

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள மாட்டு மேஸ்திரி சந்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் எஸ்.ஆர்.பி. சைக்கிள் கம்பெனி என்ற பெயரில் ஒரு வாடகை மிதிவண்டி நிலையம் இருந்தது. அதை நடத்தியவர் தோழர் ரமணி என்று நண்பர்கள் வட்டத்தில் அறியப்பட்ட ரமணி பிரபாகரன். சந்துக்குள் ஓரமாக ஒரு நீளபெஞ்சு. அதன்மீது ஒரு கல்லாபெட்டி. கல்லாபெட்டி மீது மிதிவண்டி வாடகைக் கட்டண நோட்டு. எதிரே நிறுத்தியும் சாய்த்தும் வைக்கப்பட்ட சில சைக்கிள்கள். இவைதான் கம்பெனியின் சொத்து.
கடைக்கு வரும் கம்யூனிஸ்ட் தோழர்களால் ‘தஞ்சையின் செஞ்சதுக்கம்’ என்று பெருமையுடன் குறிப்பிடப்பட்ட இப்பகுதிக்கு ரமணியின் சைக்கிள் கடை என்பது ஒரு தகவல்மையம். விவசாயிகளும் தொழிலாளிகளும் மாணவர்களும் வேலைதேடும் இளைஞர்களும் எவ்வித வேறுபாடும் இன்றி மகிழ்ந்து உறவாட கடையில் போட்டிருந்த பெஞ்சு இடம் கொடுத்தது. சிலநேரம் பேருந்தைத் தவறவிட்டவர்களும் இரவைக் கழிக்க பெஞ்சு அடைக்கலம் கொடுத்தது. அப்போதெல்லாம் ரமணியின் தாயார் காட்டிய அன்பு அலாதியானது. ஒரு சொம்பில் அவர் தருவிக்கும் ஓட்டல் தேநீரைப் பருகியவர்கள் பாசத்தின் ருசியையும் உணர்ந்தார்கள்.
வற்றாது பாயும் நட்பு நதியின் படித்துறையாக ரமணி கடை இருந்தது. பலதரப்பட்டவர்களும் இந்தப் படித்துறையில் உட்கார்ந்து ஓய்வெடுத்தார்கள்; குளித்தார்கள். நதிக்குள் நீந்தி மகிழ்ந்தார்கள். வாழ்க்கைப்பாடுகளின் நிமித்தம் வெவ்வேறு திசைகளில் அவர்கள் பயணம்செய்ய நேர்ந்தது. நாற்பது ஆண்டுகள் ஓடியே போய்விட்டன.
காலவெள்ளத்தில் கரைந்த கடை
ரமணி கடையில் கூடிய நண்பர்கள் இன்று அரசியல், எழுத்து, கலை எனப் பல துறைகளில் இருக்கின்றனர். எல்லோரிடமும் ஒரு ஒற்றுமை இருந்தது. ரமணி கடையை அவர்கள் மறக்கவில்லை. ரமணியின் தாயார் அம்மாக்கண்ணு அம்மாளை மறக்கவில்லை. காலவெள்ளம் ரமணி கடையை அடித்துக்கொண்டு போய்விட்டது. அதே சிறிய ஓட்டு வீட்டில் ரமணி மிச்சமிருந்தார். அவர் குடும்பம் இருந்தது. குழந்தைகள் பெரியவர்களாகியிருந்தனர்.
ரமணிக்கு என்ன செய்வது? ஏதாவது செய்தே ஆகவேண்டுமே. ரமணி கடை நண்பர்கள் சிலர் ஒன்றுகூடி ரமணி என்ற அந்த சாமானிய மனிதருக்கு விழா எடுக்க முடிவுசெய்தனர். ரமணி கடையோடு தொடர்புடைய நண்பர்களைத் திரட்டுகிற சவாலான பணியை பொறியாளர் செல்வபாண்டியனும் கென்னடியும் வெற்றிகரமாகச் செய்துமுடித்தனர்.
தஞ்சை பெசன்ட் அரங்கில் நடந்த விழாவில் பேச்சைவிட கண்ணீர் அதிகம் பகிரப்பட்டது. தங்களின் உயர்வுக்கு ரமணி கடை ஏதோவொரு வகையில் உதவியிருக்கிறது என்று ஏகோபித்த குரலில் மேடையேறி ஊரறியச் சொன்னது அந்த நண்பர் கூட்டம். ரமணி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். இப்படி ஒரு விழாவை அவர் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்த்து எந்த உதவியும் அவர் செய்ததும் இல்லை. அவர் மனத்தில் ஒரே குறைதான். இதைப் பார்க்க அம்மா இல்லை.
விழாவில் பங்கேற்பதற்கென்றே சிங்கப்பூரில் பொறியாளராக இருக்கும் இராமநாதன் அங்கிருந்து பறந்து வந்தார். ரமணியை ஆரத்தழுவினார். ரமணிக்காகச் சேகரித்த உதவித்தொகையில் அவர் பங்கு பெரிது. “ரமணியின் அம்மாவிடமிருந்து நான் பெற்றது இதைவிட அதிகம்” என்று கண்ணீருடன் சொன்னார் அவர்.
சேர்த்துவைத்த சைக்கிள்
தமிழ்க்கூறு நல்லுலகம் நன்கறிந்த பேராசிரியர் அ.மங்கை, பேராசிரியர் வீ.அரசு இணையர் தஞ்சையின் புதல்வர்கள். தன்னையும் தன் கணவரையும் இணைத்து வைத்தது ரமணி கடைதான் என்று மங்கை சொன்னதும் பேராசிரியர் அரசு முகத்தில் வெட்கமும் பெருமிதமும். வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு போய் தன் வருங்காலக் கணவரைச் சந்தித்த காதல் கதையை அவர் சுவைபடச் சொன்னார். தன் குடும்பத்தில் ரமணி் கடை ஒரு நாட்டுப்புற இதிகாசத் தன்மையுடன் நினைவுகூரப்படுவதாகவும், கனடாவில் வசிக்கும் மகள் தன் ஆய்வுக்கு வாடகை சைக்கிளின் சமூகத்தாக்கம் என்னும் பொருளை எடுத்துக் கொண்டிருப்பதில் தனக்கு பெருமை உண்டு என்றும் சொன்னார்.
எழுபதுகளில் தஞ்சை வட்டார கிராமத்து இளைஞர்களை நகரத்துக்கு ஈர்த்தது வாடகை சைக்கிள் நிலையங்கள்தாம் என்றும் அதில் ரமணி சைக்கிள் கடைக்குப் பெரும் பங்கு உண்டு என்றும் பேராசிரியர் அரசு குறிப்பிட்டார். “கிராமங்களிலிருந்து பேருந்தில் தஞ்சை வந்து ரமணி மிதிவண்டி நிலையத்தில் சைக்கிளை வாடகைக்கு எடுத்து நகரை வலம் வந்து திரைப்படம் பார்த்துத் திரும்பினார்கள். ரமணி கடையில் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். புதிய உலகம் கிடைத்தது. சைக்கிளில் செல்லும்போது எதிர்கொள்ளும் திருப்பங்கள்போல் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது ரமணி வாடகை மிதிவண்டி நிலையம்” என்றார் பேராசிரியர் அரசு.
பெண் விடுதலையின் அடையாளம்
“வாடிக்கையாளரின் இன்ப துன்பங்களிலும் பங்கேற்று சிறிதும் பெரிதுமாக உதவியிருக்கிறார் ரமணி. இவர் பழம்பெரும் எழுத்தாளர் கு.ப.ரா.வின் பிள்ளை பட்டாபிராமனின் அந்திமக் காலத்தில் அவரை வைத்து ஆதரித்திருக்கிறார்” என்று பேராசிரியர் மதிவாணன் நெகிழ்ந்தார்.
சின்னஞ்சிறிய முகவரியில் இயங்கிய ரமணி கடை பலருக்கும் பெரிய முகவரியை பெற்றுத்தந்தது என்று குறிப்பிட்டார் மற்றொரு நண்பர். மூத்த எழுத்தாளர் பொதியவெற்பன், வைகறைவாணன், பொதுவுடமைக் கட்சித் தோழர்கள் சி.அறிவுறுவோன், பெ. மணியரசன், பேராசிரியர் இளமுருகன், தருமராஜ், பள்ளித் தோழர் பி.வெங்கட்ராமன், உயர் அலுவலர்கள் என நட்பில் பூத்த மலர்களால் அரங்கு நிரம்பியிருந்தது.
பேசும்போது சிலர் மேடையிலேயே நெகிழ்ந்தார்கள். கண்ணீர்வழிய சிலையானார்கள். ரமணியைக் காட்டி ஏதோ சொல்ல முயன்று தோற்றார்கள். “அக்காலத்தில் பெண் விடுதலையின் அடையாளமாக சைக்கிள் இருந்தது. தெருவில் சைக்கிள் மணியடித்தபடி வந்த பெண்ணுக்கு சமுதாயம் நகர்ந்து வழிவிட்டது. தஞ்சாவூரில் முதன்முதலாக வாடகை சைக்கிள் ஓட்டிய பெண் நான்தான். அதுவும் ரமணி கடை வாடகை சைக்கிள்” என்றார் உஷாதேவி, கைதட்டலுக்கு மத்தியில்.
அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்து கொண்டிருந்தது. மேடைகளில் பொன்னாடைகளால் ரமணி திணறிக் கொண்டிருந்தார். அரங்குக்கு வெளியே வந்தேன். பிரமிப்பாக இருந்தது. ஒரு சாமானிய மனிதருக்கு இதைவிடப் பெரிய கெளரவத்தை அவர் வாழ்கிற சமூகம் அளித்துவிட முடியாது.
- மகிழினி