

தொகுப்பு: ரேணுகா
அவசரத்துக்கு வராத ஆம்புலன்ஸ்
உடல்நலம் பாதிக்கப்பட்டவருக்கு ஆம்புலன்ஸ் அனுப்பாததால் வழியிலேயே அவர் மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
தமிழகம் - புதுவை எல்லையில் கத்துக்கேணி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள செங்கல் சூளையில் விழுப்புரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வேலை செய்துவந்தார். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுச் சில நாட்களாக வீட்டிலேயே முடங்கியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட அவருடைய தங்கை அண்ணனைப் பார்க்க வந்துள்ளார். பிறகு நான்கு கி.மீ. தொலைவில் உள்ள புதுவை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் கத்துக்கேணி கிராமம் தமிழக எல்லையில் இருப்பதால் ஆம்புலன்ஸ் வழங்க மறுத்துள்ளது. இதனால், உடல்நிலை சரியில்லாத தன்னுடைய அண்ணனைச் செங்கல் சூளையில் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டியில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்தச் சம்பவத்தை வாகன ஓட்டிகள் ஒளிப்படம் எடுத்துள்ளனர். சுப்பிரமணியனைப் பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
விருதை மறுத்த கிரெட்டா
பருவநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவரும் சுவீடன் சிறுமி கிரெட்டா துன்பெர்க், தனக்கு அறிவிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கான விருதை மறுத்துள்ளார்.
டென்மார்க், நார்வே, சுவீடன் உள்ளிட்ட வடக்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்த ‘நோர்டிக் கவுன்சில்’ எனும் அமைப்பு இலக்கியம், திரைத் துறை, இசை, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோரும் சன்மானத்துடன் கூடிய விருது வழங்கிக் கௌரவித்துவருகிறது. சுவீடன் நாட்டின் உயரிய விருதாகக் கருதப்படும் இவ்விருதை வாங்க மறுத்துள்ளார் கிரெட்டா துன்பெர்க். “எனக்கு விருது அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. ஆனால், பருவநிலை மாற்றத்துக்காகப் போராடுபவர்களுக்கு விருது வழங்குவதற்குப் பதில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விஞ்ஞானிகள் முன்வைக்கும் ஆலோசனைகளை அரசியல் தலைவர்களும் மக்களும் கவனித்து அதன்படி செயல்படுவதுதான் இன்றைய தேவை. மேலும், நோர்டிக் கவுன்சிலில் உள்ள நாடுகள் அதிக அளவு பெட்ரோலிய எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுவதற்குத் திட்டமிட்டுள்ளன. இதிலிருந்து கிடைக்கும் பொருட்களால் பூமியின் வெப்பம் தற்போது உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், இவ்விருதை நான் மறுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் கிரெட்டா.
குண்டர் சட்டம் ரத்து
தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகிய நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் மீதான குண்டர் சட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் உண்மை கண்டறியும் குழுவை அமைக்கக்கோரி தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் பத்துப் பேர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரனைக்கு வந்தபோது, வழக்கின் இறுதி அறிக்கையைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், இவ்வழக்கை விசாரித்துவரும் சிபிஐ தரப்பு, இந்த வழக்கில் ரகசிய விசாரணை நடப்பதால் வழக்கின் இறுதி அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உயிரைப் பறித்த மாஞ்சா நூல்
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த குழந்தை சுஜித்தின் மரணத்திற்கு ஒப்பானது மாஞ்சா நூலால் கழுத்தறுபட்டு இறந்த மூன்று வயதுக் குழந்தை அபினேஷின் மரணம். சென்னை கொண்டித்தோப்பைச் சேர்ந்த கோபால், சுமித்ரா ஆகியோரின் மகன் அபினேஷ். இவர்கள் சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புள்ளனர்.
கொருக்குப்பேட்டை பாரதி நகர் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது எங்கிருந்தோ பறந்துவந்த மாஞ்சா குழந்தை அபினேஷின் கழுத்தை அறுத்ததில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழுந்தான். இச்சம்பவத்துக்குக் காரணமான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்படிச் சொன்னாங்க
“அமெரிக்காவில் சர்வதேச அளவில் பெண் அரசியல்வாதிகள் பங்கேற்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக எனக்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிகின்றன. ஆனால், காவிவாதிகளும் பெண் வெறுப்பாளர்களும் என் உடை குறித்து விமர்சித்துவருகிறார்கள். எந்த நிகழ்வுக்கு எவ்வாறு உடுத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும். மேலும், அது என் தனிப்பட்ட உரிமை. பருத்திப் புடவைகள், ஜீன்ஸ், சட்டைகள் மீது எனக்கு அதிக விருப்பம். மாநாடு முடித்து திரும்பி வந்தவுடன் விமர்சனம் செய்தவர்கள் பொறாமைப்படும் வகையில் அவற்றில் சிலவற்றைப் பதிவிடுவேன். அதுவரை கலாச்சாரம் என்றால் என்ன எனத் தேடுங்கள். முன்னோக்கிச் செல்வதில் பெண்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சுமைகள்? ஆண்களுக்கு அது ஏன் இருப்பதில்லை? பெண்களைக் கலாச்சாரத் தன்மையுடன் உடையணியச் சொல்பவர்கள் ஆண்களை ஏன் வேட்டி அணியச் சொல்வதில்லை?”
- கரூர் மாவட்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியின் முகநூல் பதிவிலிருந்து.