடி மகிழ்ந்தார்கள். பனையோலைகளில் செய்த கப்பல்கள் தண்ணீரில் மிதந்து குப்புறக் கவிழ்ந்தன. சிலர் விதை தேடி அலைந்தார்கள். விவசாயிகள் எந்தப் பிஞ்சையில் என்ன வெள்ளாமை செய்யலாம் என்று கூடிக் கூடிப் பேசினார்கள். தான் இந்தத் தடவை சங்கரன்கோயிலுக்குப் போய் நூறு ரூபாய்க்கு ஒரு சோடி காளை மாடுகளைப் பிடித்து வரப்போவதாக முத்துராக்கன் சொல்ல ஊரே அவரை நிமிர்ந்து பார்த்தது. நூறு ரூபாய்க்கா என்ற எண்ணத்தில் எல்லோருடைய கண்களிலும் ஆச்சரியமும் அதிசயமும் விரிந்துகிடந்தன. சற்று முன்வரை அங்கேயிருந்த மக்களோடு மக்களாய் நின்றிருந்த முத்துராக்கன் இப்போது வானத்துக்கும் பூமிக்குமாய்த் தெரிந்தார். சற்று விலகியிருந்த அவரின் சொந்தங்களெல்லாம் இப்போது அவரை ஒட்டி நின்றார்கள்.

அருவக்கொடியின் ஆசை

மந்தையில் கூடிக் கிடக்கும் தன் ஊர்க்காரர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அருவக்கொடி, காரியமே கண்ணாக வனத்துக்குப் புறப்பட்டாள். அவள் தோளில் ஒரு சாக்குப்பையில் தொட்டி வேட்டியும் அதைக் கட்ட வேண்டிய கயிறுமிருக்க இடுப்பில் அவளின் குலசாமியின் பெயரை ஆசையாய் வைத்த அய்யனார் ஒரு வயதுக் குழந்தையாக இருந்தான். நேற்று பெய்த மழையில் இன்று நிலமெல்லாம் புளியம்பழம் உதிர்ந்துகிடக்கும் வனத்துக்குள் நுழைந்த உடனே அவள் நெஞ்சத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டது. அவள் நினைத்தது போலவே நேற்று மழைக்காக வீசிய காற்றில் புளியம்பழங்களும் நெல்லிக்காய்களும் நிலம் தூந்துக்கிடந்தன. வனத்தின் எதிரில் பெறக்கினால் யாராவது பார்த்துவிடுவார்கள். பிறகு தனக்குப் போட்டியாகப் பெறக்க வந்துவிடுவார்கள். அதுமட்டுமில்லாமல், மழை பெய்திருப்பதால் ‘ரேஞ்சர் வாச்சர்’ வரக்கூடுமென்றும் எண்ணிய அருவக்கொடி வனத்துக்குள்ளே சற்று தூரம் போனாள். அவள் காலில் புளியம்பழங்களும் நெல்லிக்காய்களும் மிதிபட்டன. தோளில் கிடந்த பிள்ளையைத் தூக்கிப் பால்கொடுத்தாள். பால் சிந்திய வாயோடு குழந்தை அவள் முகம் பார்த்துச் சிரித்தது. பிள்ளையின் முகம் பார்த்த அவளுக்கு அதனோடு கொஞ்சிக் குலவ வேண்டுமென்று இருந்தது. ஆனால், இப்போது கொஞ்ச முடியாது என்று நினைத்தவள் கப்பும் கிளையுமாயிருந்த இலுப்பை மரத்தில் கயிற்றை வீசித் தொட்டிலைக் கட்டினாள்.

(நிலா உதிக்கும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x