

தொகுப்பு:ரேணுகா
வெங்காயம் கிலோ ரூ.25
ஒரு கிலோ வெங்காயம் ரூ.25-க்கு விற்கப்பட்டதால் திருப்பதியில் மூன்று கி.மீ. தொலைவுக்கு மக்கள் வரிசையில் காத்திருந்தனர். நாட்டில் வெங்காய வரத்துக் குறைத்துள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை பல இடங்களில் ரூ.200-ஐ நெருங்கிவிட்டது. வெங்காயத்தின் விலையைக் குறைக்க ஆந்திர மாநில அரசு, உழவர் சந்தைகள் மூலமாக ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.25-க்கு மலிவு விலையில் விற்பனைசெய்ய முடிவுசெய்தது. இந்த அறிவிப்பையடுத்து திருப்பதி உழவர் சந்தையில் வெங்காயம் வாங்க சுற்றுவட்டார மக்கள் குவிந்தனர். பெண்களும் ஆண்களும் நூற்றுக்கணக்கில் குவிந்ததால் ஒருவருக்கு ஒரு கிலோ வெங்காயம் மட்டுமே தரப்பட்டது. அதேபோல் விஜயநகரத்தில் வெங்காயம் வாங்க அலைமோதிய கூட்டத்தில் கூட்டநெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர்.
பள்ளி மாணவிக்குப் பாராட்டு
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் ஆங்கிலப் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த பள்ளி மாணவி சஃபா ஃபெபின் அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளார். மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வரங்கத்தைத் திறந்துவைப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தார். அப்போது விழாவில் ராகுலின் பேச்சை யார் மொழிபெயர்ப்பது என அருகிலிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் விவாதித்துள்ளனர். இதைப் பார்த்த ராகுல் காந்தி, “உங்களில் யாராவது என் ஆங்கில உரையை மொழிபெயர்க்கிறீர்களா?” எனக் கேட்டார். அப்போது கூட்டத்திலிருந்து பிளஸ் 2 மாணவி சஃபா ஃபெபின் தைரியமாக மேடைக்கு வந்தார். ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். ராகுல் காந்தியின் நீண்ட பேச்சை மக்களுக்குப் புரியும் வகையில் தங்குதடையின்றி மொழிபெயர்த்து, பாராட்டைப் பெற்றார் சஃபா.
மின்கம்பம் ஏறும் ஜோதி
மின்கம்பங்களைப் பழுதுபார்க்கும் பணிக்காக மின்வாரியம் சார்பாக நடத்தப்பட்ட உடற்தகுதித் தேர்வில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பி.ஜோதி தேர்ச்சிபெற்றுள்ளார். ஐ.டி.ஐ. தொழிற்கல்வியில் டிப்ளமோ பட்டம்பெற்றவர் ஜோதி. இரண்டு குழந்தைகளின் தாயான இவர் பொருளாதாரத் தேவைக்காகவும் தனக்கான தனித்த அடையாளத்துக்காகவும் இந்தப் பணிக்கு விண்ணப்பித்துள்ளார். இதற்கான உடற்தகுதித் தேர்வின்போது மின்கம்பத்தில் ஏறி பழுதுநீக்கும் முறைகளைச் செய்துகாட்டி இவர் தேர்வாகியுள்ளார். இந்தப் பணிக்குத் தற்போதுவரை பெண்கள் மூவர் தேர்வாகியுள்ளனர்.
தியாகத்துக்கு மரியாதை
கேரளத்தில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்த செவிலி லினி புத்துசேரிக்கு ‘ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருது வழங்கப்பட்டுள்ளது. செவிலிப் பணியில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு மத்திய அரசு ‘ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருது வழங்கிக் கௌரவிப்பது வழக்கம். இந்த ஆண்டு இவ்விருதை மொத்தம் 36 செவிலியர் பெற்றுள்ளனர். விருதைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளித்தபோது லினிக்கு நிபா வைரஸ் பரவியது. இதனால், அவர் உயிரிழந்தார். செவிலி லினியின் கணவர் பி.சஜீஷ் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.
உலகின் இளவயது பிரதமர்
உலகின் மிக இளம் வயது பிரதமராக பின்லாந்து நாட்டின் சன்னா மரின் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சன்னா மரின், பிரதமர் வேட்பாளருக்கான தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு நான்கு இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களான பெண்கள் ஆதரவு அளித்தனர். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால் 34 வயதிலேயே பிரதமராகப் பதவியேற்றுள்ளார் சன்னா மரின். “மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க நிறைய வேலை இருக்கிறது. நான் என் வயதையும் பாலினத்தையும் பற்றி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்பதே என் நோக்கம்” என அவர் கூறியுள்ளார். இவருக்கு முன்பு உக்ரைன் நாட்டின் ஒலெக்ஸி ஹான்சாருக் (35) தான் உலகின் இளம் வயது பிரதமராக இருந்தார்.