

செ. ஞானபிரகாஷ்
எங்கே சென்றாலும் தன்னுடைய மனைவி கணவதி அம்மாளை உடன் அழைத்து வருவார் 97 வயதாகும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். மேடையில் தனக்குப் பக்கத்திலேயே அவருக்கும் இருக்கை போட்டு அமர வைப்பது வழக்கம். அண்மையில் 87 வயதில் மறைந்துவிட்ட கணவதி அம்மாளுக்கு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் படத்திறப்பு நிகழ்வு நடந்தது. அந்நிகழ்வில் பங்கேற்க பழ. நெடுமாறன், நடிகர் சிவகுமார் எனப் பலர் வந்திருந்தனர்.
நடிகர் சிவகுமார் உணர்வுபூர்வமாகப் பேசினார். “கணவர் இறந்துவிட்டாலும் பல ஆண்டுகள் தைரியமாக வாழ்பவர்கள் பெண்கள். ஆனால், மனைவி இறந்தால் கணவரின் வாழ்நாள் குறைவுதான். அதனால், மனைவியை நல்லா பார்த்துக்குங்க. நானும் அப்படித்தான் பார்த்துக்கிறேன். நீங்களும் அதைக் கடைப்பிடிங்க. ஏன்னா, அவுங்க 50 வயசுக்கு மேல தாய்” என்றார்.
அமைதியாக அமர்ந்திருந்த கி.ரா. தன்னுடைய இணையைப் பற்றி மெல்லிய குரலில் பேசத்தொடங்கினார்.
“இந்த சாவு துக்கப்படுகிற சாவு அல்ல. பேரக்குழந்தைகள், அவர்களின் குழந்தைகள் எனப் பார்த்து விட்டார். கிராமங்களில் கல்யாண சாவு என்பார்கள். அதுபோலதான்.
திருமணமாகி வரும்போது அவருக்குச் சமையல் தெரியாது. புளிச்சாறு மட்டும்தான் வைப்பார். ஆச்சரியமான விசயம் சில நாட்களிலேயே அருமையாகச் சமைக்கத் தொடங்கிவிட்டார். வீடே மணக்கும். நண்பர்களின் வீட்டுச் சமையலைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து அதைப் படைப்பார்.
ஒரு நாள் நடிகர் பார்த்திபனை நாங்க பார்த்தோம். என்ன சாப்பிட்டீங்க எனக் கேட்டார். ரசம், துவையல் என்றோம். நான் நாளைக்கு வீட்டுக்கு வர்றேன். ரசம், துவையல் செஞ்சு வைங்க
என்றார். பிரபல நடிகர் ரசம் சோறு சாப்பிட வீட்டுக்கு வந்தார். அப்போ, வீட்டில் கோழிக்கறியும் செஞ்சிருந்ததை ருசி பார்த்து, அதை மட்டுமே சாப்பிட்டார். கோழிக்கறி செஞ்சா வாசனைப் பொருள்களான பட்டை, சீரகம், கறி மசாலா சேர்க்காம செய்வாங்க. ஆனா, வாசனை ஏழு வீட்டைத் தாண்டி தெரு பூரா மணக்கும்.
உப்புமாவைக்கூட நெய், முந்திரி சேர்த்து ருசியா சமைத்ததைப் பார்த்து இதுபோல் உப்புமா இருந்தா தினமும் சாப்பிட ரெடின்னாரு ஒரு உறவினர். அவங்க சமையலை யாராலும் பீட் பண்ண முடியாது. எந்த விஷயத்தையும் மனசுக்குள் ஒண்ணு வச்சுக்கிட்டு, வெளியில ஒண்ணு சொல்ல மாட்டார்” என்று சொல்லிவிட்டு அமைதியானார்.
நடிகர் சிவகுமார் உள்ளிட்டோர் கடைசியாக ஏதாவது சொல்லுங்க எனக் குறிப்பிட அதற்கு கி.ரா., “சொல்லத் தெரியல” என்று அமைதியானார். அது தனிமையின் குரலாக ஒலித்தது.