Published : 19 Jan 2020 11:25 AM
Last Updated : 19 Jan 2020 11:25 AM

போகிற போக்கில்: அமைதி தரும் கோடுகள்

அன்பு

வீட்டிலும் வெளியிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் அவற்றால் ஏற்படும் மன அழுத்தமும் இன்று இயல்பானதாகி விட்டன. மன அழுத்தத்திலிருந்து மீளும் வழிதெரியாமல் பெண்கள் பலர் தவிக்க, சிந்து அமிர்தவர்ஷினியோ ஓவியத்தின் மூலம் தன்னை உற்சாகமாக வைத்துக்கொள்கிறார். கற்க எளிதாக இருப்பதுடன் மனத்தை ஆற்றுப்படுத்தும் வல்லமை கொண்ட ஜென்டாங்கிள் ஓவியங்களே இவரது மன அமைதிப்படுத்துகின்றன.

தூத்துக்குடியைச் சேர்ந்த சிந்து, சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தற்போது ஐ.டி. துறையில் பணிபுரியும் இவர், தொடக்கத்தில் வரிவடிவங்களை வரையக் கற்றுக்கொண்டார். “அலுவலகத்தில் ஒருநாள் இந்த வரிவடிவ ஓவியத்தை வரைந்துகொண்டிருந்தபோது உனக்கு ஜென்டாங்கிள் ஓவியத்தைப் பற்றித் தெரியுமா என்று என் உயர் அதிகாரி கேட்டார். அப்போதுதான் நான் வரைந்ததுதான் ஜென்டாங்கிள் என்பதே எனக்குத் தெரியும். பின்னர் இந்த ஓவிய முறை பற்றிய வீடியோக்களைப் பார்த்தேன். ஜென்டாங்கிள் மீதான ஈடுபாடு அதிகரித்தது” என்கிறார் அவர்.

எண்ணத்தைச் சொல்லும் வண்ணம்

தன்னுடைய ஓவியங்களுக்கு நண்பர்களிடமிருந்து கிடைத்த பாராட்டு சிந்துவை ஊக்குவித்துள்ளது. இதனையடுத்து வட்டத்தைச் சுற்றி வரையப்படும் ‘மண்டலா’ ஓவியக் கலையையும் அவர் கற்றுக்கொண்டுள்ளார். ஜென்டாங்கிள், மண்டலா இந்த இரு ஓவிய முறைகளை ஒன்றிணைத்து சிந்து படைத்துள்ள ஓவியங்கள் மெய்மறக்க வைக்கின்றன. குறிப்பாக, ஒற்றைக் கண்ணுடன் உள்ள ஓவியம், பெண்கள் எப்போதும் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்குவதாக உள்ளது. அதேபோல், ஜென்டாங்கிள் ஓவிய முறையில் கறுப்பு வெள்ளையில் இவர் வரைந்த நான்கு பெண்கள் உள்ள ஓவியம் பெண்களுக்குத் தாய்மை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான் என்பதையும் அவர்களுக்கும் பாட்டு கேட்கவும், பாடவும், எதுவும் செய்யாமல் இருக்கவும், அழகாக அலங்கரித்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கவும் ஆசையுண்டு என்பதை வெளிப்படுத்துகிறது. “இந்தச் சமூகம் திணிக்கும் அடக்குமுறைகளிலிருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்பதே என் ஓவியத்தின் நோக்கம். இந்த வகை ஓவியம் நாம் நினைப்பதைப் பிரதிபலிக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக, மண்டலா ஓவியத்தில் ‘பிந்து’ என அழைக்கப்படும் தொடக்கப் புள்ளியை மட்டும் வைத்தால்போதும். பின்னர் நமக்குத் தோன்றுபவை ஓவியங்களாக மாறிவிடும்” என்கிறார் சிந்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x