Published : 12 Jan 2020 10:27 AM
Last Updated : 12 Jan 2020 10:27 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 40: ஆண்களுக்கு ஒரு ரூவா பெண்களுக்கு அம்பது பைசா

பாரத தேவி

அம்புட்டுப் பேரும் ஆச்சரியமும் அதிசயமாவும் கேட்டாக. கேட்டதோடு மட்டுமில்லாம வீட்டுக்கும் வந்து பாத்தாக.
ஆண்டாளோ இப்படி ஒரு பொய் ஏச்சதுக்கு ஊர்க்காரக வஞ்சாலும் வைவாகன்னு கண்ணை மூடிக்கிட்டா. வந்து பாத்தவக கண்ணுக்கு இவ ஆண்டாளாத் தெரியல. அம்மனாத்தேன் தெரிஞ்சா. உடனே குறி கேக்க ஆரம்பிச்சிட்டாக. வீடு வீடாகப் போய்ப் பொறணி பேசுனதுல ஆண்டாளுக்கு எல்லா வீட்டு விசயமும் தெரியுமாங்காட்டி அவ எல்லா விஷயத்தயும் பொய்யும் மெய்யுமா அவுத்துவிட்டா.

இப்ப பக்கத்து ஊருக்காரக எல்லாம் இவகிட்ட குறி கேக்க வராக. விடிஞ்சதுல இருந்து ஒரு சாமப்பொழுது வரைக்கும் இவ வீட்டு முன்னால சனம் கூடிக்கெடக்கு. சேது, காளை மாடு ரெண்டயும் வித்துட்டு இவளுக்கு சேவுவம் பண்ணிக்கிட்டு இருக்கான்.

தானியங்களே சேமிப்பு

அந்தக் காலத்துல உழைத்துத்தான் சாப்பிட்டார்கள். சேமிப்பு என்பது கிடையாது. தானியங்களைத்தான் சேமிப்பாக நினைத்தார்கள். கல்யாணம், சடங்கு, பிள்ளைப்பேறு என்று நல்லது பொல்லதுக்கெல்லாம் அந்தத் தானியங்களை விற்றுத்தான் செலவழித்தார்கள். ஒரு ரூபாய்க்கு நாலு படி நெல்லும் மற்ற தானியங்கள் ஐந்து படியாகவும் விற்றது. இவர்கள் கஷ்டத்துக்காக விற்பதாக இருந்தால் ஊரைச் சுற்றிச் சுற்றி வரும் வியாபாரிகள் இந்த உழைப்பாளிகளிடம் கஷ்டத்துக்குத் தக்கன ஒரு ரூபாய்க்கு நெல்லை ஐந்து படியாகவும் மற்ற தானியங்களை ஆறு படியாகவும் வாங்கி, கொள்ளை லாபம் அடித்தார்கள். அப்போது தங்கம் ஒரு பவுன் அம்பது ரூபாய். ஆண்களுக்கு ஒரு ரூபாய் சம்பளமாகவும் பெண்களுக்கு அம்பது பைசா சம்பளமாகவும் இருந்தது.

விடியற்காலையில் பிஞ்சையில் கால் வைத்தால் பொழுது மசங்க ஆறு மணிக்குத்தான் வீட்டுக்கு வர முடியும். பக்கத்திலிருக்கும் பிஞ்சைக்கு வேலைக்குப் போகிறவர்கள் மத்தியானம் வந்து தானியங்களைக் குத்தி அரிசியாக்கி வைத்துவிட்டுப் போவார்கள்.

ஒரு கை அரிசி, ஒரு ஆள் சோறு

குத்திய தானியங்களைப் புடைத்துப் போடுவற்கு ஆள் வேண்டும். வேலை செய்ய முடியாமல் இருக்கும் வயதான பெண்களைக் கூப்பிட்டுப் புடைத்துப்போடச் சொல்வார்கள். இவர்களும் சும்மா புடைக்க மாட்டார்கள். புடைப்பதற்குக் கூலியாக அந்தத் தானியங்களின் தவிட்டைக் கேட்பார்கள். ஏனென்றால், அந்தத் தவிட்டைக் கூழ், சோளச்சோறு, கம்மஞ்சோற்றோடு சேர்த்துப் பிசைந்து போட்டால் கோழிகளுக்கு இரையாகும். கோழி வளர்க்காதவர்கள் வேறொரு வழியை வைத்திருந்தார்கள். குதிரைவாலியையும் சாமையையும் மூன்றாம் முறை குத்தினால் அதைப் புடைக்க முடியாது. அதனால், சொளவிலிட்டே தெள்ள வேண்டும். அப்படித் தெள்ளியதில் அரிசியெல்லாம் உருண்டு ஓட, தவிடு மட்டுமே தனித்து நிற்கும். அதைக் கேட்பார்கள்.
அது திங்க கொஞ்சம் இனிப்பாக இருக்கும். சிலர் ஒரு கை அரிசி கேட்பார்கள். ஒரு கை அரிசி, ஒரு ஆள் சோறு என்று யாருக்கும் கொடுக்க மனசிருக்காது.

காட்டுக்குப்போய் நாள் முழுக்க வெயிலிலும் மழையிலும் வேலை செய்ய முடியாதவர்களும் உண்டு. மழையில் எப்படி வேலை செய்வது என்று நாம் நினைக்கலாம் ஆனால், பெரிய மழையாக இல்லாமல் சாரலாக விழுந்தால் ஒரு சாக்கை ‘கொங்காணி’யாக மடித்துப் போட்டுக்கொண்டு ஈரத்தில் களை பிடுங்குவார்கள். மழை பெய்கிறது என்று இந்தக் களையை விட்டுவிட்டால் அது செழிப்பாக வளர்ந்து உணவுக்காக விதைத்திருக்கும் பயிரை மூடிவிடும். மழை பெய்த ஈர நிலம் நாற்று நடுவதற்குத் தோதாக இருக்கும். இதனால், எந்த நேரமும் காடுகளில் வேலை உண்டு. அப்படி வேலைக்குப் போக முடியாதவர்கள் நான்கைந்து வீடுகளுக்கு ஐந்து படி, ஆறு படி என்று தானியங்களைக் குத்திக் கொடுத்து இரண்டு கை நிறைய அதற்கான கூலியை வாங்குவார்கள்.
பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள ஆளில்லாதவர்கள், வீட்டில் மொடங்கிக் கிடக்கும் பெரியவர்களிடம் பிள்ளைகளைப் பத்திரமாக பாத்திருக்கும்படியும், கும்பாவில் கஞ்சியை ஊத்தி பிள்ளைகளுக்கு ஊட்டும்படியும் கொடுத்துவிட்டுப் போவார்கள். அவர்களுக்கும் கூலி உண்டு. ஒரு வருசப் பிள்ளையாக இருந்தால் மரத்தில் தொட்டில் கட்டி தாங்களே பார்த்துக்கொள்ளலாம் என்று தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள். இப்படிப் பச்சைப் பிள்ளைக்காரிகளுக்கு அவ்வப்போது பால் கொடுக்க அனுமதி உண்டு. பிள்ளை தூங்கினால் தொட்டிலில் மல்லாக்காகவும் முழித்திருந்தால் குப்புறவும் போட்டுவிட்டு வந்துவிடுவார்கள். அது பாட்டுக்கு இவர்களை வேடிக்கை பார்த்தவாறு சிரித்துக்கொண்டிருக்கும்.

பாதியில் நிற்கும் தாலாட்டு

ஆடு, மாடு மேய்க்க வருகிறவர்கள், வெறகு பெறக்க, புல்லறுக்க என்று வருகிறவர்கள் இந்தக் குழந்தையைத் தூக்கிச் சற்று நேரம் கொஞ்சி விளையாட்டுக் காட்டிவிட்டு மீண்டும் தொட்டிலில் போட்டுவிட்டுப் போவார்கள். தூங்கும் குழந்தை விழித்து அழுதால் போதும். வேலை செய்யும் அவள் அம்மா வந்து உடனே பால் கொடுத்து தொட்டிலில் போட்டுவிட்டு ராகம்போட்டு ‘ஆராரோ’ பாடுவாள்.

தங்க தகரப்பெட்டி
உங்களய்யா தாளடைக்கும் ரெங்குபட்டி
தாளடைக்கும் நேரமெல்லாம்
உன் அய்யாவை தாசில்தார் கையெடுப்பார்
பொன்னு தகரப்பெட்டி
உன் அய்யா பூவடைக்கும் ரெங்குபட்டி
பூவடைக்கும் வேளையில
உன் அய்யாவை போலீஸார் கையெடுப்பார்
பட்டுத் துண்டு மேலபோட்டு
உன் அய்யா பட்டணமே போனாலும்
பட்டுத்துண்டு சோதிமின்னும்
பட்டணத்தார் வாய் மூடும்
துப்பட்டா தோளிலிட்டு...”
- என்று குறைபாட்டைப் பாடு முன்னே காட்டுக்காரி எரிச்சலும் இளப்பமுமாகக் குரல்கொடுப்பாள்.

“ஏ… போதுமத்தா உன் ரோராட்டு. ஆட்டுக்கால்ல அலயித உன் புருசனை ரொம்பவும் நாறடிக்காத. இங்க நிறகெடக்கு. வந்து வேலயப் பாரு” என்று சொல்ல, குழந்தையின் தாய்க்கு முகம் கொராவிப்போகும். எப்போதும் நெஞ்சுக்குள் நினைவிலோடும் முழு ரோராட்டைச் சொல்லிப்பாட அவளுக்கு நேரமிருந்ததில்லை.

இப்படி மழைக்காலம் முழுவதும் அவர்களின் ஊரைச் சேர்ந்த காடுகளில் வேலை பார்ப்பார்கள். தை மாதம் முடிந்துவிட்டால் பங்குனி, சித்திரையில் அவ்வளவாக வெள்ளாமை இருக்காது. அங்கங்கே வரப்பு, வாய்க்காலில் இருக்கும் பசுமைகூட நிறம் மாறி எங்கும் தீப்பிடித்த காடாக மாறிவிடும். ஒரு தீக்குச்சியை உரசிப் போட்டால் போதும். காடே தீப்பற்றிவிடுவதுபோல் வெறும் சருகாகக் காற்றுக்கு அல்லாடிக்கொண்டு இருக்கும். கிணற்றிலும் குளங்களிலும்கூடத் தண்ணீர் வற்றி வெகு ஆழத்துக்குப் போய்விடும். இரவு முழுக்கப் பெண்கள் தண்ணீர் இறைக்கும் உருளையின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். சிறிது ஊத்தடிக்கும் கிணறுகளைத் தேடி தண்ணீருக்காக இரவு முழுக்க ஊர் இளவட்டங்கள் கிணறுகளைத் தோண்ட, பெண்கள் அந்த மண்ணைக் கூடையில் சுமக்க இரவு முழுக்க நிலாக் காலத்தில் சுறுசுறுப்பாகப் பாட்டும் கதையுமாக விடியற்காலை மூன்று மணிவரை வேலை செய்வார்கள்.
பின்னர் போய்ப் படுப்பார்கள். அப்போதெல்லாம் யாரும் தங்கள் தேவைகளுக்காக அரசாங்கத்தையோ மந்திரிகளையோ எதிர்பார்த்ததில்லை. அவரவர் தேவையை எல்லோரும் சேர்ந்தே தங்களின் உழைப்பால் பார்த்துக்கொண்டார்கள். அவர்களுக்கு அரசாங்கத்தைப் பற்றித் தெரியவும் தெரியாது.

(நிலா உதிக்கும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x