

என் முகத்தில் தேவையில்லாத முடிகள் அதிகம் இருக்கின்றன. இவற்றை இயற்கையான முறையில் நீக்குவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?
- திவ்யா
டாக்டர் எஸ். ரோஹிணி, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, சென்னை.
பச்சைப் பயறு மாவு, ரோஸ் வாட்டர், எலுமிச்சை சாறு போன்றவற்றை வைத்து முகத்தில் இருக்கும் தேவையற்ற முடியை நீக்க முடியும். இரண்டு டீஸ்பூன் பச்சைப் பயறு மாவுடன், ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து முகத்தில் தேவையில்லாத முடிகள் இருக்கும் இடத்தில் தடவவும். இருபது நிமிடங்கள் கழித்து, ஒரு துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து இந்தப் பூச்சின் மீது ஒட்டவைத்துப் பின்னர் எடுத்துவிடவும்.
ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், நான்கு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவலாம். மேலே சொன்ன அதே முறையைப் பின்பற்றி முடியை நீக்கலாம்.
இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்தும் பயன்படுத்தலாம். இருபது நிமிடங்கள் கழித்துத் துணியை வைத்து முடியை நீக்கலாம்.
நான் ஒரு கல்லூரி மாணவி. ஒரு பெண்ணுக்கு வாழ்வில் அசைவ உணவு இன்றியமையாததா? எனக்கு அசைவ உணவு மீது நாட்டமில்லை. ஆனால், என் வீட்டின் பெரியோர்கள் “தற்பொழுது இல்லாவிட்டாலும் மகப்பேறு காலத்தில் அவசியம் தேவை. அப்போதுதான் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்” என்கிறார்கள். இது உண்மையா? ஆலோசனை சொல்லுங்கள்.
- மணிமாலா
டாக்டர். தாரிணி கிருஷ்ணன், உணவு ஆலோசகர், சென்னை.
மகப்பேறு காலத்தில் அசைவ உணவு கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், ஊட்டச்சத்து மிகுந்த சைவ உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியம். தினமும் உணவில் 400 மி.லி பால் அல்லது தயிர், பருப்பு, காய்கறி போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டரை சதவீதம் கொழுப்பு நீக்கிய பாலை அருந்தலாம். பருப்பு 1 கப், முளைகட்டிய பயறு வகைகள் முக்கால் கப், சுண்டல் முக்கால் கப், சாம்பார், பருப்பு துவையல், காய்கறி இரண்டு கப், பீன்ஸ், காராமணி, அவரை, கீரை போன்ற உணவுகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு வாரத்தில் மதிய உணவையும், இரவு உணவையும் சேர்த்து பதினான்கு முறை சாப்பிடுவோம். அதில் பத்து முறையாவது மேலே சொன்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.