வட்டத்துக்கு வெளியே: பெண்ணைக் கேலி செய்வதா ஹீரோயிஸம்?

வட்டத்துக்கு வெளியே: பெண்ணைக் கேலி செய்வதா ஹீரோயிஸம்?
Updated on
2 min read

ச.கோபாலகிருஷ்ணன்

2008- ல் வெளியான ‘குருவி’ திரைப்படத்தில் ஒரு காட்சி. படத்தின் நாயகன் விஜய் விமானத்தில் நாயகி த்ரிஷா அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமரச் செல்வார். அப்போது தெரியாமல் த்ரிஷாவின் காலை மிதித்துவிடுவார். “முருகா” என்று த்ரிஷா கத்த, பெயருக்கு “சாரி” சொல்லிவிட்டு, கூடவே இதையும் சொல்வார்: “பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா உக்காரணும். இப்படிப் பப்பரப்பான்னு உக்காந்தா போற வரவங்க மிதிக்கத்தான் செய்வாங்க”. பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் விமர்சனம் எழுதியவர் படத்தின் இந்த வசனத்தைக் குறிப்பிட்டுக் கண்டித்திருந்தார்.

தமிழ்த் திரைப்படங்களில் எப்போதும் பெண்களுக்கு அறிவுரை சொல்லும் இதுபோன்ற ஆணாதிக்கக் காட்சிகள் இடம்பெற்றுக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால், ‘குருவி’ வந்தபோது இவற்றுக்கான எதிர்ப்புக் குரலை மேலே குறிப்பிட்ட ஆங்கில விமர்சகரைப் போன்ற சிலரே பதிவுசெய்தனர். ஆனால், இன்றைய சமூக ஊடக யுகத்தில் திரைப்படங்களில் பெண்கள், ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர் ஆகியோர் குறித்த மோசமான சித்தரிப்புகள் உடனடியாகப் பரவலான கண்டனத்தைப் பெற்றுவிடுகின்றன. இதன் நீட்சியாகப் பெண்களைப் போற்றும், பெண்கள் தொடர்பான நவீன சிந்தனைகளை முன்வைக்கும் படங்களை எடுப்பதில் திரைத் துறையினர் ஆர்வம்காட்டத் தொடங்கியிருக்கின்றனர். இன்று நட்சத்திர மதிப்பில் பெரும் உயரத்தை எட்டியிருக்கும் விஜய் நடித்திருக்கும் ‘பிகில்’ படம் அத்தகையதுதான்.

உச்ச நடிகர்களின் மாற்றம்

அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ ஆகஸ்ட் மாதம் வெளியானது. ‘பிங்க்’ என்ற இந்திப் படத்தின் ரீமேக்கான அது பெண்களின் உடை, மது அருந்துதல் உள்ளிட்ட பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை வைத்து அவர்களைப் பாலியல்ரீதியாக இழிவுபடுத்தும் ஆண்மையச் சிந்தனையைச் சாடியது. ‘பிகில்’ படம் மகளிர் கால்பந்தாட்டக் குழுவை முன்வைத்து எழுதப்பட்ட ’பெண்களால் எதையும் சாதிக்க முடியும்’ என்று ஊக்கமளிக்கும் வெற்றிக் கதை. அதனூடே நம் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சிலவற்றைப் பேச முனைந்திருக்கிறது. தங்களது பல படங்களில் பெண்களுக்கு எதிரான கருத்துகளையும் காட்சிகளையும் அனுமதித்துவந்துள்ள விஜய், அஜித் இருவருமே இப்போது இந்த மாற்றத்தை அடைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

அனைத்தையும் சாதிப்பவர் நாயகனே

‘பிகில்’ படத்தில் இரண்டாம் பாதியில்தான் மகளிர் கால்பந்தாட்டக் குழுவில் விளையாடும் பெண்களுக்கான காட்சிகள் தொடங்குகின்றன. தேசிய அளவிலான போட்டித் தொடரில் தங்களுக்குள் நிலவும் பிணக்குகளால் முதல் போட்டியில் தோற்கின்றனர். பயிற்சியாளர் விஜய்தான் அவர்களுக்குக் குழு மனப்பான்மையின் முக்கியத்துவத்தைப் புரியவைக்கிறார். அதற்குப் பின் நடக்கும் போட்டிகளில் அவர்கள் வெற்றிபெற்றாலும் அவர்களது ஒவ்வோர் அசைவும் விஜய்யாலேயே தீர்மானிக்கப்படுகிறது.

அந்த அணியின் நட்சத்திர வீராங்கனை ஒருவர் தன்னைக் காதலிக்க வற்புறுத்தியவனால் அமில வீச்சுத் தாக்குதலுக்கு ஆளாகிறார். அதனால், ஒன்றரை ஆண்டுகள் அறைக்குள்ளேயே முடங்கியிருக்கிறார். அந்தப் பெண்ணைத் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வைக்க அவரது வீட்டுக்குச் செல்லும் விஜய், ஒரு தன்னம்பிக்கைக் கதையைச் சொல்கிறார். அந்தக் கதை அந்தப் பெண்ணுடைய கதைதான். அதைக் கேட்டவுடன் அந்தப் பெண் உடனடியாக விளையாட வந்துவிடுகிறார்.

குறிப்பிட்ட ஒரு போட்டியில் விஜய் அருகில் இல்லாதவரை அவர்களுடைய விளையாட்டு இறங்குமுகமாகவே இருக்கிறது. விஜய் வந்தவுடன் போட்டியின் போக்கு மாறுகிறது. எதிரணியினரின் சதிகளை முறியடிப்பதற்கான உத்திகளையும் விஜய்தான் சொல்லிக்கொடுக்கிறார். அந்த அணியில் பருமனான பெண் பாரபட்சமாக நடந்துகொள்ளும் போட்டி நடுவரை இடித்து, கீழே விழவைக்கிறார். பருமனான பெண் வேகமாக இடித்தால் இடிவாங்கியவருக்கு வலிப்பு வந்துவிடும் என்ற புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்படுகிறது. இதற்கு முந்தைய காட்சியில் “சாதிக்க முகமோ தோற்றமோ முக்கியமில்லை” என்ற செய்தி வசனமாகவும் பாடல் வரியாகவும் உரக்க ஒலிக்கிறது.

இறுதிப் போட்டியில் முதல் கட்டத்தில் விஜய் பயிற்சியளிக்கும் அணியினர் மோசமாக விளையாடுகிறார்கள். போட்டி இடைவேளையில் அணியினரைக் கடுமையாகத் திட்டுகிறார் விஜய். பருமனான பெண்ணைக் ‘குண்டம்மா’ என்று பல முறை சாடுகிறார். இது அவர்களது ரோஷத்தைத் தூண்டி நன்றாக விளையாட வைப்பதற்காகப் பயிற்சியாளர் மேற்கொள்ளும் உத்தி என்று சொல்லப்படுகிறது. போட்டியின் இரண்டாம் கட்டத்தில் அனைவரும் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றுவிடுகின்றனர். உடலைமைப்பை வைத்து கிண்டலடிக்கப்படுபவர் அதனால் உந்தப்பட்டு சாதிப்பார் என்ற ‘அரிய கண்டுபிடிப்பு ’ இதன் மூலம் முன்வைக்கப்படுகிறது.

குரூரமான உடல் கேலி

மகளிர் கால்பந்தாட்ட அணியைப் பற்றிய படத்தில் பெரும்பாலான காட்சிகளை நாயகனின் வீரத்தையும் திறமையையும் விதந்தோத ஒதுக்கியதோடு, கால்பந்தாட்ட அணியினரின் வெற்றியிலும் நாயகனுக்கே முக்கியப் பங்கு இருப்பதாகக் காண்பிக்கிறார்கள். நாயகர்களை மையப்படுத்திய படங்களில் இதெல்லாம் சகஜம்தான். ஆனால், இவ்வளவுக்குப் பிறகு ‘பெண்களுக்கான சமர்ப்பணம்’ என்ற வாசகத்துடன் படம் நிறைவடைவதுதான் நகைமுரணாக இருக்கிறது. அதுவும் பெண்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட படத்தில்கூட உடல்ரீதியான கேலியைத் தவிர்க்க முடியவில்லை. அது அந்தப் பெண்ணை ஊக்குவிக்கப்பதற்கான வசனம்தானே என்று கேட்கலாம். ஆனால், சாதிக்கத் தூண்டுவதற்காக ஒருவரைக் கேலி செய்வது, அதுவும் உடலமைப்பை வைத்து கேலி செய்வது குரூரமானது.

இப்படிப்பட்ட காட்சியமைப்புகளால், பெண்களுக்கான படங்களை எடுப்பதும், பெண்ணுரிமை, ஆண்-பெண் சமத்துவம் சார்ந்த கருத்துகளைப் பேசுவதும் அவை பேசப்பட வேண்டும் என்ற பொறுப்புணர்வின் அடிப்படையிலா அல்லது அவற்றைப் பேசினால் ரசிகர்களின் கூடுதல் ஆதரவு கிடைக்கும் என்ற நோக்கத்துக்காகவா என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இது நிராகரிப்பல்ல

இந்தச் சந்தேகம் பொய்யாக இருக்கலாம். உண்மையிலேயே பெண்களைப் பெருமைப் படுத்தும் நோக்கத்துடன் ‘பிகில்’ போன்ற திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம். படம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குறைகள் யாவும் விஜய் போன்ற உச்ச நடிகர்கள் பெண்களின் பிரச்சினைகளை ஓரளவுக்காவது பேசும் படங்களில் நடிப்பதில் உள்ள நல்விளைவை மறுதலிப்பதாகாது. ஆனால், இப்படிப்பட்ட படங்களில் உள்ள பிழைகளையும் போதாமைகளையும் சுட்டிக்காட்டும்போது, இந்த வகைமையில் இன்னும் சிறப்பான படங்கள் வரக்கூடும். அது அந்த நடிகர்களின் லட்சக்கணக்கான ரசிகர்களிடம் நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in