நட்சத்திர நிழல்கள் 40- பானுமதிக்கு வழிவிட்ட ஆச்சாரம்

நட்சத்திர நிழல்கள் 40- பானுமதிக்கு வழிவிட்ட ஆச்சாரம்
Updated on
3 min read

சமூகத்தில் பெண்கள் இன்னும் மழைமறைவுப் பிரதேசத்தில்தான் வாழ்கிறார்கள். அவர்களாகத் திமிறி எழுந்து வந்தால்தான் உண்டு. அவர்களை இருட்டுக்குள் தள்ள ஏராளமான ஒடுக்குமுறைகள் சாதி, சமய ஒழுங்குமுறைகள் என்னும் பெயரில் கடைப்பிடிக்கப்படுகின்றன. தங்களை உயர்ந்தவர் களாகக் கருதி வாழும் சமூகத்திலும் இதுதான் நிலைமை.

சமூகம் சமநிலையை நோக்கி நகரும்போது, ஏற்றத்தாழ்வுகளை எதன் பொருட்டு வலியுறுத்தினாலும் அதை மீறிச் செல்பவர்கள் பெண்களாகவே இருக்கி றார்கள். அதைப் புரட்சி என்று சொன்னாலும் சரி, புதுமை என்று சொன்னாலும் சரி. அநீதி கண்டு குமுறும் பெண்களின் கோபம் அடங்கிக் கிடக்காது. தேவைப்பட்டால் அவர்களது விரல்கள் வழியே வந்துவிழும் கோலத்தில்கூடத் தங்களது கோபத்தை வெளிப் படுத்திவிடுவார்கள். பானுமதிக்கும் அப்படியொரு கோபம் வந்தது. அவள் ஏன் கோபம் கொண்டாள்? கல்யாணத்தன்றே, அவளைத் தொடக் கூடாது என அவள் தகப்பன் அவளுடைய கணவனிடம் சத்தியம் வாங்கினால் அவளுக்குக் கோபம் வராதா என்ன?

எது தீட்டு?

பானுமதி மிகவும் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவள். அவளுடைய தந்தை ஸ்ரீனிவாச சாஸ்திரி மனுதர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்பவர். அவர் ஒரு பரோபகாரி. தீ விபத்தில் வீடிழந்த ஏழைகள் மீண்டும் குடிசைகளைக் கட்டிக்கொள்ள உதவுகிறார். ஆனால், அவரது தோளிலிருந்து தவறி விழுந்த மேலாடையைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கையால் எடுத்துக்கொடுத்தால் அதைப் பெற்றுக்கொள்ள அவருடைய மனம் அவரை அனுமதிக் காது. அதைத் தீட்டு எனக் கருதி அதை அவனுக்கே வழங்கிவிட்டுச் சென்றுவிடுகிறார். கணவனை எதிர்த்து பானுமதியின் தாயிடமிருந்து ஒரு சொல்கூட வெளிப்படாது, கணவனிடம் அவ்வளவு பவ்யம். இந்தக் குடும்பத்தில் பிறந்த பானுமதி நாவிதர் சமூகத்தில் பிறந்த கோபால்சாமியைக் காதலித்துவிடுகிறாள். அவனைக் கல்யாணமும் செய்துகொள்கிறாள்.

முதலிலேயே அவன் நாவிதன் என்பது தெரிந்தி ருந்தால் பானுமதி அவனைக் காதலித்திருப்பாளா என்பது சந்தேகம்தான். ஏனெனில், கோபாலை முதலில் அவள் சந்தித்தபோது அவன் ஒரு பிராமண இளைஞனாகக் காட்சியளித்தான். தாயின் கண் அறுவை சிகிச்சைக்கான பணத்தைச் சம்பாதிக்க நகரத்துக்கு வந்தவனுக்குச் சரியான வேலை கிடைக்கவில்லை. பூணூல் அணிந்து மயிலாப்பூரில் சுண்டல் விற்கும் வேலை கிடைக்கிறது. முதலில் அவன் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், பசி அவனைப் பதம் பார்த்தபோது நூல்தானே அணிந்துவிடுவோம் எனத் துணிந்துவிடுகிறான். பூணூலை அணிவதற்கு முன் விநாயகரிடம் அனுமதி பெற்றுக்கொள்கிறான். ஆக, பிஏ படித்திருந்த கோபால் வேலையின் பொருட்டுப் பூணூல் அணியும் நிலைக்குத் தள்ளப்பட்டான். அவன் பூணூல் அணிந்த நேரம் புரோகித வேலையே அவனுக்குக் கிடைக்கிறது. ஸ்வாஹ சொன்னால் 25 ரூபாய் தருவதாகச் சொல்கிறார்கள். எனவே, உற்சாகமாகக் கிளம்பிவிடுகிறான் கோபால்.

கோபால் புரோகிதம் செய்யச் சென்ற வீடு பானுமதியுடையது. கோபால் ஸ்வாஹ சொல்லும் அழகால் சாஸ்திரி அவனைக் கண்டுபிடித்துவிடுகிறார். அவனும் பணத்துக்காக வந்ததாக உண்மையை ஒப்புக்கொள் கிறான். பிஏ படித்துவிட்டு புரோகிதம் செய்யத் துணிந்த அவனுக்குத் தங்க இடமளிக்கிறார். கோயிலில் ஒரு வேலைக்கும் ஏற்பாடு செய்கிறார். சாஸ்திரி வீட்டில் இடமளித்தார்; பானுமதி மனத்தில் இடமளித்துவிட்டாள். தான் யார் என்பது தெரிந்தால் தன்னை எப்படியும் கத்தரித்துவிடுவார்கள் என்பதை அறிந்த கோபால் தன்னைப் பற்றிய உண்மையை பானுமதியிடம் கூறித் திருமணத்துக்கு மறுக்கிறான். அவன் சொன்ன பொய்யை எளிதாக நம்பியவள், அவன் சொன்ன உண்மையை நம்பவில்லை. பகவான் சித்தம் அப்படியிருக்கிறது.

தாலியும் பூணூலும்

ஸ்ரீனிவாச சாஸ்திரி மகளைக் கன்னிகாதானம் செய்துகொடுத்துவிடுகிறார், கோபாலும் அக்னி சாட்சியாக அவள் கழுத்தில் திருமாங்கல்யத்தைக் கட்டிவிடுகிறான். அந்த நேரத்தில் வெளிப்பட்டுவிடுகிறது அவனது உச்சிக்குடுமி. அவன் பிராமணனல்ல என்பதும் அவன் ஒரு நாவிதன் என்பதும் தெரிந்துவிடுகிறது. தாலி கட்டிய கையோடு பூணூலைக் கழற்ற நேர்கிறது. அத்துடன் நிறுத்தவில்லை சாஸ்திரி. இனி அவன் தன் மகளைத் தொடக் கூடாது என சத்தியம் வாங்கிக்கொள்கிறார். அக்னிசாட்சி யாக அவன் சத்தியம் செய்யாவிட்டால், அக்னி வளர்த்து தான் அதில் இறங்கிவிடுவதாக மிரட்டுகிறார். சாஸ்திரியின் மனுதர்மம் அதை அனுமதிக்கலாம். ஆனால், கோபாலின் மனித தர்மம் அதை அனுமதிக்குமா? சத்தியம் செய்துவிடுகிறான். இதை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி சிலையாக நிற்கிறாள் பானுமதி. இரண்டு ஆண்களும் அவளது வாழ்வைத்தான் பகடைக்காயாக உருட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு இது ஒன்றும் புதிதில்லையே? தருமனே பாஞ்சாலியின் வாழ்வை வைத்துப் பகடை உருட்டியவன்தானே?

பானுமதி, தந்தை அளவுக்கு ஆச்சாரத்தைக் கைக்கொள்ளும் இயல்பினள் அல்ல. ஆகவே, அவன் பிராமணனல்ல என்பது அவளைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. இப்படி அநியாயமாகச் சத்தியம் செய்து கொடுத்துவிட்டானே என்பதுதான் அவருடைய வருத்தம். அவனுடைய சத்தியத்தை உடைத்து நொறுக்கும் வேலையில் அவள் கவனம் செலுத்தத் தொடங்குகிறாள். அவள் இந்த வேலையில் இறங்குவதை அறிந்த சாஸ்திரி, ஊரறிய தலையில் தண்ணீரை ஊற்றி அவளைத் தலைமுழுகிவிடுகிறார். ஏற்கெனவே கன்னிகாதானம் செய்துகொடுத்தவர் இப்போது ஈஸ்வரன் சாட்சியாக மகளுக்கும் அவருக்கும் உறவு அற்றுவிட்டது எனப் பத்து செய்துவிடுகிறார்.

சாஸ்திரிக்கே அவள் மகளாக இல்லாதபோது, அவள் கோபாலைக் கூடுவதில் என்ன பிழை இருக்க இயலும்? ஆனாலும் கோபால் அடம்பிடிக்கிறான். அவனுக்கு சாஸ்திரியின் மனத்தைக் கஷ்டப்படுத்திவிட்டு பானுமதியை மனைவியாக்குவதில் விருப்ப மில்லை. சாஸ்திரிக்கு மனுவே முதன்மை; கோபாலுக்கோ மனிதனே முதன்மை. தாழ்த்தப் பட்ட பெண் ஒருத்தி பிராமணக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்ததால் குழந்தையின் மீது நீர் தெளித்து தீட்டகற்றுகிறார் சாஸ்திரி. குழந்தை குடித்த பாலை சாஸ்திரியால் என்ன செய்துவிட முடியும்? எல்லாம் பகவான் செயல் எனில் இதுவும் பகவான் செயல்தானே? ஏனோ சாஸ்திரிக்கு இதை பகவான் உணர்த்தவில்லை.

பானுமதி ஒருவழியாகத் தான் நினைத்ததை நிறைவேற்றிவிடுகிறாள். திருமணத்தின் தாத்பரியமான தாம்பத்தியத்தை அனுபவித்துவிடுகிறாள். ஆனால், சாஸ்திரியோ தான் எழுப்பிய மடத்தைக் கொளுத்தி தானும் அதில் எரிந்துவிட எத்தனிக்கிறார். ஆனால், கோபால் வந்து அதைத் தடுத்துவிடுகிறான். அவரது ஆச்சாரத்தின் திட வடிவமான மடம் முற்றிலும் எரிந்து சாம்பலாகிறது. ஆச்சாரங்களும் அனுஷ்டானங்களும் மனிதர் உருவாக்கியவைதாமே. மனிதர் நல்வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட அவை, மனிதரின் நல்வாழ்வுக்குக் குறுக்கே வரும்போது அவற்றை அகற்றுவதுதானே முறை என்று நமக்குத் தோன்றும்.

திரைப்படம் என்பதால் சாஸ்திரி திருந்திவிடுகிறார். ஆனால், உண்மையில் மனிதர்களை இவ்வளவு எளிதில் திருத்த இயலுமா என்றபோதும், சாஸ்திரிகளின் சாம்ராஜ்ஜியம் பானுமதிகளாலேயே சரிக்கப்பட வேண்டும் என்பதே சாட்சாத் பகவானின் சங்கற்பமாக இருந்தால் சாதாரண மனிதர்களால் அதைத் தடுத்துவிட முடியுமா? கொள்கைப் பிடிப்பென்ற பெயரில் வெற்று சம்பிரதாயங்களுக்கு எதிராகப் பானுமதி போன்றோர் தொடர்ந்து கொடிபிடித்துத்தானே ஆக வேண்டும்?

(நிறைவடைந்தது)

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@hindutamil.co.in

எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கிய 'இது நம்ம ஆளு' (1988) திரைப்படத்தில் ஷோபனா, கே.பாக்யராஜ், சோமயாஜுலு, மனோரமா, கலைஞானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்துக்கு இசை அமைத்தவரும் பாக்யராஜ்தான். பாலகுமாரன் இந்த ஒரு படத்தை மட்டும்தான் இயக்கியிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in