

ஐந்து வயதான மோதி திவ்யா, கையில் அலுமினியப் பாத்திரத்துடன் தன் சக வயதுக் குழந்தைகள் சீருடை அணிந்து பள்ளியில் படிப்பதை வகுப்பறை வாசலில் இருந்தபடி எட்டிப் பார்க்கிறார். ஹைதராபாத்தில் உள்ள குடிமல்கபூரில் என்ற பகுதியில் உள்ள தேவல் ஜாம் சிங் அரசு உயர்நிலைப் பள்ளியில்தான் இந்தக் காட்சி அரங்கேறியது. சிறுமியின் இந்த ஏக்கத்தைப் படம் பிடித்துள்ளார் ‘ஈநாடு’ நாளிதழின் ஒளிப்படக் கலைஞர் ஸ்ரீநிவாஸ்.
‘பசியின் பார்வை’ எனத் தலைப்பிட்டு நாளிதழில் வெளியான இந்தப் படம் சமூகவலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்துக் குழந்தைகள் உரிமைக்காகச் செயல்பட்டுவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று சிறுமி திவ்யாவைப் பற்றி விசாரித்தது. காலை ஆறு மணிக்கு கூலி வேலைக்குச் செல்லும் திவ்யாவின் பெற்றோர் மதியம் இரண்டுக்குத்தான் வீடு திரும்புகிறார்கள். இதனால், பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவுக்காகக் கையில் பாத்திரத்துடன் தினசரி திவ்யா வருவது வழக்கமாகியுள்ளது. மாணவர்கள் சாப்பிட்ட பிறகு மீதமாகும் உணவு திவ்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையறிந்த தொண்டு நிறுவனத்தினர் சிறுமி திவ்யா பள்ளியில் சேர உதவியுள்ளனர். பசிக்காகப் பள்ளிக்குச் சென்ற திவ்யா இப்போது படிப்பதற்காகவும் செல்கிறார்.
சச்சினை வென்ற ஷிபாலி
ஆப்பிரிக்காவில் உள்ள செயின்ட் லூசியா தீவில் மகளிருக்கான சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் தொடக்க நிலை வீராங்கனை ஷிபாலி வர்மா (15) 49 பந்துகளுக்கு 73 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.
மிக இளம் வயதிலேயே சர்வதேசப் போட்டியில் அரை சதம் எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
ஷிபாலி வர்மாவுக்கு சச்சின்தான் ஆதர்ச நாயகன். தந்தையின் தோள் மீது அமர்ந்து ‘சச்சின்... சச்சின்...’ என முழக்கமிட்ட ஷிபாலி இன்று அவருடைய சாதனையையே முறியடித்துள்ளார். இப்போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வாகை சூடியது. போட்டியில் ஆட்ட நாயகி விருது ஷிபாலிக்கு வழங்கப்பட்டது. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் மிக இளம் வயதில் அரை சதம் அடித்த இரண்டாம் வீராங்கனை என்ற பெருமைக்கும் ஷிபாலி உரியவராகியுள்ளார்.
முதல்வரின் அலட்சியப் பேச்சு
தமிழக முதல்வரை வரவேற்க வைக்கப்பட்ட கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததை அடுத்து ராஜேஸ்வரி என்கிற இளம்பெண்ணின் கால்களின் மீது லாரி ஏறியது. சில மாதங்களுக்கு முன்புதான் சென்னையைச் சேர்ந்த சுப என்ற இளம்பெண் மீது பேனர் சரிந்து விழுந்ததில் அவர் இறந்தார். நவம்பர் 8 அன்று கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்கிற அனுராதா சின்னியம்பாளையத்தில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். சேலத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக கோவையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அவர் பயணம் செய்யும் சாலை முழுவதும் அதிமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
அப்போது அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியின் வழியாக வந்த ராஜேஸ்வரியின் மீது கொடிக்கம்பம் விழுந்ததால் வாகனத்திலிருந்து நிலைதடுமாறி சறுக்கிக் கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த வழியே வந்த லாரி அவரது கால்களின் மீது ஏறியதால் படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ராஜேஸ்வரியின் கால்களில் உள்ள முக்கிய நரம்பு துண்டிக்கப்பட்டு, எலும்பு உடைந்ததால் அவருடைய இடதுகால் அகற்றப்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து ஏற்படுத்திய லாரி ஒட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சேலத்தில் முதலமைச்சரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர், “பேனர் வைக்கக் கூடாது என்றுதான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு சொல்கிறது. கொடிக் கம்பங்கள் வைப்பது குறித்து எந்த உத்தரவும் எனக்குத் தெரிந்தவரை இல்லை” எனக் கூறியுள்ளார். முதல்வரின் இந்தக் கருத்து, பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரியின் குடும்பத்தினரிடமும் பொது மக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றவாளி கைது
இயற்கை உபாதைக்காகத் தோப்புக்குச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவியை உறவினரே பலாத்காரம் செய்து கொன்றுள்ளார். சீர்காழியில் உள்ள சித்தன்காத்திருப்புப் பகுதியில் வசித்துவந்துள்ளார் மாணவி லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இயற்கை உபாதைக்காகத் தோப்புக்குச் சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கலக்கமடைந்த பெற்றோரும் உறவினர்களும் அவரைத் தேடியுள்ளனர். அப்போது உடலில் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார் லட்சுமி.
இதைப் பார்த்த பெற்றோர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். லட்சுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். லட்சுமியின் வீட்டுக்கு அருகே வசிக்கும் கல்யாணசுந்தரம் என்பவர் லட்சுமியை பலாத்காரம் செய்து கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்களுக்கான ‘போஸ்கோ’ சட்டத்தின்கீழ் அவர் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இப்படிச் சொன்னாங்க: பெயரை மாற்ற முடியாதுதானே
“என் மகள் பாத்திமா லத்தீப் சிறந்த படிப்பாளி. அவளுக்கு பனாரசில் படிக்க அழைப்பு வந்தது. ஆனால், நாங்கள்தான் வடநாட்டில் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு குறைவாக உள்ளது என அனுப்பவில்லை. பிறகு சென்னை ஐஐடியில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் முதுகலை படிக்க இடம் கிடைத்தது. மற்ற மாநிலங்களைவிடத் தமிழகம் எங்கள் மகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என நினைத்தோம். அப்போதுகூட அவள் முஸ்லிம் என்பதை அடையாளப்படுத்த வேண்டாம் என்பதற்காகவே புர்கா உடை அணிவதைத் தவிர்க்கச் சொன்னோம். ஆனால், பெயரை மாற்ற முடியாதுதானே?”
- தற்கொலை செய்துகொண்ட சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப்பின் அம்மா சுஜிதா.