Published : 19 Jan 2020 11:28 AM
Last Updated : 19 Jan 2020 11:28 AM

என் பாதையில்: இதிலுமா பாரபட்சம்?

இதிலுமா பாரபட்சம்?

டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் பணிக்காக முதல் நாளே தங்குவதற்குத் தேவையான பொருட்களை எடுத்துவைத்து வீட்டிலும் இரண்டு நாட்களுக்குத் தேவையானதைச் செய்து வைத்துவிட்டுத்தான் பெண்கள் கிளம்ப வேண்டியுள்ளது. நானும் இவற்றையெல்லாம் முடித்துவிட்டு டிசம்பர் 26-ம் தேதி அவசர அவசரமாகக் கிளம்பி ஆர்டரை வாங்கப் போனேன். “உங்களுக்கு ரிசர்வ் தொகுதி” என்று சொன்னதும் கையெழுத்துப்போட்டுவிட்டு அவர்கள் சொன்ன இடத்தில் வந்து அமர்ந்தேன். அப்போது தொடங்கி மறுநாள் காலை ஒன்பது மணிவரை தேர்தல் பணிக்காக அலுவலர்களை அதிகாரத் தோரணையில் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். அடிப்படைத் தேவைகளுக்கான ஏற்பாட்டைக்கூடச் செய்து கொடுக்கவில்லை. குடிநீர் இல்லை. தேடி அலைந்துதான் சாப்பிட வேண்டியதாயிற்று. கொடுக்கப்பட்ட இடத்தை நாங்களே சுத்தம் செய்துவிட்டுத் தங்கினோம். பக்கத்தில் வீடு இருந்தவர்கள் காலையில் வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு வந்தார்கள். என்னைப் போலத் தொலைவில் இருந்து வந்தவர்களுக்குக் குளிக்க எந்த ஏற்பாடும் செய்து கொடுக்காததால் முகத்தை மட்டும் கழுவிவிட்டு அந்த அறையிலேயே அமர்ந்து இருந்தோம். இதற்கு முன்பும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். இதுபோன்ற ஏதாவதொரு ஊருக்குப் போனால்கூடப் குழுவாகப் பணி செய்யும்போது சாப்பாடு கிடைக்காத நிலையிலும் புது இடம், புதிய நண்பர்கள், கிராமத்து மக்களின் உபசரிப்பு என்று கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஆனால், காத்திருப்புத் தேர்தல் பணி மிகக் கொடுமையாக இருந்தது. 27-ம் தேதி மாலை ஆறு மணி ஆகியும் தேர்தல் பணிக்கான ஊதியம் கொடுக்கப்படவில்லை. “பணம் இல்லை. ஞாயிற்றுக்கிழமை வந்து வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார்கள். பின்னர் போராடி வாங்கி வந்தோம். தேர்தலில் வாக்களிக்க மட்டுமல்ல; தேர்தல் பணியில் இருக்கிறவர்களையும் எந்தத் தொகுதி என்பதைப் பார்த்துத்தான் நடத்துவார்கள் என்ற கசப்பான உண்மை அப்போதுதான் புரிந்தது.

- ராஜ புஷ்பா, கும்பகோணம்.

குடும்பங்களை இணைக்கும் ஊழியர்கள்

சென்னை மட்டுமல்லாது தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் டவுன்ஷிப் வாழ்க்கை முறை அறிமுகமாகிவிட்டது. அதன் அடியொற்றி நாங்கள் வசித்துவந்த வீட்டிலிருந்து சேலத்தில் உள்ள மோகன் நகர் ஸ்டீல் பிளான்ட் டவுன்ஷிப்புக்குக் குடியேறினோம். புதிய வீட்டில் குடியேறியதால் அதுவரை பயன்படுத்திவந்த பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பை ஃபைபர் கேபிள் இணைப்பாக மாற்றிக்கொண்டோம். இதனால் எங்களுடைய தொலைபேசி எண்ணும் மாறிவிட்டது. தொலைபேசி எண் மாறியதை அனைவரிடமும் தெரிவித்துவிட்டோம். என் மகள் வெளிநாட்டில் வசிப்பதால் அவளுக்கு இது குறித்த தகவலை முன்கூட்டியே தெரிவித்தோம். ஆனால், அமெரிக்காவிலிருந்து அவள் எங்களைத் தொடர்புகொண்டபோது ‘தொலைபேசி எண் தற்போது உபயோகத்தில் இல்லை’ என்ற அறிவிப்பு வருவதாகச் சொன்னாள். நாங்கள் உடனே அருகிலிருந்த பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இது குறித்துப் புகார் அளித்தோம். நாங்கள் புகார் தெரிவித்த அன்று மதியமே பி.எஸ்.என்.எல். ஊழியர் ஒருவர் எங்களைத் தொடர்புகொண்டு எந்த நாட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வருவதில்லை எனக் கேட்டு பிற விவரங்களையும் கேட்டுக்கொண்டார். இரண்டு மணி நேரம் கழித்து, “தொலைபேசி தொடர்பு சரியாகிவிட்டது. இப்போது பேசிப் பாருங்கள்” என்றார். அமெரிக்காவில் அப்போது இரவு நேரம் என்பதால் மகளின் வாட்ஸ் அப் நம்பருக்குத் தகவல் மட்டும் அனுப்பியிருந்தேன். வெளிநாட்டு இணைப்பு கிடைத்துவிட்டதா என்ற தகவலைத் தெரிவிக்க பி.எஸ்.என்.எல். அதிகாரி அவரின் தொலைபேசி எண்ணை அளித்திருந்தார். கைபேசியில் நீண்டநேரம் பேசுவது ஆபத்து என்ற காரணத்தால்தான் லேண்ட் லைன் போனைச் சரிசெய்ய இவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டோம்.

மறுநாள் காலை ஆறு மணிக்கு என் மகளின் தொலைபேசி அழைப்பு வந்தது. தொடர்பு கிடைத்த மகிழ்ச்சியில் பல நாட்கள் மகளுடன் பேச முடியாத ஏக்கத்தைப் பேசித் தீர்த்தோம். பி.எஸ்.என்.எல். அதிகாரி கொடுத்திருந்த தொலைபேசி எண்னுக்கு அழைத்து, “பி.எஸ்.என்.எல். இந்தியாவை மட்டுமல்ல, குடும்பங்களையும் இணைக்கிறது” எனக் கூறி அவருக்கு நன்றி தெரிவித்தேன். பொதுவாக அரசு ஊழியர்கள் குறித்த தவறான கருத்தே சமூகத்தில் உள்ளது. ஆனால், என் அனுபவம் வேறு வகையில் அமைந்தது. வாடிக்கையாளர் ஒருவரின் பிரச்சினைக்காக பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் எத்தனை பேர் உழைத்திருப்பார்கள் என்பதை எண்ணி வியந்தேன். பி.எஸ்.என்.எல். நிறுவனப் பங்குகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது குறித்தும் ஊழியர்களை வேலையிலிருந்து வெளியேற்றுவது தொடர்பான செய்தியையும் அண்மையில் நாளிதழ்கள் மூலம் படித்தேன். அந்தச் செய்திகள் கவலையை ஏற்படுத்தின. அரசு நிறுவனம் நம் நிறுவனமும்தானே. மக்களுக்காகச் சேவை புரியும் பொதுத்துறை நிறுவனங்களை மூடும் அரசின் நடவடிக்கை மாற வேண்டும்.

- பானு பெரியதம்பி, சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x