Published : 10 Nov 2019 09:44 AM
Last Updated : 10 Nov 2019 09:44 AM

இப்போ இதுதான் பேச்சு: இனி, பெண்கள் உட்காரட்டும்!

நேற்று ஒரு விளம்பரப்படம் பார்த்தேன். மலையாள விளம்பரம். தான் வேலைசெய்யும் துணிக்கடைக்குள் ஒரு பெண் பணியாளர் நுழைகிறார். தனது பணியிடத்துக்குச் சென்று வழக்கம்போல நிற்கிறார்.

சிரித்த முகத்துடன் நின்றுகொண்டிருக்கிறார் கடை முதலாளி. அவருக்குப் பின்னாலிருந்து ஒரு பெண் அந்தப் பெண்ணின் அருகில் செல்கிறார். சிறிய ஸ்டூல் ஒன்றை அப்பெண்ணிடம் கொடுத்து, “இனி நீங்கள் நிற்க வேண்டாம். உட்காரலாம்” என்கிறார். ஆம், கேரள அரசு, துணிக்கடைகளில் வேலைசெய்யும் பெண்களுக்கு அமர ஒரு இருக்கை தர வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்திருக்கிறது.

உட்காருவது பெரிய விஷயமா எனத் தோன்றக்கூடும். தொடர்ந்து நின்றுகொண்டிருப்பவர்களுக்குதான் உட்காருவதில் இருக்கும் வசதி, கௌரவம், வலியின்மை ஆகிய அனைத்தும் தெரியும்.

எத்தனையோ முறை அன்ரிசர்வ்டில் சென்றிருக்கிறேன். அது போலவே பேருந்தில் சென்னைவரை நின்றே பயணித்திருக்கிறேன். அப்போதெல்லாம் உடலைத் தாங்கிய பாரத்தில் கால்கள் கெஞ்சும். உட்கார ஒரு சிறிய இடம் கிடைத்துவிடாதா என ஐம்புலன்களும் விழித்தபடி காத்திருக்கும். சக மனிதர்களை நிற்கவைத்து ரசிப்பது அதிகார குணம். வீடுகளில் மட்டுமல்ல; படங்களிலும் பெண்கள் நின்றுகொண்டிருந்தது ஒரு காலம். அந்த நிலை மாறிவிட்டது.

ஆனாலும், கார்ப்பரேட் வணிகம், துணிக்கடைகளில், நகைக்கடைகளில், எலக்ட்ரானிக் கடைகளில், செருப்புக்கடைகளில் என எல்லா இடங்களிலும் பெண்களை நிற்கவைத்தே வேலைவாங்குகிறது.

குறைந்த கூலிக்கு வேலைசெய்வார்கள், எதிர்த்துப் பேச மாட்டார்கள், விசுவாசமாக இருப்பார்கள் என்பது மட்டுமல்ல; எட்டு மணிநேரமும் நின்றபடி வேலைசெய்வார்கள் என்பதுதான் பெண்களை வேலைக்கு விரும்பும் ரகசியம்.

சுடரிடம் கேட்டேன். இப்படி எட்டு மணி நேரம் நிற்கிறார்களே, உடம்புக்கு என்ன ஆகும் என. “பல மணி நேரம் தொடர்ந்து நிற்பதால் ‘வெரிகோஸ்’ வர வாய்ப்புள்ளது. கால்கள் வீங்கும். நரம்புகள் பாதிக்கப்படும்.

உடலின் கீழ்ப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்படும். மாதவிடாய்க் காலங்களில் தீவிர மன அழுத்தத்தோடு, உடல் நிலையும் பாதிப்புக்குள்ளாகும். சீறுநீர் கழிப்பதை அடக்குவதால் சிறுநீரகப் பிரச்சினை ஏற்படக்கூடும்” என அடுக்கிக்கொண்டே போனார். துணிக் கடைக்குப் போகும் நாம் சிறிது நேரமே நிற்கிறோம். சில கடையில் வாடிக்கையாளர்கள் உட்கார நாற்காலி உண்டு. நாம் அப்போதெல்லாம் துணியின் வண்ணத்தை, டிசைனை மட்டுமே கவனிக்கிறோம். நமக்குத் துணியை எடுத்து விரித்துப்போடும் அந்தப் பெண்களின் வலிகளைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

கடைக்குள் நுழைகிறோம். மூன்று பெண்கள் வரிசையாக நின்று வணக்கம் வைக்கிறார்கள். நாம் பதிலுக்கு வணக்கம்கூடச் சொல்லாமல் அலட்சியமாகக் கடைக்குள் நுழைகிறோம். அந்த வணக்கத்தில் அன்பின் சிறுஈரமும் இருப்பதில்லை. அது எட்டு மணி நேரம் நின்றபடி வைக்கும் வலி வணக்கம்.

வரலாற்றில் நின்றுகொண்டிருந்தவர்களை உட்காரவைக்கவும், சிறிது ஓய்வெடுக்க வைக்கவும், உலகமெங்கும் கம்யூனிஸ்ட்டுகள் நின்றபடி முழங்கினார்கள்; போராடினார்கள். கேரள முதல்வர் பினராயி அந்தப் பாரம்பரியத்தில் வந்தவர். ஒரு ஒப்பம் பெண்களின் வலியைத் துடைத்திருக்கிறது.

தமிழகக் கடைகளிலும் பெண்கள் அமரவைக்கப்பட வேண்டும். பெண்கள் உட்காரும்போதுதான், நாகரிகம் தலைநிமிர்ந்து நிற்கிறது!

- ஆர். கரிகாலன் முகநூல் பதிவிலிருந்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x