

செல்லப்பா
இந்திய அரசியல், சமூக வரலாற்றில் நீங்கா வடுவாக நிலைத்துவிட்ட நாள் 1992 டிசம்பர் 6. அன்றுதான் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. சுமார் ஐந்நூறு ஆண்டுகளாகச் சிறுபான்மையினரால் வழிபடப்பட்ட வழிபாட்டுத்தலம் ஒன்றைப் பெரும்பான்மையினர் பெருந்திரளாகச் சென்று இடித்துத் தள்ளி, இந்தியாவின் மதச்சார்பின்மையைச் சந்தி சிரிக்கவைத்த நாள் அது.
அந்த நிகழ்வு இந்தியாவின் கிராமங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. மதம் என்றால் என்ன என்றே அறியாமல் பிறந்ததிலிருந்து ஒரு பழக்கமாக அதைக் கைக்கொள்ளும் சாமானியர்களும் அதனால் பாதிக்கப்பட்டார்கள். கிராமத்திலேயே அதன் பாதிப்பு இருந்ததென்றால் பம்பாய் போன்ற பெருநகரத்தில் எப்படியிருந்திருக்கும் நிலைமை?
பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து பம்பாயில் பெரும் கலவரம் நிகழ்ந்தது. அதில் கமல் பஷீர், கபீர் நாராயணன் ஆகிய இரு சிறுவர்கள் மாட்டிக்கொண்டார்கள். அவர்கள் மத அடிப்படைவாதிகளிடம் சிக்கி, கொளுத்தப்படப்போகும் நேரத்தில் அவர்களுடைய தந்தை சேகர் வந்து காப்பாற்றி அழைத்துச் செல்வார். பிள்ளைகளைக் காணாமல் தவித்துப்போன ஷைலா பானுவுக்குப் பிள்ளைகளைக் கண்டதும் பெரிய ஆறுதல் கிடைக்கும். பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இதற்கு ஏற்ப மீண்டும் ஒரு கலவரம் ஜனவரியில் ஏற்பட்டபோதும் ஷைலா பானுவின் குழந்தைகள் தவறிச் சென்றுவிடுவார்கள். அப்போது குழந்தைகள் இருவருமே ஆளுக்கொரு திசைக்குச் சென்றுவிடுவார்கள்.
புர்காவில் மறைந்திருந்த அன்பு
ஷைலா பானு தெக்கத்தி மாவட்டமான திருநெல்வேலியின் மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவள். இஸ்லாம் மதத்தில் பிறந்த அவள், தன் நண்பர்களுடன் பள்ளிக்குச் சென்றுவந்து கொண்டிருந்தாள். வீட்டிலிருந்து புர்கா அணிந்து செல்வாள். மீண்டும் வீட்டுக்கு வந்த பின்னர்தான் அதைக் கழற்றுவாள். அப்படியிருந்தும் அவளை ஓர் இளைஞன் பார்த்துவிட்டான். அது இயற்கையாக நிகழ்ந்த சம்பவம். காற்றுக்குத் தெரியாதே இளம்பெண் ஒருத்தியின் கண்ணை நேருக்கு நேர் பார்த்துவிட்டால், அதுவும் அந்த இளம்பெண் அழகாக இருந்துவிட்டால், இளைஞன் மனத்தில் காதல் என்னும் அருட்பெரும்சோதி தோன்றிவிடும், தனிப் பெரும் கருணை துளிர்த்துவிடும் என்பது. காற்று எப்போதும்போல் சுழன்று அடித்து ஷைலாவின் முகத்திரையை உயர்த்தி விடுகிறது. அந்த ஒரு கணத்தில் சேகரின் பார்வையில் பட்டுவிடுகிறாள்.
காற்று சுழன்று அடிக்காமல் இருந்திருந்தால், முகத்திரை அகலாமல் இருந்திருந்தால், சேகர் ஷைலாவைப் பார்க்காமல் இருந்திருந்தால், பாபர் மசூதி இடிக்கப்படாமல் இருந்திருந்தால் இப்படி நமது நினைவுகள் வேண்டுமானால் சென்றுகொண்டே இருக்கலாம். ஆனால், வாழ்க்கைச் சம்பவங்கள் அதன் விருப்பத்துக்கு நகர்ந்துகொண்டே இருக்கின்றனவே. சைவ சமயத்தைச் சேர்ந்தவன் சேகர். அவனுடைய தந்தை நாராயண பிள்ளை. அந்த ஊர்க் கோயிலின் அறங்காவலர். சமயச் சடங்குகளில் முன்னுரிமை பெற்ற குடும்பம் அவனுடையது. ஷைலாவுடைய தந்தையும் இஸ்லாம் மார்க்கத்தில் பெரும் பற்றுக்கொண்டவர். மார்க்கத்தை உயிராகவும் உதிரமாகவும் கருதுபவர். எதிரும் புதிருமான இடத்தில் பிறந்து வளர்ந்தவர்களிடையே காதல் என்பது நல்ல முரண். முரண்களில் ஏனோ காதல் பயிர் செழித்து வளர்கிறது?
முதலில் ஷைலாவைப் பார்த்துக் கிறங்கிய சேகருக்கு அடுத்ததாக, பிரம்மாண்டமான திருமண நிகழ்ச்சியில் அவளுடைய ஆடலையும் பாடலையும் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. அவளும் தன்னைப் போலவே காதலால் கசிந்துருகுகிறாள் என்பதைக் ‘கண்ணாளனே’ பாடல் வழியே புரிந்துகொள்கிறான் சேகர். முகத்தின் வதனத்திலேயே மதிமயங்கியவன், உயிர்கொண்ட செப்புச் சிலையைப் போல் சுழன்றாடிய ஷைலாவைப் பார்த்தபோது கதிகலங்கினான். உயிரின் வேர்வரை காதலுணர்வு ஊடுருவியது. சேகரின் தங்கை லட்சுமியைப் பார்க்கும் சாக்கில் அவனது வீட்டுக்கே ஷைலாவை அழைத்துவந்துவிடுகிறது அவளது காதல்.
திருநீற்றை மீறிய நேசம்
வீட்டில் சம்மதம் கேட்கிறான் சேகர். அவனுடைய தந்தையும் ஷைலாவுடைய தந்தையும் ஒரே பதிலை வெவ்வேறு பாஷையில் சொல்கிறார்கள். அவர்கள் சம்மதத்துடன் தனது திருமணமோ ஷைலாவின் நிக்காஹ்கோ நடைபெற வாய்ப்பில்லை என்பது தெரிந்துவிடுகிறது. தொழுகையிலிருந்து அப்போதுதான் வந்திருந்த ஷைலாவுடைய தந்தை பஷீருக்கு, சேகர் தன் மகளைக் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாகச் சொன்னதைக் கேட்டவுடன் கோபம் தலைக்கேறிவிடுகிறது. சுவரில் மாட்டியிருந்த நீளமான அரிவாளைத் தூக்கிக்கொண்டு வருகிறார். அவருடைய நாடகத்தன்மைக்குச் சிறிதும் மிகையில்லாமல் இருவருடைய ரத்தமும் ஒன்றாகச் சேரும் என்பதைச் சொல்ல சேகர் தன் கையை அறுத்துக்கொள்கிறான், ஷைலாவின் கையையும் பதம் பார்த்துவிடுகிறான். நாராயண பிள்ளை விஷயம் தெரிந்தவுடன் பஷீர் வீட்டுக்குக் கூட்டமாக வந்து அவருடைய மகளை அடக்கிவைக்கும்படி சத்தமிடுகிறார்; கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். ஏழை என்றாலும் மானத்துடன் வாழ்கிறோம் என்று சொல்லும் பஷீர் மீண்டும் அரிவாளைத் தூக்குகிறார்.
நாராயண பிள்ளை ஒருநாள்கூடக் கோயிலுக்குப் போகாமல் இருந்ததில்லை. அவரைக் கேட்காமல் கோயில் தர்மகர்த்தா எந்தக் காரியத்திலும் ஈடுபடுவதில்லை. உற்சவ நாட்களில் சாமி முதலில் அவர் வீட்டுக்கு வந்துவிட்டுத்தான் ஊர்வலம் செல்லும். அப்படியானவரின் மகன் ஒரு இஸ்லாமியப் பெண்ணை மணமுடிப்பதா என்ற கவலை அவருக்கு. தான் முதன்முதலில் மெக்கா போய்வந்த பிறகு பிறந்த தன் மகள் மாற்று சமயத்துக்காரனை மணமுடிப்பதா, தன் மார்க்கத்துக்கு அது பங்கம் விளைவிக்காதா என்னும் வருத்தம் பஷீருக்கு. ஆனால், மதம் பற்றியோ சமயம் பற்றியோ கவலைகொள்ளாமல் சேகருக்கும் ஷைலாவுக்குமான காதல் காட்டுப்பூவைப் போல் வனப்புடன் மலர்ந்துவிடுகிறது.
கடிதங்களின் வழியே வளர்ந்த காதல் பம்பாயின் பதிவு அலுலவகத்தில் திருமணமாகக் கனிகிறது. பெற்றோரின், பெரியவர்களின் சம்மதம் கிடைக்காதபோதும் சேகரும் ஷைலாவும் தம் மனங்கள் ஒத்துப்போனதால் கைபிடித்துக்கொள்கிறார்கள். பத்திரிகை அலுவலகத்தில் வேலைபார்க்கும் சேகரை மனம்போல் மணந்துகொண்டு வாழும் ஷைலா பானுவின் வாழ்வில் குறுக்கிடுகிறது பாபர் மசூதி இடிப்பு. அவள் இஸ்லாமியப் பெற்றோருக்குப் பிறந்ததால் இஸ்லாமியப் பெண்ணாகிவிடுகிறாள். இல்லையென்றால் அவள் வேறொரு மதத்தைச் சேர்ந்தவளாகியிருப்பாள். அவளைப் பொறுத்தவரை மதம் என்பது அடிப்படைத் தேவையல்ல. ஆனால், மதத்துக்கு அவளும் அவளைப் போன்றவர்களும் அடிப்படைத் தேவை. மதம் இல்லாமல் மனிதர்கள் உண்டு; மனிதர்கள் இல்லாமல் மதம் இல்லை. அது ஓர் அரசியல். இந்த அரசியல் எதுவும் அறியாத ஷைலா பானு போன்ற பெண்களும் அவர்களுடைய குடும்பங்களும்தான் மதக் கலவரங்களால் பாதிக்கப்படுகின்றன.
மதங்களைக் கடந்த காதல்
ஷைலா பானுவுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. அதனால், சேகரும் ஷைலா பானுவும் ஒன்றுக்கு சைவப் பெயரையும் மற்றொன்றுக்கு இஸ்லாமியப் பெயரையும் சூட்டினார்கள். ஒருவேளை அவர்களுக்கு ஒரு குழந்தை மட்டும் பிறந்திருந்தால் அது எந்த மதத்தின்படி வளரும்? சேகருக்கும் ஷைலாவுக்கும் இடையேகூடப் பிரச்சினை முளைத்திருக்குமோ?
இளையவர்களின் மனங்களில் காதல் முளைக்கும்போது அது மதமெனும் நச்சுச்செடியை அகற்றிவிடுகிறது. பெரியவர்களின் மனங்களில் மதம் குடிகொள்ளும்போது அது அன்பு, பாசம், பிரியம், நேசம் என்னும் நற்குணங்களை எல்லாம் கொன்றுவிடுகிறது. ஷைலா பானு போன்ற சிறுபான்மைப் பெண்களின் நிம்மதியும் மகிழ்ச்சியும் பறிபோகும் சூழலில் ஒரு நாடு எப்படி மகிழ்ச்சியாக இருக்க இயலும்? வீட்டிலும் நாட்டிலும் பெண்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால்தானே நாடு சுபிட்சமடையும். மதம் என்பது ஒரு சமூகச் சிக்கலாக இருக்கும்வரை ஷைலா பானுவும் அவளைப் போன்றோரது குடும்பங்களும் அமைதி காண இயலாது. அவை அமைதியைத் தேடிக்கொண்டேயிருக்கும். அது பம்பாய் போன்ற பெருநகரமாயிருந்தாலென்ன மாங்குடி போன்ற குக்கிராமமாக இருந்தாலென்ன?
(நிழல்கள் வளரும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@hindutamil.co.in
பம்பாய் (1995) திரைப்படத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் மாங்குடி என்னும் பெயரில் வரும் ஊர் கேரளாவின் காசர்கோடு பகுதி. கலவரத்தில் தொலைந்து போகும் சிறுவனைப் பற்றிய திரைக்கதை எழுத எம்.டி.வாசுதேவன் நாயரைக் கேட்டிருந்தார் மணிரத்னம். அவர் திரைக்கதை எழுதியிருந்தால் இது மலையாளப் படமாகியிருந்திருக்கும். ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவு படத்தை அழகாகக் காட்சிப்படுத்தியிருந்தது.