Published : 08 Dec 2019 10:22 AM
Last Updated : 08 Dec 2019 10:22 AM

வாசிப்பை நேசிபோம்: தனிமைக்குத் துணை

எனக்குக் கதைப் புத்தகங்களைப் படிக்கப் பிடிக்கும். சிவசங்கரி, அனுராதா ரமணன், ஜெயகாந்தன், லஷ்மி ஆகியோரின் நாவல்களுடன் பொன்னியின் செல்வன், கடல்புறா என நிறையப் புத்தகங்களைப் பத்திருக்கிறேன். நான் படித்த அரசுப் பள்ளியில் சிறு நூலகம் இருந்தது. ஆசிரியர்கள் அதில் உள்ள புத்தகங்களை மாணவர்களுக்கு வாசித்துக் காட்டுவார்கள். இதனால், சிறுவயது முதலே புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் உண்டானது.

என்னுடைய குழந்தைகளுக்கும் வாசிக்கக் கற்றுக்கொடுத்தேன். அருகே உள்ள நூலகத்துக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். பிள்ளைகள் தற்போது வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றுவிட்டார்கள். வீட்டில் நானும் கணவரும் மட்டுமே இருக்கிறோம்.

என்னுடைய தனிமைக்குத் துணையாக இருப்பவை புத்தகங்களே. இன்றைக்குப் பலர் தொலைக்காட்சித் தொடர்களிலும் கைபேசியிலும் மூழ்கியுள்ளனர். ஆனால், இவற்றால் அளிக்க முடியாத அகமகிழ்ச்சியைப் புத்தகங்களால்தான் வழங்க முடியும். ஆதலால், தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது புத்தகம் படிப்பதை அனைவரும் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

- எஸ். லட்சுமி சண்முகம், கிருஷ்ணகிரி.

நினைவில் நிற்கும் பெயர்கள்

எனக்கு 68 வயதாகிறது. பதிமூன்று வயதில் பெற்றோர் என் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதனால், வீட்டுக்கு வரும் வார இதழ்களில் வெளியாகும் தொடர்களை ஆர்வத்துடன் படிப்பேன். ராஜாஜியின் ராமாயணம், மகாபாரதம், கல்கியின் பொன்னியின் செல்வன், அலையோசை, சாண்டில்யனின் கடல் புறா, யவனராணி, கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம், அகிலனின் பாவை விளக்கு, ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் போன்றவை தொடராக வந்தபோதே படித்திருக்கிறேன்.

சாண்டில்யனின் வரலாற்று நாவல்கள் என்னுள் பிரமிப்பை ஏற்படுத்தின. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவில் இருந்து அழியாதவை. என்னால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லையே என்ற கவலைக்கு இதுபோன்ற புத்தகங்களே ஆறுதலைத் தந்தன. என்னுடைய மகனும் மகளும் புத்தக வாசிப்பைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

- வே.ருக்மணி, கோவை.

கதை சொல்லியாக மாறுங்கள்

எனக்கு ஆன்மிகப் புத்தகங்களும் நாவல்களும் பிடிக்கும். சாண்டில்யன், ஜெயகாந்தன் ஆகியோரின் நாவல்களை விரும்பிப் படிப்பேன். தமிழ்வாணன் எழுதிய மர்ம நாவல்களும், பாலகுமாரனின் நாவல்களும் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும். அந்தக் காலத்தில் வார இதழ்கள், நாவல்களைத் தொடர்களாகச் சுமந்து வந்தன. இப்போதுபோல் அப்போதெல்லாம் புத்தகக் காட்சி நடக்காது. இதனால் வார இதழ்கள்தான் என்னுடைய வாசிப்புக்கு அடித்தளமாக இருந்தன.

என் பிள்ளைகளுக்கும் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளேன். இந்தக் காலத்துக் குழந்தைகள் தொலைக்காட்சிக்குள் மூழ்கியிருக்கிறார்கள். அதனால், என்னுடைய பேரன், பேத்திகளுக்கு நாளிதழ்களில் வரும் சின்ன சின்னக் கதைகளைப் படித்துக் காண்பிப்பேன். இப்போது அவர்களும் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பிள்ளைகள் புத்தகம் வாசிக்க நாம் கதைசொல்லியாக மாற வேண்டும்.

- சுப.நாச்சியார், மதுரை.

கண்டேன் புதையலை

“உண்மையான வாசகன் வாசிப்பதை முடிப்பதே இல்லை” என்ற வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் ஆஸ்கர் வைல்டு. அவரின் கூற்று சரிதான். புத்தகங்களை வாசிக்க மறந்த ஒரு நாள் என் வாழ்வில் இருக்குமாயின் அது நான் சுவாசிக்க மறந்த நாளாகத்தான் இருக்கும். ஏனெனில், நூல்களை நான் நேசிக்கிறேன், சுவாசிக்கிறேன். எப்போதும் வாசித்துகொண்டே இருக்க வேண்டும் என யோசிக்கிறேன்.

மூன்றாம் வகுப்பில்தான் என் வாசிப்புப் பயணம் தொடங்கியது என்றாலும் ஆறாம் வகுப்புப் படித்தபோதுதான் நூலகத்துக்குள் நுழைந்தேன். அதற்குக் காரணம் பேச்சுப் போட்டி. அதற்குக் குறிப்புகள் எடுக்கத்தான் அந்த நூலக நுழைவு. நூலகத்தில் நுழைந்தபோது வறியவன் புதையலைக் கண்டதுபோல நெஞ்சமெங்கும் பரவசத்தை உணர்ந்தேன்.

அப்போது தொடங்கிய வாசிப்பு இப்போதுவரை தொடர்ந்துகொண்டே உள்ளது. கவிதைப் புத்தகத்தை வாசிக்கும்போது என் இதயத்தில் சிறகுகள் முளைக்கின்றன. தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் என் வாழ்க்கைப் பாதைக்கும் வழிகாட்டுகின்றன. அறிவியல் நூல்கள் என் ஆய்வு மனப்பான்மைக்கு விளக்கேற்றுகின்றன.

எனக்குப் பரிசளிக்கப்படும் பொருட்களில் புத்தகங்களையே உயர்வாகக் கருதுகிறேன். என் மழைக்கால மாலை வேளைகள், ஜன்னலோ ரயில் பயணங்கள், அமைதியான முன்னிரவுகள், நடைபாதைக் காத்திருப்புகள், ஓய்வான விடுமுறை நாட்கள் இவற்றை அழகானவையாகவும் அர்த்தமுள்ளவையாகவும் மாற்றுபவை புத்தகங்களே.

‘நூலகங்கள் திறக்கப்படும்போது சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன’ என்பார்கள். உண்மைதான். வாசிப்பை நேசிக்கும் ஒரு சமுதாயம் உருவாகும்போது அங்கே மனிதநேயமும் மாண்பும் மலர்ந்து மணம் வீசும் என்பது திண்ணம்.

- ஒய். பிரான்சிலின் ஜோன், அரக்கோணம்.

எழுதத் தூண்டும் பொழுதுபோக்கு

ஐந்தாம் வகுப்பிலிருந்தே வாசிப்பின் மீதான ஆர்வம் தொடங்கிவிட்டது. எங்கள் வீட்டில் வாங்கும் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழைப் படித்து அதில் புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடுவது அலாதியான மகிழ்ச்சி. வார இதழ்களும் மாத இதழ்களும் என் தொடக்க கால வாசிப்புக்கு அடித்தளமாக இருந்தன. பின்னர் நாவல்களோடு கழிந்த நாட்கள் ஏராளம். ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்கள், பட்டுக்கோட்டை பிரபாகர், லஷ்மி, சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்த நாட்கள் என்றும் வராது.

அந்தக் காலத்தில் தொலைக்காட்சி எல்லாம் கிடையாது. ரேடியோவில் பாட்டுக் கேட்பது அல்லது படிப்பதுதான் பொழுதுபோக்கு. தொடர் வாசிப்புப் பழக்கம் என்னை எழுதத் தூண்டியது. சிறு கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருக்கிறேன். அவற்றில் சில புத்தகங்களில் வெளியாகியும் உள்ளன. இன்றைய தலைமுறையினர் இணையத்தில் மூழ்காமல் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள பல விஷயங்கள் மாறினாலும் வாசிப்பு என்றும் மாறக் கூடாத பழக்கம்.

- வீ.ஸ்ரீவித்யா, ஓசூர்.

துணிவு தரும் வாசிப்பு

வாசிப்பு என்பது சுகமான அனுபவம். என் வாழ்வில் மன உளைச்சல் ஏற்படும்போதெல்லாம் புத்தக வாசிப்பே என் துயரத்தைத் துடைத்துள்ளது. என் தந்தை திராவிடர் கழகப் பற்றாளர். ‘விடுதலை’ நாளிதழ் வீட்டுக்கு வரும். அதில் வரும் அறிவியல்பூர்வமான செய்திகள் என் மூடபழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தன.

கல்லூரிக் காலத்தில் அறிஞர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டபோதுதான் வாசிப்பை நேசிக்கத் தொடங்கினேன். என் வகுப்பாசிரியர் கோ. இளங்கோவன் எங்களை நூலகத்துக்கு அழைத்துச் சென்று விரும்பும் புத்தகங்களை மாணவர்களுக்குக் கொடுத்து மகிழ்வார். மறைந்த வேளாண் விஞ்ஞாணி நம்மாழ்வாரின் சகோதரர் அவர்.

டாக்டர் மு.வ., நா. பார்த்தசாரதி, கி.வா.ஜகநாதன், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், தொ. பரமசிவன் ஆகியோரின் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். பாடப் புத்தகங்கள் தவிர்த்துச் சமூகம் சார்ந்த பல புத்தகங்களை வாசித்ததால்தான் என் பொது அறிவை வளர்த்துக்கொள்ள முடிந்தது. அதனால்தான் என்னால் பொதுப்பணித் தேர்வில் முதல் முயற்சிலேயே வெற்றிபெற முடிந்தது.

என் கணவரும் எங்களுடைய மூன்று மகள்களும் படிப்பதில் ஆர்வமுடையவர்கள். இதனால், நான் விரும்பும் புத்தகங்களை எந்த இடைஞ்சலும் இல்லாமல் எப்போதும் வாசிக்க முடிகிறது. குடும்ப வேலை, அலுவலகப் பணிச்சுமைக்கு இடையிலும் படிக்கும் ஆர்வம் குறையவே இல்லை.

பேராசிரியர் அருணனின் ‘தமிழ் இலக்கிய (வழி) வரலாறு’ என்ற புத்தகம் படித்தபின் ஆழ்ந்த கருத்துள்ள புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். ஐம்பெரும்காப்பியங்கள், திருக்குறள், சமய நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். தமிழின் நீண்ட இலக்கிய மரபு, பன்முக வரலாறு பரவசம் தரக்கூடியதாக இருந்தது. 74 வயதில் நான் தனியாக, துணிவாக இருப்பதற்குப் புத்தக வாசிப்பே காரணம்.

- டி.சிவா, செங்கல்பட்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x