Published : 12 Jan 2020 10:24 AM
Last Updated : 12 Jan 2020 10:24 AM

வாசிப்பை நேசிப்போம்

புத்தக ஒளியைப் பரப்புவோம்

கிராமத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரியான என் தந்தை மூலமாகவே எனது பதினோறு வயதில் தீவிரமான வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. அப்பா வெளியூரில் பணி புரிந்ததால் வார இறுதியில் வீட்டுக்கு வரும்போது அவர் வாங்கியிருந்த வார, மாத இதழ்களைக் கொண்டுவந்து கொடுத்தவுடன் ஒரு வரி விடாமல் (தாயின் இடியுரையின் இடையில்) படித்துவிட்டுத்தான் அடுத்த வேலை. வேறு பொழுதுபோக்கு ஏதும் இல்லாத அக்காலத்தில் விகடன், குமுதம், ராணி, ராணி முத்து, மாலைமதி எனக் கிடைக்கும் அனைத்து இதழ்களையும் வாசித்து, தனி உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பேன்.கிராமத்தில் வசித்துவந்த நான் தினமணி கதிரில் வெளிவரும் சிறுகதைக்காகவும், பிரபஞ்சனின் தொடருக்காகவும் வாரம் முழுவதும் காத்திருப்பேன். திருமணமாகி நகரத்துக்கு வந்த பின் மாவட்ட மைய நூலகம் என் வாசிப்பை இன்னும் விசாலமாக்கியது. நா.பார்த்தசாரதி, தி.ஜானகிராமன், அகிலன், ஜெயகாந்தன், சிவசங்கரி , வாஸந்தி ஆகியோரின் எழுத்துக்கள் எனக்கு வாழ்வின் வேறு பரிமாணத்தைக் காட்டின. சிவசங்கரியின் ‘ஒரு மனிதனின் கதை’ என்னை வெகுவாகப் பாதித்தது. போட்டித் தேர்வுக்காகப் படித்தபோது தமிழ் இலக்கியத்தின் மீது தீராக் காதல் ஏற்பட்டது. நாளிதழ் படிக்கும் பழக்கம் இளவயதில் இருந்ததாலும் வாசிப்பை நேசித்ததாலுமே போட்டித் தேர்வில் வெற்றிபெற்று அரசுப் பணி பெற்றேன். தற்போது எந்த ஒரு விழாவாயினும் புத்தகத்தைப் பரிசளித்து, பெறுபவரின் கண்களில் தெரியும் ஒளி கண்டு மனம் மகிழ்கிறேன்.

- ஜெ. ஜான்ஸி சுப்புராஜ், கடலூர்.

தொடரும் புத்தகப் பயணம்

சிறுவயது முதலே கதை படிக்கும் ஆர்வம் எனக்கு அதிகம். பாடப் புத்தகத்தில் உள்ள கதைகளை மட்டுமே வாசித்துப் பழகிய நான் நாவல்கள் வாசிக்கத் தொடங்கியது கல்லூரியில்தான். பள்ளி முடித்துக் கல்லூரிக்குள் நுழைந்தபோது நான் அனுபவித்தது தனிமையே. அந்தத் தனிமையிலிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளத் துணையாக இருந்தவர்கள் நண்பர்களும் கல்லூரி நூலகமும்தான். திலகவதி எழுதிய ‘கல்மரம்’ என்ற நாவலை வாசிக்கத் தொடங்கியபோது கல்லூரி நேரம் முடிந்ததுகூடத் தெரியாமல் நூலகத்திலேயே இருந்தேன். அந்த நாவலை வாசித்து முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்ற நொடியை என் வாழ்வில் மறக்க முடியாது. அதன் பிறகு கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள் என நிறையப் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். அதிலும் கவிஞர் வைரமுத்துவின் ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’, ‘தண்ணீர் தேசம்’, ‘கருவாச்சி காவியம்’, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ என அனைத்துப் புத்தகங்களும் என் நெஞ்சில் பதிந்தவை. ‘தண்ணீர் தேசம்’ நாவலின் தாக்கத்தில் என்றாவது ஒருநாள் படகில் கடலில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை உருவாகிவிட்டது. அதை விரைவில் நிறைவேற்றிவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. என்னைப் பாதித்த நாவல்களை நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளேன். எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படித்தபோது அந்த வரலாற்றுக் காலத்திலேயே வாழ்ந்தேன். அதில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களுடனும் நான் பயணித்ததுபோல் உணர்ந்தேன். இப்படி நான் படித்த ஒவ்வொரு புத்தகத்துடனும் நான் பயணித்தபோது என்னுள் இருந்த கவலை, தடுமாற்றம் ஆகியவற்றை மறந்து வேறோர் உலகத்துக்குள் சென்றுவந்தது அளவில்லாத மகிழ்ச்சியை எனக்கு ஏற்படுத்தியது. தற்போது தனியார் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். புத்தகங்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தினால் மாணவர்களுக்கு எந்தப் பாடத்தை எடுத்தாலும் அதில் அவர்களை ஒரு கதாபாத்திரமாகவே மாற்றிவிடுவேன். தற்போது கல்கியின் ‘சிவகாமி சபதம்’ நாவலுடன் பயணித்து வருகிறேன். புத்தகத் தேடல்கள் நிறைந்த என் பயணம் என்றும் முடிவில்லாமல் தொடர வேண்டும் என்பதே என் ஆசை.

- இராஜலெட்சுமி வெங்கடசாமி, மதுரை.

மனத்தில் பூக்கும் புத்தகம்

குழந்தைகள் இலக்கியத்திலிருந்துதான் என் வாசிப்பை அனுபவம் தொடங்கியது. ‘இரும்புக் கை மாயாவி’,‘ஜேம்ஸ் பாண்ட்’ படக்கதைகள் எனத் தொடங்கி, ‘அம்புலி மாமா’, ‘டிராகுலா படக்கதை’ ராணியில் வரும் ‘குரங்கு குசலா’ இப்படிச் சின்ன சின்னதாய் ஆரம்பித்த பழக்கம் பிறகு வேட்கையாக மாறி விட்டது. நாங்கள் இருந்த ஊரில் விகடன் இதழ் கிடைக்காது. சேலத்திலிருந்து எல்.ஆர்.என். பஸ்ஸில் வரும். அம்மா அதற்காக டிரைவரிடம் வாங்கி வரச் சொல்லி பிரத்யேகமாக ஏற்பாடு செய்திருந்தார். நான்தான் அந்தப் புத்தகத்தை வாங்கப் போவேன். வெள்ளிக்கிழமை மாலை எப்போது வரும் என காத்திருப்பேன். பஸ் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகச் சென்று விடுவேன். வரும் போதே அடி மேல் அடி வைத்து நடந்து வீடு வந்து சேர்வதற்குள் எனக்கு பிடித்தமான பகுதியைப் படித்து முடித்து விடுவேன். மீதமுள்ள பக்கங்களை விடுமுறை நாட்களில்தான் படிக்க முடியும். அப்பா வீட்டில் இருந்தால் படிக்க முடியாது. புத்தகம் படிக்கக்கூட அவ்வளவு கண்டிப்பு. வேலை முடித்து அம்மா புத்தகத்தைப் படித்தவாறே தூங்கிப் போவார். புத்தகம் அவர் கையிலிருந்து நழுவும் கணத்துக்காகக் காத்திருந்து. எடுத்துகொண்டு போய் பெரிய நெற்குதிர் அமைந்த காற்று வராத அறையில் ரகசியமாய்ப் படிப்பேன். அரை ஆண்டு விடுமுறையிலும் அடைமழைக்காலத்திலும் படித்த நினைவுகள் என்றும் மறக்காது. என்னுடைய பதின் பருவத்தில் சிறுகதையிலிருந்து தொடர் கதைக்குத் தாவி இருந்தேன். அப்போதுதான் சுஜாதா, சிவசங்கரி, இந்துமதி, பட்டுக்கோட்டை பிரபாகர், பிரபஞ்சன், ஆகியோர் எனக்கு அறிமுகமானார்கள். அதில் சுஜாதாவின் குறும்புகள் எனக்குப் புதிதானவை. பட்டுக்கோட்டை பிரபாகரின் கதைகள் கொஞ்சம் சினிமாத்தனம் என்றாலும் எனக்கு விருப்பமானவை. ஸ்டெல்லா புருஸி ன் ‘ஒரு முறைதான் பூக்கும்' ஒவ்வொரு வாரமும் மனதில் பூ பூக்க வைத்தது. எனக்குப் போட்டியாகத் தங்கையும் படிக்க ஆரம்பித்த பின் தொடர்கதையை நான் முதலில் படிக்க அன்று மட்டும் அவள் வேலையும் சேர்த்து நானே செய்வதென உடன்படிக்கை செய்துகொண்டுவிடுவேன்! படித்து வேளாண் பொறியாளராகப் பட்டம் பெற்று அதே துறையில் பணியமர்ந்த போதும் படிப்பதை விடவில்லை. எந்த ஊர் சென்றாலும் அங்கே முதலில் பார்க்க விரும்புவது நூலகத்தைத்தான். இந்த ஐம்பது வயதில் பொது நாவல்களிலிருந்து இலக்கிய நாவல்களுக்கு என் மனம் தாவியுள்ளது. புதுமைப் பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஆதவன், தி.ஜானகிராமன் தொடங்கி இப்போதைய படைப்பாளிகள் ஜெயமோகன், எஸ்.ரா, சு. வெங்கடேசன் வரை புத்தகங்கள் என் வாழ்க்கையின் ஊடே வந்து கொண்டே இருக்கின்றன அது தொடரும் என் முடிவு வரையில்.
- கு.சந்திரா, தருமபுரி

மனநிறைவைத் தரும் வாசிப்பு

வாசிப்பை நேசிப்பதன் மூலம் நாம் உலகையே அறியலாம். அப்போதெல்லாம் தொலைக்காட்சி மிக அரிது. அதனால் புத்தகம் மட்டுமே, நான் பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்ள உதவியாக இருந்தது. நாளிதழின் இணைப்பாக வரும் சிறுவர் மலர், வார மலர், குடும்ப மலர் என எதையும் விட்டுவைத்ததில்லை. அப்பறம் பழைய இரும்புக் கடையில் இருந்தும், பக்கத்து வீடுகளில் இருந்தும் வாங்கிப் படிப்போம். சாப்பிடாமல் கூட ராஜேஷ்குமார் நாவல்களை படித்திருகிறேன். கண்மணி, ராணி முத்து, மங்கைமலர், ஆனந்த விகடன் என நான் படித்த வார இதழ்களின் எண்ணிக்கை அதிகம். விடுமுறை நாள்களில் பாட்டி வீட்டுக்குச் செல்வதென்றால், முன்கூட்டியே புத்தகங்களை வாங்கி வைத்துவிடுவேன். படித்துக்கொண்டே பேருந்தில் பயணிப்பது அப்படி ஒரு சுகம். பயணக் களைப்பே தெரியாது. ஏதாவது மன வருத்தத்தில் இருக்கும்போது அதைப் போக்கும் விதமாக, யதார்த்தமாகச் சில வரிகள் அமைந்திருக்கும். அது ஆச்சர்யமூட்டும் வகையில் இருக்கும். குறிப்பாக, சில இதழ்கள், பெண்களுக்கு, தைரியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி இவற்றையெல்லாம் கற்றுக் கொடுக்கும். தற்போதும் நிறையப் பொழுதுபோக்குகள் இருந்தாலும், புத்தக வாசிப்பு மட்டுமே எனக்கு மன நிறைவைத் தருகிறது.
- ரேவதி, தஞ்சாவூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x