Published : 19 Jan 2020 11:12 AM
Last Updated : 19 Jan 2020 11:12 AM

பெண்கள் 360: வரலாறு படைத்த தான்யா

தொகுப்பு: ரேணுகா

தேவையில்லை அரச பதவி

இளவரசர் ஹாரியும் அவருடைய மனைவி மேகனும் இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இவர்களுடைய இந்தத் திடீர் அறிவிப்பு இங்கிலாந்து அரச குடும்பத்தில் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் இரண்டாம் மகனான ஹாரி, 2018-ல் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மேகன் மெர்கலைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இதற்கான அனுமதியை இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்திடம் அவர் முறைப்படி பெற்றிருந்தார். மேகன் மெர்கல் ஆப்பிரிக்க அமெரிக்கர், விவாகரத்தானவர், இளவரசர் ஹாரியைவிட மூன்று வயது பெரியவர். இதனால் அவர்கள் இருவரும் கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டனர். ஆனால், அவற்றையெல்லாம் உறுதியோடு கடந்தார்கள். பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது பொதுமக்களுடன் கைகுலுக்கக் கூடாது, அவர்களைக் கட்டிபிடிக்கக் கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் இங்கிலாந்து அரச குடும்ப உறுப்பினர்களுக்கு உள்ளன. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளைப் பற்றியெல்லாம் மேகன், ஹாரி இருவரும் கவலைப்படவில்லை. அதற்காக அவர்கள் அரச குடும்பத்தின் கண்டனங்களைச் சந்திக்க நேரிட்டது. ஆனால், அதற்குப் பதிலளிக்கும் விதமாக, “நான் அமெரிக்கர். கட்டிப்பிடிப்பதுதான் எங்கள் கலாச்சாரம்” என்றார் மேகன். மேலும், ஹாரி, மேகன் இருவரும் எங்கே சென்றாலும் ஊடகங்கள் அவர்களைத் துரத்துவதும் தவறான சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிடுவதுமாக இருந்தன. “ஊடகங்களின் இப்படியான நெருக்குதலால்தான் என் அம்மாவை இழந்தேன். இப்போது அதேநிலை என் மனைவிக்கு வருவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அரச குடும்பத்தில் பிறந்ததற்காக நான் நேசிக்கும் எத்தனை பேரை இழக்க வேண்டுமோ?” என்று சொன்னார் ஹாரி. அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நாங்கள் சுதந்திரமாகச் செயல்பட விரும்புகிறோம். அதேநேரம் இங்கிலாந்து ராணிக்கும் அரசுக்கும் காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளுக்கும் செய்ய வேண்டிய பணியில் நாங்கள் துணையாக இருப்போம். இங்கிலாந்து, வட அமெரிக்காவில் எங்களுடைய வாழ்க்கையை நடத்த திட்டமிட்டுள்ளோம். எங்கள் மகன் ஆர்ச்சி மவுன்ட்பேட்டன் விண்ட்சர் சுதந்திரமான சமநிலையான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே எங்கள் ஆசை” எனக் குறிப்பிட்டுள்ளார். இளவரசர் ஹாரியின் இந்த முடிவுக்கு அரசி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.

வரலாறு படைத்த தான்யா

இந்திய ராணுவ அணிவகுப்பு வரலாற்றில் முதன்முறையாக ஆண்கள் படைப்பிரிவுக்குத் தலைமையேற்று வழிநடத்திய முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் கேப்டன் தான்யா ஷெர்கில்.

தலைநகர் டெல்லியில் இந்திய ராணுவத்தின் 72-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் ராணுவத் தகவல் தொடர்புத்துறையில் கேப்டனாகப் பணியாற்றும் தான்யா ஷெர்கில், ஆண் ராணுவ வீரர்களின் அணிவகுப்புப் பிரிவுக்குத் தலைமையேற்று வழிநடத்தினார். கரியப்பா ராணுவ மைதானத்தில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் தான்யா கையில் வாளுடன் முன்னே செல்ல, வீரர்கள் பின்தொடர்ந்தனர். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பி.டெக். முடித்தவர் தான்யா. இவருடைய தந்தை, தாத்தா இருவரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளனர். ராணுவக் குடும்பத்தில் பிறந்த தான்யாவுக்குச் சிறுவயது முதலே ராணுவத்தில் பணியாற்ற விருப்பம். 2017-ல் சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்றவர் தற்போது ஜெபல்பூர் ராணுவத் தகவல் தொழில்நுட்ப மையத்தில் பணியாற்றிவருகிறார். வரும் குடியரசு தினத்தன்றும் ராணுவ அணிவகுப்புக்கு இவர் தலைமையேற்கவிருக்கிறார்.

அமில வீச்சு விழிப்புணர்வு

அமில விற்பனை குறித்துப் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்தாலும் சிறு கடைகளில்கூட அமிலம் விற்கப்படுகிறது. இது குறித்து நடிகை தீபிகா படுகோன் தோன்றும் விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சட்டரீதியான போராட்டத்தை வெளிப்படுத்தும் ‘சப்பாக்’ இந்திப் படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்திருந்தார். இப்படம் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமில வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தீபிகா படுகோன் சமீபத்தில் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளார். அதில் படக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடிகர்கள் சாதாரணமாகக் கடைகளுக்குச் சென்று அமிலம் கேட்கிறார்கள். அதில் ஒருவர் மது அருந்திவிட்டு தள்ளாடியபடியே ஒரு கடைக்குச் சென்று அமிலத்தைக் கேட்க, கடைக்காராரும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அந்த நபருக்கு அமிலத்தை விற்பனை செய்கிறார். ஒரே ஒரு கடைக்காரார் மட்டும் அமிலத்தைக் கொடுப்பதற்கு முன் அடையாள அட்டையைக் கேட்கிறார். மொத்தம் 24 அமில பாட்டில்கள் வாங்கப்படுகின்றன. இந்தக் காணொலியின் முடிவில் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள், “18 வயதுக்குட்பட்டவர்களுக்கு அமிலத்தை விற்கக் கூடாது. அமிலம் வாங்குபவர்களின் அடையாள அட்டையை விற்பனை செய்பவர் பதிவுசெய்ய வேண்டும், அனுமதி பெற்ற விற்பனையாளர்கள் மட்டும் அமிலத்தை விற்க வேண்டும். அமிலம் வாங்கியவர் குறித்துக் காவல் துறையினரிடம் கடைக்காரர் தகவல் அளிக்க வேண்டும்” என்ற அரசின் வழிகாட்டுதலை வலியுறுத்துகிறார்கள். பெண்களின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் அமிலத்தை வாங்காதீர், விற்காதீர் என்ற வாசகத்துடன் இந்தக் காணொலி முடிவடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x