

பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு நாளாக நவம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. ஐ.நா. சபையின் 2017-ம் ஆண்டு அறிக்கையின்படி ஆண்டுக்கு 87,000 பெண் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். பெண்கள், குழந்தைகள் மீது அதிகாரித்துவரும் வன்முறைக்கு எதிராகப் பல்வேறு நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் ஒன்றிணைந்து பெண்கள் மீதான வன்முறை ஒழிப்புக்காக கோஷமிட்டபடி பேரணியாகச் சென்றனர்.
குறிப்பாக இத்தாலி, சூடான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரான்ஸ், இந்தியா, பல்கேரியா, அர்ஜென்டினா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் நடந்த பேரணி முக்கியமானது. குறிப்பாக சிலி நாட்டில் “எங்கள் மீதான வன்முறை கருவிலிருக்கும் போதே தொடங்கிவிடுகிறது. நாங்கள் கருகலைப்பு செய்யப்படுகிறோம், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறோம். அதற்குக் காரணம் அரசு, நீதி அமைப்பு, ராணுவம், அதிபர் என ஆணாதிக்கச் சிந்தனையால் கட்டமைக்கப்பட்ட அமைப்புகளே” என்ற கருத்தை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பெண்கள் ஈடுபட்ட போராட்டம் சமூகவலைத்தளத்தில் வைரலானது.
வில்லுக்கு தீபிகா
இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி 21-ம் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 21-ம் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தீபிகா குமாரி தங்கப் பதக்கமும் அங்கிதா பகத் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர். இப்போட்டியில் வென்றதன் மூலம் டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்காக இரு வீராங்கனைகளுத் தகுதிபெற்றுள்ளனர்.
வன்முறைக்கு எதிரான பயணம்
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 400 கி.மீ. நடைபயணத்தைத் தொடங்கியுள்ளனர். திருவண்ணாமலை, கடலூர் மாவட்டம் வடலூர் ஆகிய இரு பகுதிகளிலிருந்து நவம்பர் 25-ம் தேதி இந்த நடைபயணம் தொடங்கியது. கூட்டுப் பாலியல் வன்முறையால் உயிரிழந்த துடியலூர் சிறுமியின் தாயார் வீரம்மாள், அத்தியூர் சிறுமியின் தாயார் சுகந்தி இருவரும் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். இந்த நடைபயணம் டிசம்பர் 4-ம் தேதி சென்னையில் நிறைவுபெறுகிறது.
குழந்தையுடன் உணவு டெலிவரி
போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் முன்பக்கம் குழந்தையைச் சுமந்தபடியும் முதுகில் உணவு டெலிவரி பையைச் சுமந்துகொண்டும் பெண் ஒருவர் சிக்னலில் நின்றுகொண்டிருந்த ஒளிப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இவர் சென்னை எழும்பூரைச் சேர்ந்த வள்ளி எனத் தெரியவந்துள்ளது. ஊபர் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையைச் செய்துவருகிறார். இவரின் கணவர் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் காவலாளியாக இருக்கிறார். குழந்தையை கவனித்துக்கொள்ள வீட்டில் ஆளில்லாததால் உணவு டெலிவரி செய்யும்போது குழந்தையையும் தன்னுடன் அழைத்துச்செல்கிறார். பகல் 12 முதல் இரவு 9 மணிவரை குழந்தையை வைத்துகொண்டே வேலைசெய்கிறார். தனது இருசக்கர வாகனம் பழுதாகிவிட்டதால் மானிய விலையில் இருசக்கர வாகனத்தை வழங்கி அரசு உதவ வேண்டும் என்பது வள்ளியின் கோரிக்கை.
இப்படிச் சொன்னாங்க
“ஒரு ஹீரோ தான் விரும்பும் பெண்ணை மோசமாக நடத்தும் காட்சியைத் திரையரங்கில் பார்க்கும்போது என் உடல் நடுங்குகிறது. ஆனால், இந்தக் காட்சியை மற்றவர்கள் பார்த்து கைதட்டி ரசிக்கும்போது பெண்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை சரிதான் என்ற சிந்தனை புகுத்தப்படுகிறது. இது ஆண்களிடம் மட்டுமல்லாது பெண்கள் மனத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இரண்டு மணி நேர சினிமா ஏற்படுத்துவது ஒரு சமூகத்தின் மீதான தாக்கம். என்னுடைய வாழ்க்கையில் நானும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை ஆண்களுக்குப் பெண்கள் அடங்கிப்போவது சரிதான் என நினைத்திருக்கிறேன். இதுபோன்ற மோசமான ஆணாதிக்கச் சிந்தனை சரிதான் என்ற கருத்தை இயல்பாக என்னைப் போன்ற ரசிகர்கள் மனத்தில் விதைக்கும் ஆற்றல் சினிமாவுக்கு உண்டு.
சினிமா சாதாரண ரசிகர்கள் மனத்தில் புகுத்தும் இதுபோன்ற சிந்தனை, சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை அதிகரிக்கவே செய்யும். சமூகத்தில் தவறான ஒரு விஷயம் காட்சியாக மிகைப்படுத்தப்படும்போது பெண் வெறுப்பு அல்லது பெண்களிடம் தவறாக நடந்துகொள்வது சரியென்ற சிந்தனையை ரசிகரின் மனத்தில் சம்பந்தப்பட்ட நடிகரும் இயக்குநரும் புகுத்துகிறார்கள். அதற்குப் பதில் அந்த ஹீரோ நடந்துகொண்டது சரியா தவறா என்ற விவாதத்தை ரசிகர்களிடம் முன்வைப்பதுதான் சரியான சினிமாவாக இருக்கும். பெண் வெறுப்பு மிகைப்படுத்தப்படும் திரைப்படங்களை நான் எதிர்க்கிறேன். அதற்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுப்பேன்”
- நடிகை பார்வதி, 100 Greatest Performances of The Decade என்ற விவாத நிகழ்ச்சியில் சொன்ன கருத்தின் சுருக்கம்.