

கே.சுந்தரராமன்
மனிதர்கள் தங்கள் எண்ணங்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள ஒரு தொடர்பு முறையாக நடனம் உள்ளது. நம் உடலில் ஒளிந்திருக்கும் ஆன்மாவின் மொழியே நடனம் என்றும் கூறுவர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த பூர்ணாஸ்ரீ ஸ்ரீவத்சன், 1980-ம் ஆண்டில் நடைபெற்ற தனது பரதநாட்டிய அரங்கேற்றம் முதல், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் 500-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். 1996-98 ஆண்டுகளில் கானா நாட்டில் (Republic of Ghana) இந்தியப் பண்பாட்டுத் தூதராக இருந்துள்ளார்.
கோனார்க் சர்வதேச நடனவிழாவிலும் சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இந்தியாவின் 4 முதன்மையான தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், தேசிய நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். மும்பைப் பண்பாட்டு மையமான ‘சர் சிங்கார் சன்சத்’தின் ‘கல் கே கலாகார்’ நிகழ்ச்சியில் ‘சிங்கார் மணி’ விருதைப் பெற்றுள்ளார்.
தற்போது சிங்கப்பூரில் குழங்தைகளுக்குப் பரதநாட்டியப் பயிற்சி அளிக்கும் இவர், குரு டாக்டர் உமா ஆனந்துடைய மாணவி இவருடைய அபிநயங்களில் கே.என்.டி. (கே.என்.தண்டாயுதபாணி) முத்திரையைக் காணலாம்.
இந்தியாவில் மட்டுமின்றி, நைஜீரியா, பிரான்ஸ், கானா, போட்ஸ்வானா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். சென்னை மார்கழி இசைவிழாவின் ஒரு பகுதியாக கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் நாரத கான சபாவில் சமீபத்தில் இவரது பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது .
‘ப்ரணவாகாரம்’ என்ற ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் ஆரபி ராகப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. விநாயகப் பெருமானின் நடனத்தை விளக்கும் இந்தப் பாடலுக்குச் சிறந்த அபிநயங்களுடன் நடனமாடினார் பூர்ணாஸ்ரீ.
இதைத் தொடர்ந்து தில்லை நடராஜனின் நடனத்தைச் சிறப்பிக்கும்விதமாக ‘ஆனந்த நடமிடும் பாதம்’ என்ற கேதார கௌளை ராகத்தில் அமைந்த பாபநாசம் சிவனின் பாடலுக்கு நடனமாடினார். முன்னதாக ‘உலகம் யாவையும் சிவன் அனுக்கிரஹம்’ என்ற கம்பர் பாடலுக்கு விருத்தம் ஹம்ஸானந்தி ராகத்தில் அபிநயம் பிடித்தார். கம்பர் தனது ராமாயணத்தை அரங்கேற்றம் செய்வதற்கு முன்பாக சிவனை வழிபட்டு இந்தப் பாடல் வரிகளைப் பாடியதாகக் கூறுவர்.
நடன நிகழ்ச்சியில் முதன்மையானது வர்ணம். இதற்கு மதுரை ஆர்.முரளிதரனின் சிம்மேந்திர மத்யம ராக வர்ணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் பூர்ணாஸ்ரீ. ‘மாயே மனம் கனிந்து அருள் புரிவாயே மதுரை வளர் மீனாட்சி’ என்று தொடங்கும் வர்ணம் அன்னையின் பல ரூபங்களை விளக்குகிறது. இதில் தண்டாயுதபாணி பிள்ளையின் ஜதியையும் சேர்த்து நிகழ்ச்சியை வழங்கினார். கதம்ப வனத்தில் உதித்தவள், மலையத்வஜன் மகள், நீயே அலைமகள், நீயே கலைமகள், ஆனந்த பைரவியே (மீனாட்சி, காமாட்சி, காந்திமதி) தினம் பாவ ராக தாளம் சேர்ந்து நடமிடும் மகிஷாசுரன் வதம் என்ற வரிகளுக்கு பூர்ணாஸ்ரீ தனது அபிநயங்கள் மூலம் அன்னையின் பல ரூபங்களையும் நவரசங்களையும் வெளிக்கொணர்ந்தார். சிந்தை நிறைந்தவளே, விந்தை புரிந்தவளே, முந்தை வினைகளைக் களைந்தருள்வாய் என்று அன்னையை வேண்டி வர்ணத்தை நிறைவுசெய்தார்.
இதைத் தொடர்ந்து, ‘ஹரி தும ஹரோ ஜன’ என்ற தர்பாரி கானடா ராகத்தில் அமைந்த மீரா பஜன். இதில் திரௌபதிக்கு கண்ணன் வஸ்திரம் அளித்தல், இரணியன் வதம், கஜேந்திர மோட்சம் ஆகிய நிகழ்ச்சிகளை கண்முன்னே நிறுத்தினார் பூர்ணாஸ்ரீ.
‘சுந்தர மோகன ரூபம்’ என்று, மோகன கல்யாணி ராகத்தில் அமைந்த லால்குடி ஜெயராமனின் தில்லானா மூலம் கந்தனைப் புகழ்ந்து, தனது நடன நிகழ்ச்சியை நிறைவுசெய்தார் பூர்ணாஸ்ரீ.
தனது நிகழ்ச்சிகள், பயிற்சி வகுப்புகள் மூலம் இந்தியப் பண்பாட்டையும் தன் குருவின் பாரம்பரியத்தையும் பூர்ணாஸ்ரீ, காத்துவருகிறார்.