

தொகுப்பு: ரேணுகா
அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆயிஷி
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர் பேரவைத் தலைவர் ஆயிஷி கோஷ் மீதான தாக்குதல் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக விடுதிக் கட்டண உயர்வையும், தேர்வுக் கட்டண உயர்வையும் திரும்பப்பெறக் கோரி பலகட்டப் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இதற்குப் பல்கலைகழக பேராசிரியர் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழக வளாகத்தில் அமைதி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள்மீது முகமூடி அணிந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் தாக்குதலில் ஈடுபட்டனர். இரும்புக் கம்பிகள், கிரிக்கெட் மட்டை, லத்திகள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு மாணவ, மாணவியர் விடுதிகளில் கண்மூடித்தனமான வன்முறையில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திவந்த மாணவர் பேரவைத் தலைவர் ஆயிஷி கோஷை இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதில் அவருக்குப் பலமான காயம் ஏற்பட்டதுடன் இடக்கையும் உடைக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் பேராசிரியர் சுசாரிதா சென் தலையிலும் தாக்கினார்கள். பலத்த காயத்துடன் நூற்றுக்கணக்கான மாணவர்களும், பேராசிரியர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு தலையில் பதினாறு தையல்கள் போடப்பட்ட நிலையில் மீண்டும் போராட்டக் களத்துக்குள் நுழைந்தார் மாணவி ஆயிஷி கோஷ். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பல்கலைக்கழகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கோழைத்தனமான முறையில் முகமூடி அணிந்த நபர்கள் தாக்குதல் நடத்தினார். என்னைப் போல் இங்கு பல மாணவர்களுக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தில் சில மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர் என அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் முன்கூட்டியே தகவல் அனுப்பினேன். ஆனால், காவல் துறையினர் வன்முறை முடியும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்கள், பேராசிரியர்கள்மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதைத் தற்போதுவரை காவல் துறையினர் கண்டுபிடிக்கவில்லை. பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஸ் குமார் எங்களை வந்து சந்திக்கவில்லை. ஜேஎன்யூ வரலாற்றில் இதுபோன்ற வன்முறை நடந்ததில்லை. பல்கலைக்கழக நிர்வாகம், காவல் துறையினருக்கு தெரிந்தே இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. மாணவர் மீது நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறையைக் கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை ஒரு அங்குலம் கூட எங்கள் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம். மாணவர்களைப் பாதிக்கும் கட்டண உயர்வை திரும்பப்பெறக் கோரியும், வன்முறைக்குப் பொறுப்பேற்று பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜினாமா செய்யும் வரையிலும் எங்களுடைய போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்தார். ஜேஎன்யூவில் நடந்த வன்முறையைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதியில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், நடிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறையில் பாதிக்கப்பட்ட மாணவி ஆயிஷி கோஷைப் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன், தமிழக எம்.பி. கனிமொழி ஆகியோர் நேரில் சந்தித்து போரட்டத்துக்குத் தங்களுடைய ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.
நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
மருத்துவ மாணவி நிர்பயாவை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து கொன்ற குற்றவாளிகள் நால்வருக்கும் வரும் 22-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பேருந்தில் கூட்டு வல்லுறவு செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டார். மாணவியை வல்லுறவு செய்த ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங், இளம் குற்றவாளி என ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ராம்சிங் திஹார் சிறையில் தற்கொலை கொண்டார். இளம் குற்றவாளிக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற நால்வருக்கும் 2013-ம் ஆண்டு டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்து. இந்நிலையில் இந்தத் தண்டணையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.
மருத்துவரின் அலட்சியம்
மருத்துவத்துறையின் வளர்ச்சி பொது மக்களிடம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள நிலையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த நிகழ்வு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரியா என்பவர் மகப்பேற்றுக்காக கடந்த டிசம்பர் 27 அன்று சேர்க்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் வீடு திரும்பிய பிரியாவுக்கு வயிற்றில் வீக்கமும் கடும் வலியும் ஏற்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் சுயநினைவை இழந்த பிரியாவைக் கணவர் ராஜ்குமார் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய வயிற்றில் துணி இருந்ததைக் கண்டறிந்துள்ளார். இதனால் நோய்த் தொற்று ஏற்பட்டு பிரியா உயிரிழந்துள்ளார். இதை அறிந்த பிரியாவின் குடும்பத்தினர், கலர்குப்பம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணையம் மாவட்ட சுகாதார இயக்குநருக்கும், அரசு மருத்துவமனைக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஸ்வீட்டி குமாரிக்கு சர்வதேச அங்கீகாரம்
இந்திய மகளிர் ரக்பி அணி வீராங்கனை ஸ்வீட்டி குமாரி 2019-ம் ஆண்டுக்கான சர்வதேச இளம் ரக்பி வீராங்கனையாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் ஓராண்டுக்கு முன்புதான் மகளிர் ரக்பி அணி உருவாக்கப்பட்டது. அவர்களுடைய கடுமையான பயிற்சியின் காரணமாக 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச ரக்பி போட்டிக்கான டிவிஷன் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதில் பலம் பொருந்திய சிங்கப்பூர் மகளிர் ரக்பி அணியை இந்திய மகளிர் ரக்பி அணியினர் வென்றனர். இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை ஸ்வீட்டி குமாரி. தற்போது கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம் ஸ்வீட்டிக்கு மட்டுமல்லாமல் இந்திய ரக்பி வீராங்கனைகள் அனைவருக்கும் உற்சாகத்தைத் தந்துள்ளது.
குழந்தைகளுக்காகக் கூந்தலை விற்ற தாய்
சேலம் வீமனூர் பகுதியைச் சேர்ந்த பிரேமா, வறுமையால் தன்னுடைய கூந்தலை விற்று குழந்தைகளின் பசியாற்றியுள்ளார்.
பிரேமாவின் கணவர் செல்வம் செங்கல் சூளை நடந்திவந்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஏழு மாதங்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்துகொண்டார். இதனால், பிரேமா செங்கல் சூளையில் கூலி வேலைசெய்து தன் மூன்று குழந்தைகளைக் காப்பாற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் குழந்தைகளுக்கு உணவுகூட வழங்க முடியாத சூழ்நிலைக்கு பிரேமா தள்ளப்பட்டுள்ளார். அப்போது சவுரி முடி வாங்குபவர்கள் வருவதை அறிந்த அவர் தன்னுடைய கூந்தலை விற்று, குழந்தைகளுக்கு தேவையான உணவைச் சமைத்துக் கொடுத்துள்ளார். பிரேமாவுக்கு உதவிய நண்பர் ஒருவர் இந்த நிகழ்வு குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்தார். இதையறிந்த மாவட்ட நிர்வகம் பிரேமாவுக்கு கைம்பெண் உதவித் தொகை வழங்க உத்ததரவிட்டுள்ளது.