

திருமணம், வரவேற்பு போன்ற குடும்ப விழாக்களில் இசை நிகழ்ச்சி, நடனம், விருந்து போன்றவற்றை தாண்டி, மணமகன், மணமகளின் தனித்திறனை வெளிப்படுத்தும் கண்காட்சிகள் நடைபெற்றுவருவது ஆரோக்கியமானது. எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் திருமண விழாக்களில் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டிப் பேசுவார். “இரண்டு நாற்றுகளுக்கு இடையே போதிய இடைவெளி விட்டு நடும்போதுதான் இரண்டும் நன்றாகச் செழித்து வளரும்.
அதுபோல, திருமணம் முடிக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சிறு இடைவெளி இருந்தால்தான் இருவரின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். அடுத்தவரின் திறமைகளை உணர்ந்துகொள்ளவும் அவற்றை அங்கீகரிக்கவும் இந்த இடைவெளி தேவை. அது சமூகத்துக்கும் பயன்படும். நகமும் சதையும் போல் வாழ வேண்டும் என்றெல்லாம் வாழ்த்துவதில் பயனில்லை” என்று முடிப்பார்.
விசாகப்பட்டினத்தில் வங்கி அதிகாரியாகப் பணிபுரியும் ஜனனி என்கிற மீனாம்பிகாவுக்கும் கனடாவில் பொறியாளராகப் பணியாற்றும் திலக் என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. இவர்களுடைய வரவேற்பு விழாவில், மணமகள் மீனாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவை சுவரோவியம், கோண்ட் ஓவிய வகையைச் சார்ந்தவை.
கோண்ட் ஓவியக்கலை, இந்தியாவின் திராவிட இன பழங்குடி மக்களான கோண்ட் மக்களின் ஓவியக்கலை. மனிதர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள இணைப்பைக் காட்டும் விதமாகவும் தங்களின் பெண் தெய்வங்களின் உருவங்களையும் அவர்கள் ஓவியங்களாக வரைகிறார்கள்.
கோண்ட் பழங்குடியினர் தங்கள் வீட்டு விசேஷங்கள், திருமண நிகழ்ச்சிகளின்போது, வீட்டுச் சுவர்களில் இந்த ஓவியங்களை வரைவார்கள். தீய சக்திகளிடம் இருந்து இந்த ஓவியங்கள் தங்களைக் காக்கும் என்றும் நம்புகிறார்கள். ஓவியம் வரைய கரி, மண், தாவரங்கள், மாட்டுச் சாணம் போன்றவற்றில் இருந்தே வண்ணங்களைத் தயாரிக்கிறார்கள்.
தன் அம்மா தாராவைப் பார்த்து ஓவியம் கற்றுக்கொள்ளப் பழகியிருக்கிறார் மீனாம்பிகா. இவரது ஓவியக் கண்காட்சியைத் திரைக்கலைஞர் ரோகிணி திறந்துவைத்தார்.
- நெல்லையூரான்