Published : 01 Dec 2019 10:59 AM
Last Updated : 01 Dec 2019 10:59 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 34: செல்லாயியைத் தெரியாத டிக்கெட் பரிசோதகர்

கயிறு திரிக்கும் சங்குத் தாத்தாவோடு மூன்று மாட்டு வண்டிகளில் இருவத்தி ஐந்து பெண்களும் தங்களின் பழைய சேலைகளில் முடிந்திருந்த பொட்டணங்களோடு ஏறிக்கொண்டார்கள். ஏகாம்பரம், கோதண்டம், வைத்தி மூவரும் வண்டிகளை ஓட்டி வந்தனர். செல்வராசு இவர்கள் வருவதற்கு முன்பே ரயிலில் போவதற்கும் வருவதற்குமான டிக்கெட்டுகளோடு நின்றிருந்தார்.

மாட்டு வண்டியிலிருந்து மூட்டை முடிச்சுகளோடு விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய பெண்களுக்கு இருந்த சந்தோஷத்தில் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்க வேண்டும் போலிருந்தது. தங்கள் ஊரைச் சுற்றி இருந்த பிஞ்சைகளுக்கும் வயல்களுக்கும் மட்டும்தான் அவர்கள் தனியாகப் போயிருக்கிறார்கள். அதோடு தங்களின் சொந்த பந்தங்கள் இருந்த பக்கத்து கிராமங்களுக்கும் போயிருக்கிறார்களே தவிர, இந்த மாதிரி தூர தொலைவுக்கு அதுவும் ஒரேயொரு ஆண் துணையோடு ரயிலில் இப்படிப் போனதில்லை.

தின்பண்டத்தோடு வெத்தலையும்

இந்நேரத்துக்கு ஏகாம்பரம், கோதண்டத் தோடு செல்வராசு அண்ணனும் வந்தால் இன்னும் நல்லாயிருக்கும் என்று எண்ணி ஏங்கினர். இதைப் பற்றி அவர்களிடம் சொன்னால் நீங்கள் ராமேசுவரத்துகே போக வேண்டாமென்று திரும்பவும் மாட்டு வண்டியில் ஏறச் சொல்லிவிடுவார்களோ என்று பயந்துபோய் ஆளாளுக்கு முகம் பார்த்தபடி தயக்கத்தோடு நின்றிருந்தார்கள். ஆனாலும், செல்லாயி தங்கள்கூட இருக்கும் துணிச்சலில் அவர்களின் மனம் கொஞ்சம் தெளிவு கண்டிருந்தது.

இரண்டு நாளுக்கான சேலை, தலை துவட்ட துண்டு, படுப்பதற்கு வெளுத்த சீலை என்று பெரிய பொட்டணங்களோடு ஒரு சிறிய பொட்டணமும் இருந்தது. அதில் தின்பண்டத்துக்காக வறுத்த சோளப்பொரி, தும்பைப்பூவாய் விரிந்திருந்தது. சுட்ட சீனிக்கிழங்கு, வறுத்த நிலக்கடலையையும் வறுத்த எள்ளையும் பனங்கற்கண்டோடு கலந்து சிறு முடிச்சில் கட்டியிருந்தார்கள். நனைத்த துணியில் வெற்றிலையையும் சிறு முடிச்சின் ஓரமாய்ச் சிறு கொட்டைப் பாக்குகள், வாழை மட்டையில் கொஞ்சம் மட்டமான மணம் வீசும் போயிலையை மடி நிறைய வைத்திருந்தனர். சங்குத் தாத்தா மடியில் இறுக மூடிய சுண்ணாம்பு டப்பாவும் இருந்தது.

‘கம்பரிசி கோளி’ முட்டைக்கு வரும்

செல்வராசு எல்லோருடைய கையிலும் டிக்கெட்டைத் தலை எண்ணிக் கொடுத்தார். அப்படி கொடுக்கும்போதே, “இங்க பாருங்க. இந்த டிக்கெட்டு உங்களுக்கு ராமேசுவரத்துக்குப் போவவும் வரதுக்குமான டிக்கெட்டு. இதைப் பத்திரமா வச்சிக்கோங்க. அருவாளை அங்கன போட்டேன் காணம்; களசொறட்டிய இங்கன போட்டேன் காணமின்னு சொன்னதுபோல இந்த டிக்கெட்டையும் சொன்னீகளோ, அம்புட்டுத்தேன்.

எங்கனயாவது வழியில உங்களை எறக்கி விட்டுடுவாங்க. பெறவு உங்க பாட்டுக்கு அங்கனயே கெடக்க வேண்டியதுதேன். ரொம்ப சூதானாம அவரவர் டிக்கெட்டை அவரவர் பத்திரப் படுத்திக்கோங்க” என்று சொல்லி முடிக்கும் முன்பே ரயில் பெரிய கூப்பாடோடு வந்து நின்றது. அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து எல்லோரும் விழிதெறிக்க நின்றபோது, ஏகாம்பரம் அவர்கள் மீது எரிந்து விழுந்தார்.

“ஏ கழுதைகளா... ரயிலு வந்து நிக்கையில நீங்க ஏற வேண்டாமா? அங்க என்னத்தப் பார்த்துக்கிட்டு நிக்கீக?” என்று சத்தம்போட்டார். எல்லோரும் மூட்டை முடிச்சுகளைத் தூக்க, “நீங்க ஒண்ணும் தூக்க வேணாம். விருட்டுனு வண்டியில ஏறுங்க. நாங்க மூட்டை முடிச்சத் தூக்கி வைக்கோம்” என்று சொல்ல எல்லோருக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. துள்ளிக்கொண்டு ஏறி ஆளாளுக்கு ஒரு இடத்தில் உட்கார்ந்தார்கள்.

கோதண்டம் செல்லாயியிடம் போய், “தாயீ நீதேன் கொஞ்சம் வெவரக்காரி. நாலஞ்சிதரம் டவுனு, மருதயின்னு போயி வந்திருக்கே. அதேன் இவுகளைத் தெம்பா உன்கூட அனுப்புதோம். பார்த்து ஒருத்தருக்கு ஒரு சேதாரமில்லாம பத்திரமா கூட்டிட்டு வா” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ரயில் விருதுநகரை விட்டுப் புறப்பட்டது. டாடா, சீயு எல்லாம் அந்தக் காலத்தில் இல்லாததால் “அண்ணே, மச்சான், சின்னய்யா போயிட்டு வாரோம்” என்றார்கள். கரிச்சா மட்டும், “அந்த ‘கம்பரிசி கோளி’ முட்டைக்கு வரும்” என்று சொல்லிக்கொண்டிருக்க, அந்தச் சொல் காற்றோடு கலந்து யார் காதிலும் விழாமல் போனது.

பிரித்துவைத்த ரயில் பொட்டி

வண்டியில் ஏறியவர்களுக்கு ஏறியபோது இருந்த சந்தோசம் இப்போது இல்லை. அப்பவும், “ஒரே ரக்குல எல்லாரும் ஒண்ணா உக்காருவோம்னு நினைச்சி நாம் எம்புட்டு சந்தோசப்பட்டுக்கிட்டு இருந்தேன். இப்படிச் சின்ன சின்ன பொட்டியா வச்சி நம்மளைப் பிரிச்சில்ல போட்டான்” என்று வருத்தமும் அங்கலாய்ப்புமாக ராசகிளி வேதனைப்பட்டான் கரிச்சாவோ, “ஏ எக்கா செல்லாயி... இந்த ரயிலு ஓடுத ஓட்டத்துல மரமும் செடியும் கொடியும் பின்னுக்குப் போவுதா முன்னுக்குப் போவுதான்னு தெரியல. அதைப் பார்க்கையிலே மேலெல்லாம் புல்லரிக்குக்கா” என்றாள் குதியாளமும் கும்மரிச்சமுமாக.

“ஏத்தா நீ டிக்கெட்ட எங்க வச்சிருக்க?” என்று ஆவடை ராசகிளியைக் கேட்க, “அய்யய்யோ கொடுமையே. வெத்தலப் பொட்டணத்துக்குள்ள ஒண்ணாவில்ல சொருவிட்டேன். நனஞ்சி போச்சோ என்னமோ” என்று பதற்றத்தோடு மடியிலிருந்து எடுத்த ராசகிளி பெருமூச்சுவிட்டாள். பிறகு, “இது நமக்குத் தோதுபடாது. மடியில இருக்க வெத்தலய எடுக்கேன்னு டிக்கெட்ட எங்கனயும் போட்டாலும் போட்டுருவேன்.

பேசாம அக்கா செல்லாயிகிட்ட கொடுத்துரப் போறேன். அவன்னா பத்திரமா வச்சிருப்பா” என்று சொல்லிவிட்டு செல்லாயியிடம் கொண்டுபோய் கொடுக்கப்போனார் பொன்னழகி, “ஏ ராசகிளி வெத்தலப் பொட்டணத்தை எடுக்கயிலன்னு சொன்னயே அப்படி வெத்தலய போட்டேன்னா எச்சிய எங்கன துப்புவே” என்றாள். “நீ சொல்லதும் நெசந்தேக்கா. இருந்தாலும் அயத்தாப்பல மடிய தொட்டுட்டேன்னா டிக்கெட்டு கீழ உளுந்துருமில்ல. அப்படி உளுந்துருச்சின்னா வண்டிக்குள்ள காத்து அடிக்க அடியில டிக்கெட்டு எங்கிட்டும் பறந்து போயிருமில்ல. இதெதுக்கு நமக்கு வம்பு? பேசாம செல்லாயிக்காகிட்ட கொண்டுபோயி குடுத்துரப் போறேன்” என்று சொல்லியவாறு டிக்கெட்டோடு செல்லாயியிடம் போனாள்.

பெரியாத்தா தேவியாரு மக

“நீ சொல்லதும் சரித்தேன். எல்லோரும் அவகிட்டயே கொடுத்துருவோம். அவ சமத்தாளி, கணக்காளி” என்று சொல்லிக் கொண்டு எல்லோரும் ஒன்றுபோல் டிக்கெட்டுகளை அவளிடம் கொடுத்தார்கள்.

செல்லாயியும் அவற்றைத் தன் கொசுவத்தின் ஓரம் சொருகியிருந்த சுருக்குப்பையில் போட்டு வைத்துக் கொண்டாள். கரிச்சா, பொன்னழகிக்கு முதல் பெட்டியும் செல்லாயியிக்கும் அவளைச் சேர்ந்தவர்களுக்கும் மூணாவது பெட்டிக்குப் பக்கத்திலும்தான் இடம் கிடைத்தது.

பாதி தொலைவுதான் ரயில் போயிருக்கும். டிக்கெட் பரிசோதகர் வந்துவிட்டார். வந்ததுமே முதல் பெட்டியில் உட்கார்ந்திருந்த கரிச்சா, பொன்னழகி, ஆவடையிடம் டிக்கெட்டைக் கேட்டார். “எய்யா எங்க டிக்கெட்டையெல்லாம் செல்லாயிகிட்ட கொடுத்து வச்சிருக்கோம். போயி கேட்டு வாங்கிக்கோங்க” என்றார்கள். உடனே அவர், “நான்சென்ஸ். அவங்கவங்க டிக்கெட்ட அவங்கவங்கதான் வச்சிருக்கணும். செல்லாயியா? அது யாரு?” என்று கேட்க, கரிச்சா சும்மா இருக்காமல், “என்னய்யா வெள்ளைச் சட்டை, வெள்ளைக் கொளாயெல்லாம் போட்டுருக்கீங்க. எங்க பெரியாத்தா தேவியாரு மவ செல்லாயிய தெரியாதுன்னு சொல்லுதீக? இதுல டிக்கெட்டு வேல வேற பாக்க வந்துட்டீக” என்று சொல்லவும் டிக்கெட் பரிசோதகருக்கு வந்த கோபம் அவரது உச்சி மண்டையையே எரித்தது; கண்கள் சிவந்துபோயின.

(நிலா உதிக்கும்)
- பாரததேவி, எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x