

யுகன்
தெருக்கூத்து நாடக வடிவமான கர்ணமோட்சத்தின் கூறுகளை விலாவாரியாகக் காட்டியும், மாற்றுப் பாலின அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு திருநங்கைக்கு நடத்தப்படும் பாலூற்றும் சடங்கை தத்ரூபமாக இடம்பெறச் செய்தும் ‘காபி கஃபே’ திரைப்படம் உருவாக்கப் பட்டிருக்கிறது. இதன் அறிமுகக் காட்சி அண்மையில் திரையிடப்பட்டது.
காபி கஃபே நடத்திக்கொண்டே மரபையும் நவீனத்தையும் ஒரே புள்ளியில் இணைக்கும் நாடகத்தை மேடையில் நிகழ்த்தும் வேட்கையோடிருக்கும் விநோதினி, அந்தக் கடையில் துப்புரவாளராகப் பணியிலிருக்கும் திருநங்கை காவேரி, சுயாதீனத் திரைப்பட இயக்குநர் செந்தில், இருக்கும் கொஞ்ச நாளில் நினைத்தபடி வாழ்வோம் என்னும் மனநிலையில் வாழும் பூஜா, இந்த நால்வரைச் சுற்றிப் பின்னப்பட்ட கதைதான் ‘காபி கஃபே’ திரைப்படம்.
இந்தத் திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அருண்குமார் செந்தில். ஏறக்குறைய 40க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இந்தப் படத்தில் நடித்திருந்தாலும், கதையின் முக்கியமான கண்ணியாகப் படம் முழுவதும் பயணித்திருக்கிறார் காவேரியாக நடித்திருக்கும் சுதா.
திருநங்கைகளைத் தள்ளிவைத்துப் பார்க்காமல் சமூகத்தில் அவர்களும் ஓர் அங்கம்தான் என்பதை எந்தவிதமான பிரச்சார நெடியும் இல்லாமல் காட்டியிருப்பதில் இயக்குநர் கவனம் ஈர்க்கிறார். அதுதான் இந்தத் திரைப்படத்தின் பலமும்கூட!
சமூகரீதியான ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அதிலிருந்து ஓர் உயிரை காப்பாற்றும் பணியில் இந்த நால்வரும் ஈடுபடுகின்றனர். அவர்களோடு இந்த முக்கியப் பாத்திரங்களுக்குச் சிலரின் உவியும் கிடைக்கிறது. அந்த உயிர் காப்பாற்றப்பட்டதா என்பதைப் பரபரப்பான காட்சிகளில் விவரிக்கிறது படத்தின் கிளைமேக்ஸ். திரைப்படத்தின் முதல் பாதியில் சற்று விறுவிறுப்பைக் கூட்டினால் வெகுஜன ரசனைக்கும் உண்மைக்கு மிகவும் நெருக்கமாகவும் இந்தப் படம் இருந்திருக்கும்.