

வாசகிகள் சிலர் வீட்டுப் பணியில் தங்களுக்கு உதவியாக இருந்தவர்களைப் பற்றி எழுதியதைப் படித்ததும் நெல்லையப்பப் பிள்ளை குறித்து எழுதத் தோன்றியது. தென்காசியில் பாரம்பரியமான பெரிய வீடு என்று அழைக்கப்பட்ட கே.ஆர். ராமசாமிராஜாவின் மகள் நான். எங்கள் வீட்டுக்கு 15 வயதில் சமையல் வேலைக்கு வந்தவர் நெல்லையப்பப் பிள்ளை. அப்பாதான் அவருக்குத் திருமணம் செய்துவைத்தாராம். இதுகூட அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். எங்கள் வீட்டில் ஏழு பேர். வீடு குற்றாலம் அருகில். அப்போதெல்லாம் மாதம் மும்மாரி பொழியும். ஆண்டு முழுவதும் அருவியில் நீர் வழியும். எனவே, எங்கள் வீட்டுக்கு விருந்தினர் வந்தவண்ணம் இருப்பார்கள். நெல்லையப்பப் பிள்ளை அவர்களை நன்றாக உபசரித்து, உணவளித்து இன்முகத்துடன் பரிமாறுவார். எங்கள் ஏழு பேருக்கும் என்ன பிடிக்கும் என்று அவருக்குத்தான் தெரியும். தேவையான நொறுக்குத்தீனி அனைத்தையும் செய்துவைப்பார். பள்ளியில் இருந்து நாங்கள் திரும்பியதும் அவற்றைக் கொடுப்பார். அம்மி, ஆட்டுக்கல், மண்பானை சமையல்தான். எங்கள் வீட்டு அடுப்பு இரவு மட்டும்தான் அணைந்திருக்கும்.
வாரம் ஒரு முறை சுக்கையும் மாதம் ஒரு முறை வேப்பிலையையும் அரைத்துக்கொடுப்பார். வாரா வாரம் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பசுக்களைக் கவனித்து, வீட்டில் சிறிய தோட்டம் போட்டு அதற்குப் பரிசும் பெற்றார். ‘பழநி’ படத்தின் படபிடிப்புக்காக நடிகர் சிவாஜி கணேசன் வந்தபோது எங்கள் வீட்டில் சாப்பிட்டார். நெல்லையப்பப் பிள்ளையின் சமையல் பக்குவத்தை வியந்து அவரைத் தன்னுடன் வரும்படி அழைத்தபோதும் மறுத்துவிட்டார். அவருக்கு 60 வயதானபோது தன் மகன் நல்ல வேலையில் இருப்பதால் தன்னுடன் இருக்கும்படி அழைப்பதாகச் சொன்னார். அவருக்கும் ஓய்வு தேவை என அப்பாவும் அனுப்பிவைத்தார். இருந்தாலும், மாதம் ஒரு முறை எங்களைப் பார்த்துவிட்டுச் செல்வார். 85 வயதில் உடல்நிலை சரியில்லாமல் மறைந்துவிட்டார். எங்களைப் பொறுத்தவரை அவர் தாயுமானவர். என் மகள் கருவுற்றபோது பார்க்க வந்தார். அப்போது எடுத்த படம் இது.
பி.எஸ். ராஜி மணியன், தென்காசி.