நட்சத்திர நிழல்கள் 34: வீழ்வதில் மகிழும் அருவி

நட்சத்திர நிழல்கள் 34: வீழ்வதில் மகிழும் அருவி

Published on

சில மனிதர்கள் நம் எதிரே வந்துகொண்டே இருப்பார்கள். ஆனால், ஏனோ அவர்கள் நம் கவனத்தில் பதிவதில்லை. திடீரென்று ஏதேனும் ஒரு நாளில் அவர்கள் நம் கவனத்தை ஈர்ப்பார்கள். அதன் பின்பு இத்தனை நாள் எப்படிக் கவனிக்காமல் இருந்தோம் என்ற கேள்வி நம்மைக் குடையத் தொடங்கிவிடும். இதைப் போலவே சில கதாபாத்திரங்களும் உள்ளன. ஒரே நாளில் எல்லாமே தலைகீழாக மாறிவிடும் அதிசயம் எப்படி நேர்ந்தது என்பதே புரியாது. ஆனால், சிலருக்கு இப்படியான தலைகீழ் மாற்றம் பெரும் தலைவலியாகவும் போய்விடும். இந்த இரண்டு தன்மைகளிலும் பொருந்திவிடுகிறாள் அருவி.

அந்த எளிய குடும்பத்தின் தலைச்சன் குழந்தை அவள். அப்பாவின் செல்லப் பிள்ளை. அவளைத் தூக்கிவைத்துக் கொண்டிருந்தபோது, “சிகரெட் பிடிக்காதீங்கப்பா நாறுது” என்று அவள் சொன்ன காரணத்துக்காக அவர் சிகரெட்டை தூக்கி எறிந்துவிட்டார். அதே குழந்தை வளர்ந்தாள், எதிர்பாராதவிதமாக அவளை ஒரு நோய் தாக்கிற்று. உடனிருந்து அவளைத் தேற்ற வேண்டிய தந்தை அருவியைத் தூக்கி எறிந்துவிட்டார், மனத்திலிருந்தும் வீட்டிலிருந்தும். அவளுடைய தம்பி கருணாகூட அவளை வெறுத்து ஒதுக்கிவைத்துவிட்டான். அதன் பின்பு அருவியின் வாழ்க்கைப் போக்கு எல்லாமே மாறிவிட்டது.

அழிக்கவியலாத கறை

குடும்பத்தினரின் பெருமையாக இருந்த அருவி சிறுமைக்கு ஆளானாள்; துன்பத்தின் பாதையில் விழுந்துவிட்டாள். அருவி விழும் தடாகத்தின் ஆழம் கண்டு பயந்த அந்தச் சிறுமியை வாழ்க்கை அதலபாதாளத்தில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்தது. கூந்தலை வாரியபோது வலிக்குது எனச் சிணுங்கிய குழந்தையின் வாழ்க்கையில் அவிழ்க்க முடியாத சிக்கலைப் போட்டது காலம்.

ஆசிரியர் கிள்ளியதால் ஏற்பட்ட வலியைவிட அவரது கைபட்ட கறையை நீரால் அழுத்தி அழுத்திக் கழுவிய அந்த அருவியின் வாழ்வு அழிக்கவியலாத கறையாய்ப்போனது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் தாத்தா ஏந்தியிருந்த துப்பாக்கியைத் தானும் ஆயுதமாகப் பயன்படுத்துவோம் என்பதை குழந்தைப் பருவத்தில் கற்பனைகூடப் பண்ணியிருக்க மாட்டாள் அருவி. எல்லோரையும் சிரிக்கவை, அழவை என்று கோரிய அருவியின் கண்களில் பேரருவியைக் காண ஏனோ காலம் ஆசைப்பட்டது.

குடும்பத்தால் கைவிடப்பட்ட அந்த நேரத்தில் அவள் மீது நேசம் செலுத்தி அவளை அன்புடன் பராமரித்தவள் திருநங்கையான எமிலிதான். அவளும் அவளைப் போலவே ஹெச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளானவள். ஒவ்வொருவருக்கு ஒரு நோய் வருகிறது. அவளுக்கு எய்ட்ஸ் வந்துவிட்டது அவ்வளவுதான். எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட அருவிக்கு அனுசரணையாக இருக்க வேண்டிய குடும்பம் அவளை வெறுத்து வெளியேற்றியதன் காரணம் நோய் குறித்த புரிதலின்மை.

குடும்பத்தின் பெருமைக்குக் களங்கம் என அவர்கள் நம்பினார்கள். எப்படி வெளியே தலைகாட்ட முடியும் எனக் கலங்கினார்கள். பருவ வயது மகளுக்கு எய்ட்ஸ் என்றால் அது தவறான நடத்தையால்தான் என்ற தப்பெண்ணம் அவர்களைத் தவறான முடிவெடுக்கவைத்தது. அருவியின் அப்பாவும் அம்மாவும் அவளிடம் நடந்துகொண்டவிதம் கொடுமையானது. தம் குழந்தையைத் தாங்களே சந்தேகப்பட்டார்கள். அருவி சொன்ன சத்தியம் எடுபடாமல் போனது. கடவுளை எளிதாக நம்பும் மனிதர்கள் அவளை நோய் தாக்கிய காரணம் அறிவியலுக்குப் பொருந்தவில்லை என்று ஒதுக்கினார்கள்.

இதுவரை வீட்டில் பாதுகாப்பாக இருந்த அருவி சமூகத்துக்குள் விழுந்தாள். அவளுக்கு உதவ ஆட்கள் இருந்தார்கள். அதற்கு அவள் அழகும் ஒரு காரணமாக இருந்தது என்பது வேதனையான உண்மை. அப்பா போன்ற வயதுடையவர், ஆன்மிகக்காரர், ஆபத்துக் காலத்தில் உதவியவர் என மூவருமே அவளைச் சுரண்டினார்கள். அவர்கள் செய்த தவறை மன்னிக்கக்கூட அருவி தயாராகத்தான் இருந்தாள். அதெல்லாம் எப்படி ஒரு பெண் மன்னிப்பாள் என்று கேட்கும் உங்கள் நியாயம் சரிதான்.

ஆனால், மரணத்தை எதிர்நோக்கியிருந்த அந்தப் பெண்ணுக்கு வாழ்க்கைமீது பெரிய பிடிப்பில்லை. அவர்களைப் பழிவாங்குவதில் நம்பிக்கை இல்லை. எனினும், தாங்கள் செய்தது தவறு என்பதை அவர்கள் உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அருவி கோரினாள். அதையும் மறுத்து ஆணாதிக்கத்துடன் திமிர்ந்து எழுந்து நின்றபோது, அவளுடைய மென்மையான கரங்களில் தோட்டாக்கள் நிறைந்த துப்பாக்கி துளிர்த்தது. அன்புக்கு அடிபணியாதவர்களை ஆயுதத்தால்தானே மிரட்டும் உலகம்?

பத்தினியுமல்ல பரத்தையுமல்ல

அவள் பாதிக்கப்பட்டவள் என்பதை அறிந்தபிறகும், தீர்வு தேடித் தங்கள் நிகழ்ச்சியை அணுகியிருக்கிறாள் என்றபோதும் நிகழ்ச்சி இயக்குநர் அவளைத் தனியாகத் தன்னைப் பார்க்க வரச் சொல்கிறார் எனும்போது அவரது கையிலாவது தோட்டாவைச் செலுத்தாவிட்டால் எப்படி? பிறகெதற்கு அவள் கையில் துப்பாக்கி ஏந்த வேண்டும்? துப்பாக்கி முனையில் எல்லோரையும் மிரட்டி அவள் விளையாடிக்கொண்டிருக்கிறாள் என்பது உங்களுக்கு வேடிக்கையாகத் தெரியலாம். ஆனால், வாழ்க்கை அதைவிடக் கொடுமையாக அவளிடம் விளையாடியிருக்கிறதே? தர்மநியாயங்களை அவளிடம் நீங்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேசுவீர்கள்?

அவள் காதலை யாசித்தாள்; அவளுக்குக் கிடைத்ததோ வல்லுறவு. மலர் நிறைந்த பாதையில் செல்ல விரும்பிய அவள் பாதங்களை முட்களே பதம் பார்த்தன. ஆகவே, அவள் வேளை கிடைக்கும்போது, வாழ்க்கையை வேடிக்கை பார்த்தாள். பத்தினி என்றோ பரத்தை என்றோ நீங்கள் பார்க்கும் பார்வையை அவள் காலில் போட்டு மிதித்தாள். குடும்பமும் சமூகமும் அருவியை ஒழுங்காக நடத்தவில்லை. ஆகவே, அவளைக் குற்றப்படுத்தும் தார்மிகத் தகுதியைக் குடும்பமும் சமூகமும் இழந்துவிடுகின்றன. பாசமிகு தந்தை அவள் மீது எப்போதும்போல் பாசமாக அவளை வீட்டிலேயே வைத்துப் பராமரித்திருக்கலாமே, அவளை ஏன் வீட்டைவிட்டு விரட்டினார்?

எப்படியோ அவளுக்கு எய்ட்ஸ் வந்துவிட்டது. அதற்கான காரணத்தை ஆராய்ந்துகொண்டிருப்பதில் என்ன பயன்? அவளைக் குணப்படுத்தவும் அவளைத் தேற்றவும் என்ன செய்ய வேண்டும் எனத்தானே ஒரு தந்தை யோசித்திருக்க வேண்டும்? ஆனால், அதை விடுத்து தந்தை கலாச்சாரக் காவலர் வேடம் எடுத்ததில் என்ன நியாயம் இருக்க முடியும்? அதற்குச் சமூக அழுத்தம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். என்றபோதும், ஒரு பெண்ணை வெளியுலகம் ஆயிரம் சொன்னாலும், அவளைக் குடும்பத்தினர் கௌரவமாக நடத்தினாலே அவளுக்கு யானை பலம் கிடைத்துவிடுமே? அதைச் செய்யாமல் குடும்பங்கள் இத்தகைய பெண்களைக் கைவிடுதல் எப்படிச் சரியாகும்?

தன்னை வெளியே துரத்திய தந்தை நோயில் விழுந்துகிடந்தபோது தன்னைப் பற்றிக் கவலைகொள்ளாமல் தன்னால் இயன்ற தொகையைப் புரட்டிக் கொடுத்த அருவியை, அவரைப் பார்க்கக்கூட அனுமதிக்காத குடும்பத்தினர் அவளுடைய சீரழிவுக்குக் காரணம்தானே? ஆசிரியர் என்ற போர்வையில் கண்ட இடத்தில் கிள்ளிய ஆணை என்ன செய்வது? மகள் வயதையொத்த பெண்ணிடம் தன் பசி தீர்த்த ஆளை என்ன சொல்வது? ஆன்மிகப் போர்வையில் தன் குளிர்போக்கிய தீட்சிதர் எப்படிப்பட்டவர்? பிழைக்க வழியற்ற சூழலில் அருவியின் பிழைப்புக்கு வழிசெய்த உரிமையாளர் என்ன உரிமையில் அவள்மீது சொந்தம் கொண்டாடினார்?

எவர் எக்கேடு கெட்டால் என்ன தன் நிகழ்ச்சிக்கு டிஆர்பி கிடைத்தால் போதும் என நினைப்பவன் மனிதனா? இவர்களை எல்லாம் தண்டிப்பதா, மன்னிப்பதா? நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியவில்லை, அருவி மன்னித்தாள். எல்லா ஆண்களின் களங்கத்தையும் கழுவிச் சென்ற அருவி கலங்கிய நீராய்க் கடலில் சேர்கிறாளே எனக் கலங்குகிறீர்கள். ஆனால், வீழ்வதில் மகிழும் அருவிக்கு இதெல்லாம் ஒரு பொருட்டில்லை. அருவியைக் கொண்டாடாவிட்டாலும் பரவாயில்லை, புறமொதுக்காதீர்.

ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில் முதன்முதலில் திரையிடப்பட்டது ‘அருவி’. இது தவிர்த்து பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது. ஃபிலிம்பேர் விருது, நார்வே தமிழ்த் திரைப்பட விழா விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற படம் இது. கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய இப்படத்தில் அருவியாக நடித்தவர் அதிதி பாலன். 2017-ம் ஆண்டு உலக எய்ட்ஸ் நாளை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் அரேபிய மொழியில் வெளியான எகிப்துப் படமான ‘அஸ்மா’வை நினைவூட்டும்.

படம் உதவி: ஞானம்

(நிழல்கள் வளரும்)
- செல்லப்பா, தொடர்புகொள்ள: chellappa.n@hindutamil.co.in

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in