Published : 10 Nov 2019 09:50 AM
Last Updated : 10 Nov 2019 09:50 AM

இனி எல்லாம் நலமே 31: கருப்பை கட்டியா? கவலை வேண்டாம்!

பெண்களில் சிலருக்கு 30 வயதைத் தாண்டிய பிறகு திடீரென்று மாதவிடாய் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். சாதாரணமாக மூன்று நாட்கள் வருபவர்களுக்கு ஐந்து நாட்கள், ஏழு நாட்கள் என அதிக உதிரப்போக்கு வரலாம். உதிரப்போக்கு கட்டி கட்டியாக வரலாம். ஐந்தாறு மாதங்கள் ஆனாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

பலரும் ஆறு மாதங்களாக இப்படி உதிரம் போகுது, ஒரு வருஷமாக இப்படித்தான் இருக்கிறது என்று காலம் தாழ்த்தி வருவார்கள். இது மிகத் தவறு. முன்பைவிட அதிகமாக உதிரப்போக்கு இருந்து, 3, 4 நாப்கின்கள் மாற்றியதற்குப் பதிலாக 7, 8 என மாற்ற வேண்டி இருந்தாலோ கட்டி, கட்டியாக உதிரப்போக்கு இருந்தாலோ அவை மூன்று, நான்கு மாதங்களுக்குத் தொடர்ந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனென்றால், பிரச்சினை சிறியதாகவும் இருக்கலாம்; பெரியதாகவும் இருக்கலாம்.

சிறுநீரகமும் பாதிக்கப்படலாம்

30 வயதைத் தாண்டிய பெண்களுக்கு அதிகமாக வரக்கூடிய பிரச்சினை ஃபைப்ராய்டு என்று சொல்லக்கூடிய கருப்பை நார்த்திசுக்கட்டிகள்தான். இவை கடுகு அளவில் இருந்து நான்கு, ஐந்து கிலோ எடை அளவுள்ள கட்டியாகக்கூட இருக்கலாம்.

அல்ட்ராசவுண்ட் எடுத்துப் பார்த்து இவை கருப்பையில் எந்த இடத்தில் இருக்கின்றன, எந்த அளவில் இருக்கின்றன என்று பார்க்க வேண்டும். கருப்பையில் மூன்று தசை அடுக்குகள் உள்ளன. வெளியே ‘ஜீரோ லேயர்’ என்ற மேற்பகுதி இருக்கிறது. இரண்டாவதாக ‘மயோமெட்ரியம்’ என்ற நடுதசைப் பகுதி இருக்கிறது. மூன்றாவது, ‘எண்டோமெட்ரியம்’. அதாவது குழந்தையைத் தாங்கக்கூடிய கருப்பைக் குழி.

கருப்பையின் வெளிப்புறச் சுவரில் வளரக்கூடிய கட்டிகளால் பிரச்சினை குறைவு. ஆனால், கட்டி பெரிய அளவில் வளர்ந்தால் பிரச்சினை ஏற்படலாம்.

சாதாரணமாகப் பெண்களுக்குக் கருப்பை என்பது மூடிய கை, அதாவது முஷ்டி அளவில் இருக்கும். அதில் கட்டி வளர்ந்து மிகப் பெரிதாகும்போது அது சிறுநீரகத்தில் இருந்து வரக்கூடிய சிறுநீர்த்தாரையை அழுத்தும். இது வழியாகத்தான் சிறுநீர் வெளியே வருகிறது. சிறுநீர்த்தாரை அழுத்தப்பட்டு குறுகும்போது சிறுநீர், சிறுநீரகத்திலேயே தங்க ஆரம்பிக்கும். இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும்.

கருப்பையின் பின்பகுதியில் கட்டி ஏற்பட்டால் பெருங்குடலை அழுத்தும். இதனால் மலச் சிக்கல் ஏற்படும். இது முதுகுத் தண்டு நரம்புகளை அழுத்தும்போது முதுகு வலி வரலாம்.

காயம் இல்லாத சிகிச்சை

அடுத்து கருப்பையின் வெளி, உட்புறச்சுவருக்கு இடைப்பட்ட நடுப்பகுதியில் அதாவது மயோமெட்ரியத்தில் வரக்கூடிய நார்த்திசுக்கட்டிகள். இவை அதிகப்படியான ரத்தப்போக்கை உண்டாக்கும். கருப்பை நார்த்திசுக் கட்டிகளுக்கான சிகிச்சையைப் பெண்ணின் வயது, திருமணம் ஆகிவிட்டதா, குழந்தைப்பேறு போன்ற காரணிகளை வைத்துத்தான் முடிவெடுக்க முடியும்.

ஒரு பெண்ணுக்குக் குழந்தைப் பேறெல்லாம் முடிந்துவிட்டது. 45 வயதைக் கடந்துவிட்டார். கருப்பை கட்டியை மட்டும் அகற்றுவதா அல்லது கருப்பையையே அகற்றிவிடலாமா என்று அவர்களிடம் கேட்கலாம். 45 அல்லது 50 வயது ஆகிவிட்டால் கருப்பையையே எடுத்துவிடுவது நல்லது. பெண்ணுக்கு 30 வயதுதான் ஆகிறது, ஒரு குழந்தைதான் உள்ளது, மேலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் கொண்டவர்களாக இருக்கும்போது கட்டியை மட்டும்தான் அகற்ற வேண்டும். கருப்பையில் உள்ள கட்டிகளை அகற்றும் முறைக்கு ‘மையோமெக்டமி’ (myomectomy) என்று பெயர். லேப்ராஸ்கோபி முறையில் சிறிய துளைகள் இடப்படுவதால் பெரிய காயம், தழும்பு போன்றவை தவிர்க்கப்படும்.

நிறையும் குறையும்

கருப்பைக்கு உள்ளே எண்டோ மெட்ரியத்தில் வளரும் கட்டிகளை அகற்ற, ஹிஸ்ட்ரோஸ்கோபிக் (Hysteroscopic) மயோமக்டெமி என்ற சிகிச்சை முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இளம் வயது பெண்களுக்குக்கூடக் கருப்பை நார்திசுக்கட்டிகள் வரக்கூடும். அவ்வாறு வரும்போது கருப்பையை அகற்றாமல் கட்டியை மட்டுமே அகற்ற வேண்டும். அதற்கு ஒரு புதிய வழிமுறை உள்ளது. இது Focused Ultra Sound Shrinking of the Fibroid என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில் அறுவை சிகிச்சை இல்லாமல் கட்டி மட்டும் சுருங்கவைக்கப்படுகிறது. ஒரே நாளில் கட்டியைச் சுருங்கச்செய்துவிடலாம்; உடனே வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்பது இந்த சிகிச்சை முறையின் சிறப்பு. ஆனால், இந்த முறை எல்லா இடங்களிலும் இல்லை. பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. செலவும் அதிகம். இந்த முறையில் கட்டியை முழுமையாக அகற்ற முடியாது. உதாரணமாக 5 செ.மீ. உள்ள கட்டியை அரை செ.மீ. அளவுக்குச் சுருக்கலாமே தவிர, முழுமையாக அகற்ற முடியாது. ஒரு சில நேரம் அந்தப் பெண்ணுக்குக் காலப்போக்கில் அந்தக் கட்டிகள் மீண்டும் உருவாகக்கூடும்.

கருப்பையின் உள்ளே வரும் கட்டிகளை ‘சிஸ்ட்ரோஸ்கோபி’ முறை மூலம் அகற்றலாம். சிஸ்ட்ரோஸ்கோபி என்பது வாய் வழியாகக் குழாயை நுழைத்து குடலைப் பார்ப்பது போல, கர்ப்பப்பையின் வாய் வழியாகக் குழாயைச் செலுத்தி கருப்பையின் உள்ளே பார்க்கும் முறை. சிஸ்ட்ரோஸ்கோபி முறையிலேயே சிறிய அறுவைசிகிச்சைகள் செய்ய முடியும். இதற்கு ‘சிஸ்ட்ரோஸ்கோபிக் ரிசெக்‌ஷன்’ என்று பெயர்.

அச்சப்படத் தேவையில்லை

‘மயோமெட்ரிய’த்தில் கட்டி இருந்தால் சிஸ்ட்ரோஸ்கோபி பயன்படாது. அதற்கு லேப்ரோஸ்கோபி முறை கையாளப்படுகிறது. இன்றைய நவீன சிகிச்சை முறையில் கட்டி எவ்வளவு பெரியதாக இருந்தாலும் கட்டியைச் சிறிது சிறிதாக உடைத்து லேப்ரோஸ்கோபி மூலம் வெளியே எடுத்துவிடலாம். கட்டி மிகவும் பெரியதாகிவிட்டால் (5 மாத குழந்தை அளவுக்கு) அறுவை சிகிச்சை செய்துதான் அகற்ற முடியும். இங்கும் பெண்ணின் வயது, குழந்தைப்பேறு ஆகியவற்றைப் பொறுத்து கட்டியை மட்டுமோ கருப்பையையோ அகற்றலாம்.

ஃபைப்ராய்டு கட்டி வரும்போது பயப்படத் தேவையில்லை. இது புற்றுநோய்க் கட்டியாக இருப்பதற்கு 1 சதவீதம் மட்டுமே சாத்தியம் உள்ளது. கருப்பையில் குழந்தை வளர்கிறது; சினைமுட்டைப்பையில்தான் ஹார்மோன் வருகிறது. அதனால், சுமாராக 35-38 வயது கொண்ட பெண்ணுக்குக் கட்டி வரும்போது சினைமுட்டைப் பையை விட்டுவிட்டுக் கர்ப்பப்பையை மட்டும் அகற்றும்போது அந்தப் பெண்ணுக்கு இயற்கையான மெனோபாஸ் காலம் வரும்வரை தேவையான ஹார்மோன்கள் சினைமுட்டைப்பையிலிருந்து சுரக்கும்.

இந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு இல்லற உறவில் பிரச்சினை ஏற்படுமா என்று சந்தேகம் வரலாம். அதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. அதனால், கருப்பை கட்டியையோ கருப்பையையோ அகற்றிய பிறகு ஆறு வாரங்கள் அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம்.

(நலம் நாடுவோம்)
கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x