Published : 08 Dec 2019 10:18 AM
Last Updated : 08 Dec 2019 10:18 AM

நட்சத்திர நிழல்கள்: அவள் அனிதா அஃது உன்மத்தம்

ஆமையின் பெருமை அதன் நீண்ட ஆயுள். வானவில்லோ இதற்கு நேரெதிராகத் தனது குறைந்த ஆயுளால் பேசப்படுகிறது. வசீகரமும் அழகும் மிக்க வானவில் போன்றவள் அனிதா. அவள் ரெயின்போ காலனியின் 7/G என்னும் இலக்கம் கொண்ட வீட்டுக்கு வந்தபோது அந்த காலனியே ஒளிபெற்றது. வானத்துக்கு வந்து சேர்ந்த புது நிலவுபோல் அவள் அந்த காலனியின் இளைஞர்களால் பார்க்கப்பட்டாள்.

அவளுடைய பிரியத்தைப் பெறப் பெரிய போட்டியே இருந்தது. ஆனால், அவளுடைய அன்பு அந்த காலனியில் எதற்கும் தகுதியற்றவன் எனத் தந்தையாலேயே கரித்துக்கொட்டப்பட்ட கதிருக்குக் கிடைத்தது. வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் தேவதைப் பெண் அனிதா. கீழ்மத்தியதரக் குடும்பத்தின் பொறுக்கிப் பையன் கதிர். அனிதாவின் தாய்மொழி வடமொழி. கதிரின் தாய்மொழி தமிழ். ஆனால், இவர்களுடைய பொதுமொழியாக மாறியது பார்வையால் பழுக்கும் கனிமொழியான காதல். காதல் பழுக்கும் தருணத்தில் எல்லாம் காலம் குத்தீட்டியுடன் காத்திருக்குமோ?

போர்க்களமா, தீக்குளமா?

தொடக்கத்தில் கதிரை வேண்டா வெறுப்பாகத்தான் பார்த்தாள் அனிதா. கதிரும் அவளை விரோத பாவத்துடன்தான் அணுகினான். தொடர்ந்து அவன் அவளிடம் வம்பிழுத்துக்கொண்டே இருந்தான். ஆனால், கதிருக்குள் அனிதா காதல் விதையைத் தூவிய தருணம் ஓரிரவு. காலனியின் திறந்தவெளி அரங்கில் திரைப்படம் ஒன்று திரையிடப்பட அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

கதிருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவனுடைய தங்கை அருகே அமர்ந்து திரைப்படத்தைக் கண்டுகளித்துக்கொண்டிருந்தாள் அனிதா. யாரோ அழைக்க எழுந்து சென்றுவிட்டாள் தங்கை. இப்போது கூட்டத்தினர் நெருக்க, கதிருக்கு அருகே வந்துவிட்டாள் அனிதா. ஆனால், அதை அவள் அறியாமல் கதிரின் தோள் மீது கைபோட்டு அவனிடம் நெருங்கி இருக்கிறாள். இதெல்லாம் திரைப்படங்களில்தான் சாத்தியம். எந்த இருட்டிலும் அருகே இருப்பது ஆணா பெண்ணா என்பது தெரியாத அளவுக்கு நுண்ணுணர்வு அற்றவளா பெண்?

அந்தத் தருணத்தில் கதிருக்குள் பளிச்சென்ற மின்னல் வெட்டுகிறது. இதுவரை அறிந்திராத தொடுதலும் நெருக்கமும் அவனுக்குள் காதல் மழையைப் பொழிந்துவிட்டுச் செல்கின்றன. அதன் ஈரமும் தண்மையும் அவனது தன்மைக்குள் படர்க்கையைக் கொண்டுவந்து சேர்க்கிறது. இப்போது அவனது நினைவில் அனிதா ஜம்மென்று சம்மணமிட்டு அமர்ந்துவிடுகிறாள். அனிதாவுக்கோ அவன் இன்னும் பொறுக்கிப் பையன்தான்.

அதை உணராமல் அவளும் தன்னைக் காதலிக்கிறாள் என எண்ணி, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் விக்கிரமாதித்தனாகத் தொடர்கிறான் கதிர். இறுதியாக ஒருநாள் பேருந்தின் நெருக்கத்தில் அவளிடம் பரிசொன்றைத் தர முற்படும்போது அவளது மிதியடியால் அடி வாங்குகிறான். அப்போதுதான் கதிருக்குப் புரிகிறது தான் வேறு; அனிதா வேறு என்பது. அவளிடமிருந்து எட்டி நிற்கத் தொடங்குகிறான். ஆனால், காலம் நினைக்கும் நாடகத்தை நடத்தாமல் போகுமோ?

மீண்டும் கதிரின் வழியில் அனிதா வரும் சூழல் கனிகிறது. இப்போது அனிதாவுக்கு கதிரின்மீது பழைய வெறுப்பில்லை என்றபோதும் காதல் சாமரத்தையும் அவள் வீசவில்லை. அனிதாவை அடைய என்ன வேண்டுமானாலும் செய்யும் உன்மத்த நிலையில் கதிர் அவள் சொன்னதை எல்லாம் கேட்டான். அவனைப் பொறுத்தவரை வாராது வந்த மாமணியாக அவன் முற்றத்துக்கு வந்த அந்தி நேரத்துச் சந்திரன் அவள். அந்தப் பொழுதை விடியாமல் பாதுகாக்கவே கதிர் விழைந்தான். அவனது எண்ணத்தைப் போலவே அவனுடைய வாழ்வும் விடியவே இல்லை.

தோளில் சாயும் தோழி

அனிதாவுக்கெனப் பெற்றோரால் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டிருந்தவன் கிஷோர். ஆனால், அனிதாவைக் காலம் கதிருக்காக நிச்சயித்திருக்கிறதே, பிறகெப்படி கிஷோரை அனிதா கரம்பற்ற முடியும்? அனிதா சும்மா ஒன்றும் கதிரைக் காதலிக்கவில்லை. அவனை முழுவதும் மாற்றுகிறாள்.

எதற்குமே பயனற்றவனாகச் சுற்றமும் நட்பும் மட்டுமல்ல; தானே தன்னைக் கருதும் அவனிடம் உள்ள திறமையைக் கண்டறிகிறாள். குடும்பம் கண்டுகொள்ள முடியாத அவனது திறமையை நண்பர்கள்வழி அவள் அறிந்துகொள்கிறாள் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில், அவனை முன்னுக்குக் கொண்டுவர அவள் முன்னெடுக்கும் ஆயுதம் காதல்.

வெறும்பயலாக ஊர்சுற்றிக்கொண்டிருந்த கதிர் ஒரு பொறுப்பான வேலையைப் பெற்றுவிடுகிறான். குடும்பத்தினர் அவனை மதிக்கிறார்கள். இப்போது அவன் பொறுக்கியல்ல. வேலை கிடைத்த பிறகு பொறுக்கி, பொறுப்பானவனாக மாறும் அதிசயத்தைக் காதல்வழியே காலம் நிகழ்த்துகிறது.

இதுவரை சற்று எட்டியே இருந்த அனிதா, கதிரின் அருகில் வரத் தொடங்குகிறாள். காதல் கனிகிறது. கனிந்த காதலில் பழுக்கக் காய்ச்சிய கம்பியைச் சொருகிறது காலம். அனிதாவின் குடும்பத்துக்கு இவர்கள் காதல் தெரியவர, கொதிக்கிறார்கள். அனிதாவைப் பிரித்துச் செல்கிறார்கள். இரவோடு இரவாக வீடு மாறிவிடுகிறார்கள்.

இதன்பின்னர் அனிதா செய்த காரியம்தான் அனிதா பேசப்படக் காரணமானது. அனிதா செய்தது சரியா, தவறா என்ற விவாதம் பலமாக எழுந்தது. அப்படி என்ன செய்தாள் அனிதா? நீங்களோ நானோ பதறும் அளவுக்குத் தப்பான காரியத்தில் அவள் ஈடுபடவில்லை.

பிறகு ஏன் சமூகம் பதறியது? பழமைவாதச் சமூகம் பதறாவிட்டால்தானே வியப்பு? குடும்பத்தினர் தன்னை எப்படியும் கிஷோருக்குத் திருமணம் செய்துவைத்துவிடுவார்கள் என்ற நிலையில் அதை அவளால் எதிர்க்க முடியவில்லை. திருமணத்துக்குமுன், ஒரு நாளாவது கதிருக்கு மனைவியாக வாழ்ந்துவிட வேண்டும் என நினைத்தாள் அனிதா.

தேடி வந்த தேவதை

தன்னைத் தேடித் தேடி வந்து காதலித்த கதிருக்கு ஏதாவது தர வேண்டும் எனப் பிரியப்பட்டாள் அனிதா. அவனுக்குத் தர அவளிடம் என்ன இருக்கிறது? மனத்தை ஏற்கெனவே அவனுக்குத் தந்துவிட்ட அவளிடம் இருந்தவை உடம்பும் உயிரும் மாத்திரமே. ஆகவே, அவள் உடம்பைத் தந்தாள். அதுவும் புதிதல்ல; ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் சரோஜா தன் காதலன் மூர்த்தியிடம் இதே போல் கொள்ளெனக் கொடுப்பாள், அவன் கொள்ளேன் என மறுத்துவிடுவான். சரோஜாவுக்கும் அனிதாவுக்கும் ஒரே ஒரு வேறுபாடு உண்டு. சரோஜா மூர்த்தியைத் திருமணம் செய்துகொள்ளும் உத்தேசத்தில் தன்னைத் தர முன்வந்தாள். ஆனால், அனிதாவோ தனக்கு வேறொருவருடன் திருமணம் என்ற நிலையிலும் தன்னைத் தர முடிவெடித்தாள்.

இரண்டு கதாபாத்திரங்களையும் உருவாக்கிய இயக்குநர்கள் ஆண்கள் என்பது அவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை. அன்று அனிதா கதிருடன் மகிழ்ச்சியாக இருந்தாள்; அதை நினைத்துப் பெருமையும் பட்டாள். மறுநாள் தன் வீட்டுக்குப் புறப்படப் போகும் நேரத்தில் அந்த விபத்து நேர்ந்தது. லாரி ஒன்று அனிதா மீதேறிச் சென்றது. அது லாரியா, சமூகமா? ஏதோ ஒன்று. அதற்கு உயிரைக் கொடுத்தாள் அனிதா.

அனிதா செய்த தவறுக்குத் தண்டனை பெற்றுவிட்டாள் என மரபில் தோய்ந்த மனங்கள் மகிழலாம். நினைத்த வாழ்க்கையை ஒருநாள் அனுபவித்துவிட்டாள், இது போதாதா அவளுக்கு. இனி அவள் இருந்து மட்டும் என்ன செய்ய? நிம்மதியாகக் கண்மூடிவிட்டாள் என அனிதா தரப்புக்கு வக்காலத்து வாங்கவும் சில உள்ளங்கள் இருக்கலாம். திருமணம் என்பதெல்லாம் வெறும் ஏற்பாடுதானே. மனங்கள் பொருந்திய பின்னர் மரபுகளுக்காகக் காத்திருக்குமோ அவை?

செல்வராகவன் இயக்கத்தில் சோனியா அகர்வால், ரவி கிருஷ்ணா ஜோடியாக நடித்த 2004-ல் வெளியான ‘7/G ரெயின்போ காலனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கலைஞர் கருணாநிதி நகரில் நடத்தப்பட்டது.

சென்னையில் ரெயின்போ காலனி என எந்தக் குடியிருப்பும் இல்லை. யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் நா.முத்துக்குமாரின் வரிகளில் வெளியான ‘நினைத்து நினைத்துப் பார்த்தேன்’, ‘கனா காணும் காலங்கள்’ போன்ற இந்தப் படத்தின் பாடல்கள் இளைஞர்களின் விருப்பத்துக்குரியவை.

இந்தி, கன்னடம், வங்கம், ஒடியா ஆகிய மொழிகளில் இப்படம்
மறு ஆக்கம் செய்யப்பட்டது.

(நிழல்கள் வளரும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x