

இரவு நேரம். புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் இருக்கும் சாலை யோர பஜ்ஜிக் கடை அது. கடையை நடத்தும் ராஜம்மாள் முகமெல்லாம் புன்னகையாகப் பூத்துநிற்க, பிரான்ஸிலிருந்து வந்தவர்கள் அவருக்கு விருது தந்தனர். கடைக்கு வந்தவர்கள் அனைவரும் கைதட்டி மகிழ்ந்தனர். ராஜம்மா செய்த பஜ்ஜியின் சுவைதான் இந்த அங்கீகாரத்துக்குக் காரணம்.
சின்ன மணிக்கூண்டு அருகே 35 ஆண்டுகளாகச் சாலையோரத்தில் பஜ்ஜிக் கடை நடத்திவருகிறார் 65 வயதைக் கடந்த ராஜம்மாள். பஜ்ஜி என்றதுமே வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றை மனக்கண்ணில் நினைக்கிறவர்களின் முன்னால் மீன் பஜ்ஜி, இறால் பஜ்ஜி போன்றவற்றைச் சுடச்சுட தட்டில் அடுக்கி ஆச்சரியப்படுத்துகிறார். முட்டை போண்டா, கறி போண்டா என இவர் செய்யும் ஒவ்வொன்றும் வித்தியாசமான ருசியில் இருக்கின்றன. இரவு ஏழு மணிக்குத் தொடங்கி பத்து மணி வரை வியாபாரம் நடக்கிறது.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பிரான்ஸிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளும் புதுச்சேரிக்கு அதிக அளவில் வருவது வழக்கம். பிரான்ஸில் முனிசிபல் கவுன்சிலராக இருக்கும் அயூப், ராஜம்மாள் செய்யும் பஜ்ஜியின் சுவையில் மயங்கி அவருக்கு விருது வழங்கிக் கவுரவித்திருக்கிறார். திடீர் விருதால் திக்குமுக்காடிப்போனாலும் எண்ணெய்யில் வெந்துகொண்டிருந்த பஜ்ஜியைப் பதம் பார்த்து எடுத்தபடியே பேசினார் ராஜம்மாள்.
“பள்ளிக்கூடத்துல ஆயா வேலை பார்த்துவந்தேன். பிழைப்புக்காக இங்கே 35 வருசத்துக்கு முன்னாடி வடை கடை போட்டேன். சாயந்திரம் ஏதாவது வித்தியாசமா செய்யலாமேன்னு இறால் பஜ்ஜி, மீன் பஜ்ஜி, முட்டை போண்டா, கறி போண்டான்னு செய்ய ஆரம்பிச்சேன். மார்க்கெட்டிலிருந்து மொத்தமா வாங்கிட்டு வந்து செய்யறேன். டேஸ்ட் புடிச்சிப்போய் பலரும் வாடிக்கையா வரத்தொடங்கினாங்க. இங்கே இருக்கவங்க மட்டுமில்லாமல், வெளியில இருந்த வர்றவங்களும் ரெகுலரா வருவாங்க. கொடுவா மீனில் முள் இருக்காது. அப்படியே சாப்பிடலாம். மீனை வாங்கிட்டு வந்து தலையையும் குடலையும் நீக்கிட்டுக் கழுவிட்டா மீன் வாடையே இருக்காது. இதுக்கு விருது குடுத்துறக்கறது சந்தோஷம்தான்” என்கிறார் ராஜம்மாள்.
- செ. ஞானபிரகாஷ் | படம்: எம்.சாம்ராஜ்