

வீட்டில் செய்தித்தாளெல்லாம் வாங்கிப் படிக்காத காலம் அது. பலசரக்குச் சாமான்களைச் சுமந்து வந்த காகிதங்களே எனது வாசிப்பைத் தொடங்கிவைத்தன. முதலில் அதை அம்மா வாசிப்பார், பின்பு நான் வாசிப்பேன். இப்படித்தான் வாசிப்புப் பழக்கம் என்னுள் நுழைந்தது.
என்னை வாசிப்பின் பக்கம் அதிகமாக அழைத்துச்சென்றவர் என் தாத்தா. 1999-ல் நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அவர் ஆங்கில இந்து நாளிதழை வாங்குவார். அவரால் சிறிய எழுத்துகளை வாசிக்க இயலாததால் நான்தான் அவருக்குச் செய்திகளை வாசித்துக் காண்பிப்பேன். அதன்மூலம் நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்து வைத்திருந்தேன்.
ஒரு முறை புத்தகம் வாங்க மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணைக்குப் போயிருந்தேன். சுகி. சிவம் எழுதிய ‘வெற்றி நிச்சயம்’ புத்தகத்தின் (வெளியீடு: சுகி புக்ஸ்) ஏழாம் பக்கத்தில் ‘இந்த நூலை வாங்குவது செலவல்ல; சிறந்த மூலதனம்’ என எழுதியிருந்தது என்னைக் கவர்ந்தது. உடனே அந்தப் புத்தகம் என் இல்லத்தின் புதுவரவானது. 2008-ல் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் வெற்றிபெற்று ஆசிரியப் பயிற்றுநராகத் தேர்வாகி மதுரை வடக்கு வட்டார வளமையத்தில் பணியில் சேர்ந்தேன்.
ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பதுதான் என் வேலை. எனவே, பயிற்சியின் தொடக்கத்திலும் முடிவிலும் சுகி. சிவத்தின் கருத்துகள் நிச்சயம் இடம்பெற்றுவிடும். சமஸ் எழுதிய ‘நீர், நிலம், வனம், கடல்’ ( ‘தி இந்து தமிழ்’ வெளியீடு) புத்தகமும் எனக்குப் பிடிக்கும். புத்தகங்கள் நம் ஆசான்கள். நமக்குப் பல அரிய தகவல்களைக் கற்றுக்கொடுக்கும் துரோணர்கள் புத்தகங்கள். இந்தப் புத்தகம் எனக்கு ‘சபால்டர்ன்’ என்ற வார்த்தையைக் கற்றுக்கொடுத்தது. இதன் பொருள் சாதி, மதம், இனம் போன்றவற்றால் சமூகத்தின் தாழ்ந்த நிலையில் வாழ்பவர்கள் என்பது.
மேலும், தாவரங்களுக்கு அப்பாற்பட்டு மனிதனுக்குப் புரதத்தை அதிகம் தருவது கடல்தான் என்பதையும் அறிந்துகொண்டேன். நான் படித்ததை என் மகனிடம் சொன்னதுடன் இனிமேல் கடல் அலைகளில் விளையாடும்போதுகூட அதை மாசாக்காமல் இருக்க வேண்டுமெனக் கூறினேன். காரணத்துடன் சொன்னதால் அவனும் சரி என்றான். சூழலியல் குறித்த புரிதலைக் குழந்தைகளுக்குக் கடத்துவது பெற்றோரின் கடமை.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதிய ‘கதைகளின் கதை’ (விகடன் பிரசுரம்) புத்தகத்தைப் படித்து பலமுறை வியந்திருக்கிறேன். குறிப்பாகச் சில வார்த்தைகளுக்காக. வளரி (பரங்கியரை நடுங்கச்செய்த தமிழகத்தின் போர்க் குறியீடு), போக்கிரி (ஒரு வசைச்சொல் உருவாக்கப்படுவதன் உள்நோக்கத்தைப் புரியவைத்த வார்த்தை), துணையடிக்கால் மாடுகள் போன்றவை அவற்றில் சில.
தமிழகத்தின் பிரம்மாண்டமான மதுரைக் கோட்டையை பிரிட்டிஷ் கலெக்டர் பிளாக்பென் 1840-களில் மக்களின் ஆசையை ஆயுதமாக்கி இடித்ததைப் பதிவுசெய்திருப்பது ஒரு வரலாற்றுச் சின்னத்தை ஆசையால் அபகரிக்க முடியும் என்ற வருத்தத்தை ஏற்படுத்தியது. இன்னும் இப்படி ஏராளமான புத்தகங்கள் என் அறிவுத்தளத்தை மேம்படுத்தியிருக்கின்றன. வாசிப்பின் மீதான என் நேசத்தை ரசித்த என் கணவர் PDF வடிவில் கிடைக்கும் புத்தகங்களைப் பிரதியெடுத்துத் தந்து என் வாசிப்புப் பாதையை விசாலப்படுத்துகிறார்.
- நா.ஜெஸிமா ஹீசைன், திருப்புவனம் புதூர்.
உற்சாகமூட்டும் உறுதுணை
பள்ளியில் நான் சுமாரான மாணவி. பாடப் புத்தகங்களைப் பார்த்தாலே பிடிக்காது. ஆனால், பேச்சுப் போட்டிகளில் பங்கேற்பேன். அதற்கான குறிப்புகளை அப்பாவிடம் கேட்டேன். அவர், “திருக்குறளையும் பாரதியார் கவிதைகளையும் படி. அதில் இல்லாத விஷயங்களே இல்லை” என்றார். அதற்காகப் படிக்கத் தொடங்கி திருக்குறள் மீதும் பாரதியார் கவிதைகள் மீதும் ஈர்ப்பு வந்தது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை இறந்தபோது கலைஞர் எழுதி தினத்தந்தியில் வெளியான கவிதை வரிகள் என்னைத் தமிழ் மேல் காதல்கொள்ளச் செய்தன. அதன் பிறகு அவர் எழுதியது, இவர் எழுதியது என்ற பாரபட்சமில்லாமல் கண்ணில்பட்ட புத்தகங்களை எல்லாம் படிக்கத் தொடங்கினேன். அந்த வாசிப்பு பத்திரிகைகளுக்குக் கவிதை, கட்டுரை எழுத எனக்குப் பாதைபோட்டுத் தந்தது.
வெளியுலகம் தெரியாமல் கிணற்றுத் தவளையாக இருந்த என்னை வெளியுலகை அறியச் செய்தவை புத்தகங்களே. என் உறவினர்களும் நண்பர்களும் அவர்களது பிரச்சினைகளை என்னிடம் பகிர்ந்துகொள்வார்கள். அப்போது அவர்களுக்கு ஆறுதல் சொல்வதுடன் தீர்வும் சொல்லவைத்தவை புத்தகங்களே. வாசிப்புப் பழக்கும் எனக்குச் சில நண்பர்களையும் ஏற்படுத்தித் தந்தது. பன்னிரண்டாம் வகுப்புவரை மட்டுமே படித்த என்னால் அதிகம் படித்தவர்களுடன் தன்னம்பிக்கையோடு பேசவும் சில விஷயங்கள் குறித்து விவாதிக்கவும் வைப்பவை புத்தகங்கள்தாம். முதுமைப் பருவத்தில் இருக்கும் எனக்கு உறுதுணையாக மட்டுமின்றி, என்னை உற்சாகத்துடன் வழிநடத்துபவையும் புத்தகங்களே.
- பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி.
| வாசிப்பை நேசிப்போம் புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக்கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்க்க முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்கள் ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள். எந்தப் பதிப்பகம் என்பதையும் குறிப்பிடுங்கள். |