Published : 12 Jan 2020 10:20 AM
Last Updated : 12 Jan 2020 10:20 AM

வெற்றிப் பயணம்: ஊரை ஆளப்போகும் பெண்கள் படை

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவு அரசியலில் பெண்களின் அவசியத்தை உணர்த்தியுள்ளது. அரசியல் அதிகாரத்தில் பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டால் சாமானியப் பெண்களும் களம்புகுவார்கள் என்பதை இத்தேர்தல் நிரூபித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு முதன் முறையாக அமல்படுத்தப்பட்டது இத்தேர்தலில்தான். ஆனால், இந்த இட ஒதுக்கீட்டுப் போராட்டத்துக்கு நீண்ட வரலாறு உண்டு.

பங்களிப்பை உறுதிசெய்த தேர்தல்

2019 டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களில் உள்ள 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 9,624 கிராம ஊராட்சித் தலைவர், 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. இட ஒதுக்கீட்டு முறை இல்லாத பொதுத் தொகுதிகளிலும் மக்களுக்கு அறிமுகமான பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்த இத்தேர்தலில் கல்லூரிப் படிப்பை முடிக்காத இளம் பெண்களும் முதுமையிலும் மக்கள் பணிசெய்ய முன்வந்த மூத்தோரும் வெற்றிபெற்றுள்ளனர்.

வயது தடையில்லை

தேர்தலில் போட்டியிடப் பண பலம் வேண்டும் என்ற பொது நினைப்பை உடைத்துள்ளார் விருதுநகர் கான்சாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி சரஸ்வதி. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியைத் தொடங்கியவர் சரஸ்வதி. மூன்றாண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தல்களில் ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டபோது தன்னுடைய துப்புரவுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலில் போட்டியிட ஆர்வம்காட்டினார். ஆனால் அப்போது உள்ளாட்சித் தேர்தல் தடைபட்டதால் மீண்டும் தொகுப்பூதிய அடிப்படையில் துப்புரவுப் பணியைச் செய்துவந்துள்ளார். இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு கான்சாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றிபெற்றுள்ளார்.

“எங்க ஊர் மக்களுக்குத் தண்ணீர் வசதியையும் போதுமான கழிப்பிட வசதியையும் செய்துதர வேண்டும் என்பதுதான் என் முதல் நோக்கம். பல காலமாகவே நாங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் கஷ்டப்படுகி றோம். அதைச் சரிசெய்ய வேண்டும் என்றுதான் தேர்தலில் போட்டியிட்டேன். மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நிச்சயமாகக் காப்பாற்றுவேன்” எனக் கூறுகிறார் அவர்.

சரஸ்வதியைப் போல் கன்னியாகுமரியைச் சேர்ந்த மேரி ஜாய் (73) மதுரையைச் சேர்ந்த வீரம்மாள் (79), ராமநாதபுரத்தைச் சேர்ந்த தங்கவேலு (73), திருப்பூரைச் சேர்ந்த விசாலாட்சி (82) ஆகியோர் இந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியின் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். தோவாளை ஊராட்சி ஒன்றிய முதல் வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட மேரி ஜாய், 963 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். முதியோருக்கான தடகளப் போட்டிகளில் தற்போதும் பங்குபெற்றுவருபவர் மேரி ஜாய். 50ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்துவரும் அவர் பழங்குடி மக்களுக்கு நாட்டு வைத்திய முறையில் மருத்துவ உதவி அளித்துவருகிறார். “மலையில் வசிக்கும் பழங்குடிப் பெண்கள் மகப்பேறு காலத்தில் பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய சூழல். அவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தலில் போட்டியிட்டேன். நான் அவர்களுக்குச் செய்த பணிக்காகவே இப்பகுதி பழங்குடி மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்கிறார் மகிழ்ச்சியாக.

இதற்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் களில் இரண்டு முறை போட்டியிட்டவர் மதுரை அரிட்டா பட்டியைச் சேர்ந்த வீரம்மாள் அழகப்பன். முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாய் வீரம்மாள் உள்ளார். சுயேச்சையாகப் போட்டியிட்டு 193 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். வீரம்மாளைத் தொடர்ந்து ஏ.தரைக்குடி ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கா.தங்கவேலு 661 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். ஊரகத் தொழிற்துறை அமைச்சராக இருந்த துரை.ராமசாமியின் மனைவி விசாலாட்சி மேட்டுப்பாளைய ஊராட்சி ஒன்றியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அரசியல் அங்கீகாரம்

இந்த உள்ளாட்சித் தேர்தலில் பலரின் கவனத்தைப் பெற்றவர் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய இரண்டாம் வார்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவைச் சேர்ந்த திருநங்கை ரியா. தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் நிறுத்தப்பட்ட முதல் திருநங்கை வேட்பாளர் ரியா. இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 950 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றிபெற்றார். “சமூக அங்கீகரத்துக்காகப் போராடும் திருநங்கைகளுக்குக் குடும்பத்தின் ஆதரவு மிகவும் முக்கியம். குடும்பத்தின் ஆதரவு இருந்ததால்தான் என்னால் தைரியமாகச் சமூகத்தில் செயல்பட முடிந்தது. திமுக பாரம்பரியத்தைக் கொண்டது எங்களுடைய குடும்பம். அதனால்தான் நான் திருநங்கையாக மாறியபோதும் என்னை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். சென்னையில் செயல்பட்டுவரும் ‘சகோதரன்’ அமைப்பில் செயல்பாட்டாளராக இருக்கிறேன். எங்கள் பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதே என் முதல் கடமை” என்கிறார் ரியா.

சமூகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் சாதி எனும் கொடுந்தீ பெரும்பாலானவர்களின் மனத்தில் எரிந்துகொண்டுதான் இருக்கிறது. திருச்செந்தூர் ஒன்றிய பிச்சிவிளை ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜேஸ்வரிக்கு நேர்ந்த துயரம் சமீபத்திய சான்று. பிச்சிவிளை தொகுதி பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஊரில் அதிக எண்ணிக்கையில் உள்ள ஆதிக்கச் சாதியினர், பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரிக்கு வாக்களிக்க முன்வரவில்லை. இந்நிலையில் ராஜேஸ்வரியின் குடும்பத்தினரும் இரண்டு பட்டியலினக் குடும்பங்களும் வாக்களித்ததன் அடிப்படையில் பத்து ஓட்டுகள் பெற்று தலைவராகியுள்ளார் அவர். “எங்க ஊரில் 785 பேருக்கு ஓட்டு இருந்தும் பட்டியல் இனத்தவர் என்ற காரணத்தால் எனக்கு யாரும் ஓட்டுப் போடவில்லை. ஊர் மக்கள் சிலர் எனக்குத் துணையாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனால், நான் கிராமத்துக்குத் தேவையான பணிகளைச் செய்வேன்” என்கிறார் நம்பிக்கையுடன்.

இளைஞர்களின் வருகை

மாணவர்களுக்கு அரசியல் எதற்கு எனக் கேட்போர் மத்தியில் திருவாரூர் மாவட்டம் பூசலாங்குடி ஊராட்சித் தலைவராக வெற்றிபெற்றுள்ளார் 22 வயதாகும் சபிதா. பிபிஏ பட்டதாரியான அவர் அப்பகுதியில் கல்லூரிப் படிப்பை முடித்த பட்டதாரிகள் சிலரில் ஒருவர். இடதுசாரிக் கருத்துகளில் ஆர்வம்கொண்ட சபிதா, இந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டார்.

“எங்கள் பகுதியில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதே அரிது. இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்குக் கல்வி அளிப்பது முக்கியம். பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க வேண்டும் என்பது என் ஆசை. அதற்காக எங்கள் பகுதியில் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளை அரசு அமைத்துத்தர வேண்டும் என்பதே என் முதல் கோரிக்கை” என்கிறார் அவர். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டிநாயக்கன் (செக்) தொட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சந்தியா ராணி பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். இவருடைய தந்தை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இத்தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் சந்தியா ராணியை நிற்கவைத்துள்ளனர் குடும்பத்தினர். படித்த பெண் ஊருக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

சாதிக்க நினைத்தால் சாதியும் உடல் குறைபாடும்கூடத் தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் பொள்ளாச்சியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் சரண்யா குமாரி. எம்.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்துவரும் சரண்யா கால் முடக்கத்தால் பாதிக்கப்பட்டவர். ஊர் மக்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதிக் கொடுப்பது மட்டுமல்லாமல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தண்ணீர், கழிவுநீர் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துள்ளார். ஆத்துப்பொள்ளாச்சி எட்டாவது வார்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரண்யா குமாரி மக்களின் நம்பிக்கை பெற்றவராக உள்ளார்.

பொதுவாக, உள்ளாட்சிகளில் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள்தாம் ஆட்சி செய்வார்கள். ஆனால், மங்கையர் வந்தால் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையில்தான் இவர்களை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த நம்பிக்கையை இவர்கள் நிறைவேற்றுவார்கள் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x