Published : 10 Nov 2019 09:53 AM
Last Updated : 10 Nov 2019 09:53 AM

விவாதக் களம்: குழந்தைகளைக் காப்பது அனைவரின் பொறுப்பு

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து குழந்தை சுஜித் மரணமடைந்த துயர நிகழ்வை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அந்தக் குழந்தையின் மரணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அது குறித்து நவம்பர் 3 அன்று வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் ‘இந்த மரணத்துக்கு யார் பொறுப்பு?’ எனக் கேட்டிருந்தோம். அதற்கு ஏராளமான வாசகர்கள் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு.

ழலை சுஜித்தின் மரணம் எல்லோரது இதயங்களிலும் மன வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது. மற்றொரு பக்கம் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிணற்றை மூடாதது பெற்றோருடைய தவறுதான். அதேநேரம் ஆபத்தான ஆழ்துளைக் கிணறுகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உள்ளாட்சித் துறை நிர்வாகம் என்ன செய்தது? தினமும் ஊருக்குச் சென்று ஆய்வுசெய்ய வேண்டிய அதிகாரிகள் என்ன செய்தார்கள்? இதில் அரசுக்கும் பொறுப்புள்ளது என்பதைப் புறந்தள்ள முடியாது. சில நாட்கள் மட்டுமே பரபரப்பாகப் பேசப்படும் இந்தக் கொடிய மரணம் படிப்படியாக மறந்தும் போகும். சமூகத்தின் இந்த மனப்பான்மையே ஒரு கொடிய நோய்.

- ப. பீர் இலாஹி, உத்தமபாளையம்.

ழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தையை மீட்கும் கருவியொன்றைக் கண்டுபிடிக்கும் அளவுக்குக்கூட இங்கே யாருக்கும் திறமையில்லையா என்பதை எண்ணும்போது நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியாகிறது.

- எஸ். ராஜகணேஷ், தலைஞாயிறு.

குழந்தை சுஜித்தின் மரணம் ஒரு விபத்து என்ற புரிதல் வேண்டும். ஆழ்துளைக் கிணற்றை மூடாதது பெற்றோரின் குற்றமா? வல்லரசு நாடுகளின் பட்டியலில் இடம்பிடிக்கத் தொடங்கும் முயற்சியில் இருக்கும் அரசு, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்கான கருவியைக்கூட இன்னும் கண்டுபிடிக்காதது குற்றமா? அல்லது அப்பகுதி கிராம அதிகாரிகள் மூடப்படாமல் இருந்த ஆழ்துறைக் கிணற்றை மூடுவதற்கான முயற்சிகள் எடுக்காதது குற்றமா என ஆராய்ச்சி செய்தால், அதன் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இதுபோன்ற விபத்துகளுக்குச் சமூகமே பொறுப்பு. இதுபோன்ற கொடும்நிகழ்வுகள் இனியும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பது அவசரம், அவசியம். ஆழ்துளைக் கிணறுகளுக்கான விதிமுறைகளை கடுமையாக அமைத்து அவற்றைப் பொதுமக்களும் அரசும் பின்பற்றுவது அவசியமாகும்.

- இந்திராணி சண்முகம், திருவண்ணாமலை.

பிள்ளையைக் கண்காணிக்காதது பெற்றோரின் தவறுதான். ஆனால், அதேநேரம் இதுபோன்ற நூற்றுக்கணக்கான விபத்துகள் நடந்த பின்பும் போதுமான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத அரசின் அலட்சியப்போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. குழந்தையின் மரணத் தறுவாயிலும் மதச்சாயம் பூசி சிலர் பேசியதை எந்த விதத்திலும் ஏற்றுகொள்ள முடியாது. அரசு சார்பில் ஆழ்துளைக் கிணறுகளை மூட இன்னும் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பொறுப்பை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

- ஜானகி ரங்கநாதன், சென்னை.

ழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளைக் காப்பாற்ற ‘ஹைபிரஷர் ஏர் பலூன் டெக்னாலஜி’, ‘Plucking’, ‘Grab’, ‘ஜியோ லிஃப்ட் பலூன் அம்பர்லா’ எனப் பல தொழில்நுட்பங்கள் உள்ளன. பிள்ளைகளைக் கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்பது எந்த அளவுக்கு அழுத்தம் தரப்படுகிறதோ, அதேபோல் ஒரு குழந்தையின் பாதுகாப்பில் அரசுக்கும் சமமான பங்கு இருக்கிறது. இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்த பின்பு ஆழ்துளைக் கிணற்றில் விழுவோரைக் காப்பாற்றும் கருவியைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் என அரசு தற்போதுதான் அறிவித்துள்ளது. ஆனால், சுஜித்துக்கு முன்பு எத்தனைக் குழந்தைகள் இதுபோல் இறந்திருக்கிறார்கள்? ஏன் அரசு இதுவரை அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை? இதுபோன்ற தொடர் மரணங்கள் நிகழாமல் இதுவரை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது உள்ளிட்ட பல கேள்விகள் மக்கள் மத்தியில் கேட்கப்படுகின்றன. இவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் குழந்தைகளின் மரணங்களைத் தடுப்பதும் அரசின் கடமை.

- எஸ். ராமு, திண்டுக்கல்.

ழ்துளைக் கிணற்றைப் போடும் இடத்தின் சொந்தக்காரர், அதில் தண்ணீர் வரவில்லையெனில் பிவிசி பைப்பை எடுத்துவிடுகிறார். மேலும், வீண் செலவு என்று போர்வெல்லை மூடி போட்டு அடைப்பதில்லை. போர்வெல் போட்டுத்தரும் ரிக் இயந்திரத்தின் உரிமையாளரும் இதைக் கண்டுகொள்ளாமலும் உரிமையாளர்களிடம் இதன் அவசியத்தைக் குறித்துச் சொல்லாமலும் அலட்சியத்துடன் விட்டுவிடுகிறார். அடிப்படைத் தவறு இதுதான். இதைச் சரிசெய்யும் நடவடிக்கையில் நில உரிமையாளர்களும் உள்ளாட்சி அமைப்புகளும் கவனமாகச் செயல்பட வேண்டும்.

- ஜ.போவாஸ், சேலம்.

சுஜித்தின் மரணம் எதிர்பாராத விபத்து. இந்தத் தவறுக்குக் குழந்தையின் பெற்றோரும் அரசு நிர்வாகமும் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும். நீர் மேலாண்மையை முறையாகப் பராமரிக்கத் தவறியதாலேயே ஆழ்துளைக் கிணறுகளை அதிக எண்ணிக்கையில் தோண்ட வேண்டிய அவசியம் உருவாகிவிட்டது. ஆனால், நம் நாட்டில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் அரசின் அனுமதி பெற்ற பிறகு தோண்டப்படுகின்றனவா? அதற்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பதுகூட பலருக்கும் தெரியாது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 12 எனக் கூறப்படுகிறது. அவற்றில் மூன்று நிகழ்வுகளில் மட்டுமே குழந்தைகளைக் காப்பாற்ற முடிந்துள்ளது. இதுதொடர்பான அறிவுரைகளை உயர் நீதிமன்றம் அரசுக்கு வழங்கியுள்ளது. ஆனால், அரசு நிர்வாகம் அவற்றைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதைத்தான் சுஜித்தின் மரணம் உணர்த்தியுள்ளது.

- பொன். கருணாநிதி, கோட்டூர்.

குழந்தை சுஜித் மரணம் தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. எந்தப் பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு இப்படியொரு முடிவு வரும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆழ்துளைக் கிணற்றில் விழுகிறவர்களை மீட்கச் சிறப்புத் தொழில்நுட்பக் கருவிகளைக் கண்டுபிடித்திருந்தால் சுஜித்தின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும். ஆழ்துளைக் கிணறுகளை மூட அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, இதுபோன்ற மரணங்களைத் தடுக்க வேண்டும்.

- ரேவதி விஸ்வநாதன், தேனி.

திர்பாராத இயற்கைப் பேரிடர், உயிரிழப்புகள் போன்றவை ஏற்படும்போது பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி அளிப்பதோடு கடமை முடிந்துவிட்டதாகத் தமிழக அரசு கருதுவது ஏற்புடையதல்ல. தனி மனிதன் தவறு செய்யும்போது அதைச் சமூக அக்கறையோடும் மனிதநேயத்தோடும் சரியான முறையில் செயல்படுத்துவதுதானே மக்கள் நலம் பேணும் அரசுக்கு அழகு? ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுஜித் போன்ற குழந்தைகள் தவறி விழும் நிலையில் அவர்களைக் காப்பாற்ற கருவிகள் இல்லாதது அரசின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது. இந்தியாவில் புதிதாகக் கிணறு தோண்டும்போதும் ஆழப்படுத்தும்போதும் சீரமைக்கும்போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை 2010-ல் உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டிருந்ததைத் தமிழக அரசு பின்பற்றியிருந்தால் இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுத்திருக்க முடியும். இனிமேலும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் தொடராமல் தடுத்து நிறுத்த மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு உச்ச நீதிமன்றம் கூறியுள்ள வழிகாட்டுதலைச் செயல்படுத்த வேண்டியதும் அரசின் கடமை.

- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.

ருவரையொருவர் குற்றம் சாட்டுவதைக் காட்டிலும் விமர்சனங்களை ஆராய்ந்து அலசிப் பாடம் அறிவது சிறப்பு. அரசியல் தாண்டிய மனிதத்தையும் அறிவியல் நோக்கையும் வளர்த்துக்கொண்டால் நல்ல தீர்வுகள் கூடிய விரைவில் கிடைக்கும்!

- இரா.பொன்னரசி, வேலூர்.

டுக்காட்டுப்பட்டி ஆழ்துளைக் கிணறு சோக சம்பவத்துக்குக் கிணற்றை அஜாக்கிரதையாக, ஆபத்து விளைவிக்கும் விதத்தில் கண்காணிப்பின்றிக் கைவிட்ட கிணற்றின் உரிமையாளரே பொறுப்பு. இருந்தாலும் இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்நிகழ்வாகிவிட்டதற்கு உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத அரசும் பொறுப்பேற்க வேண்டும். பயனில்லாத ஆழ்துளைக் கிணறுகள், பாதுகாப்புச் சுவரில்லாத பாழுங்கிணறுகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படும் என அறிவித்தால், இவற்றில் ஒன்றைக்கூட இம்மாதிரி நிலைமையில் பார்க்க முடியாது. அல்லது இவையனைத்தும் காணாமல் போய்விடும்! விபரீத நிகழ்வுகளுக்கும் வீண் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

- வி.ப்ரீத்தி, ஊரப்பாக்கம்.

ரசு தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களாகிய நாமும் விழிப்புடன் இருந்து, செயல்பட வேண்டும். அந்தந்த பகுதிகளில் இருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இவ்விஷயத்தில் முனைப்பு காட்டி, மூடப்படாத கிணறுகளை, ‘மழை நீர் சேகரிப்பு’ அமைப்புகளாக மாற்றுவதற்கு உதவ வேண்டும். ஒன்றிரண்டு மாதங்கள் இதைப் பற்றிப் பேசி, விவாதித்து விட்டு, வழக்கம்போல் வேறு விஷயங்களில் கவனத்தைத் திருப்பாமல் உடனடியாகப் பேரிடர் மீட்புக் குழுவினருக்குத் தேவையான கருவிகள், பயிற்சிகளை அரசாங்கம் அளிக்க வேண்டும். மொத்தத்தில் மெத்தனம் கூடாது.

- பி. லலிதா, திருச்சி.

ழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித்தின் மரணம் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுவது துரதிர்ஷ்டவசமானது. சிறுவனைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் பயனற்றுப்போய், பெற்றோர் கண்முன்னேயே அவன் உடல் சின்னாபின்னமாக மீட்கப்பட்டது கொடுமையான நிகழ்வு. இவையனைத்தையும் தூக்கியடிக்கும்படியானது இழப்பீடு, சிறுவன் சார்ந்த மதம் பற்றிய கருத்துக்கள். இவை நம் சமுதாயத்தின் மனிதாபிமானத் தன்மையை கேள்விக்குறியாக்குகின்றன. இதுபோன்ற எத்தனையோ சம்பவங்களுக்குப் பின்னும், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததாலேயே பொதுமக்களிடையே எச்சரிக்கை உணர்வு ஏற்படாமல் அவர்கள் அஜாக்கிரதையாக இருக்கும் நிலை ஏற்படுகிறது. ஆழ்துளைக் கிணறுகளை முழுமையாக மூட முடியவில்லை என்றாலும், பயன்படாத கிணறுகளின் மேல் சிறிய கட்டிட அமைப்போ, கிணற்றுக்கு மேல் கான்கிரீட் மூடியையோ பொருத்தியிருக்கலாம். இது போன்ற ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை உடன் மேற்கொள்வதும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அரசின் கடமை. இத்தகைய துயரச் சம்பவங்களில் ஆதாயம் தேட முற்படுவோரை முற்றிலும் புறக்கணித்து, ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவது அறிவுடைமை!

- கே.ராமநாதன், மதுரை.

ம் பிள்ளைகள் விளையாடும்போது எதிர்பாராமல் நடந்துவிடும் சிறு கீறல்களுக்குக்கூட வருந்தித் தவித்துப்போகும் பெற்றோர் நிறைந்த தேசம் நம்முடையது. அவர்களே ஆழக்குழியில் குழந்தைகளை விழவைப்பார்களா? நெஞ்சு வெடிக்க அழவைப்பார்களா? எப்போதும் விழிப்பை விதைப்பது அரசாங்கம் என்றாலும் நாமும் விழிப்புணர்வோடு வாழ்ந்தா்ல்தான் அது நடைமுறைக்கு வரும். வாழ வேண்டிய தளிர்களின் உயிர்காக்க இனியாவது ஒரு கருவியைக் கண்டுபிடித்து, சுஜித்தின் மரணத்தையே இறுதி என்றாக்கிட அறிவுச் சமூகம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

- ஆதிமுதல்வன், தருமபுரி.

பேரிடர் குறித்து நமது அரசுக்குச் சரியான புரிதல் இல்லை. புரிதல் இல்லாததால்தானே அந்த நேரத்தில் போய் ஒவ்வொரு செயல்முறையையும் பரீட்சித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.பழிச்சொல்லில் இருந்து தப்பிக்க வேண்டும். அதற்காக எப்படியாவது எதையாவது செய்து நேரத்தை கடத்தினார்களோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. சட்டத்தை இறுக்கினால் மட்டுமே மக்கள் தங்கள் கடமையைச் செய்வார்கள். அரசின் அஜாக்கிரதை, மக்களின் அஜாக்கிரதை ஆகிய இரண்டும் சங்கமிக்கும் இடம்தான் உயிர்ப்பலிகள் ஏற்படும் இடமாக உள்ளது.

- ஜே.லூர்து, மதுரை.

ண்ணீருக்காக ஆழ்துளைக் கிணறுகள் பரவலாகப் பெருகிவரும் இந்நாளில், தண்ணீர் இல்லாததால் கைவிடப்பட்ட கிணறுகள் தவறி விழும் குழந்தைகளின் மரணக் கிணறுகளாகி வருவது பலமுறை நிகழ்கிறது. இருந்தும், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணாமலிருப்பது நமது கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது.

- ஆர்.ஜெயந்தி, மதுரை.

ழ்துளைக் கிணறு போடும் போதும் துளையிடும் வாகன உரிமையாளர் அரசிடம் அனுமதி பெற்றும், துளையிட் பின் அரசிடம் எவ்வளவு ஆழம், இடம், மண் வளம் போன்றவை பற்றி சரியான விவரங்களை அரசுப் பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டும். பின் அரசாங்கம் ஆழ்துளைக் கிணறு நிர்வாக அலுவலர்களை நியமித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அதைக் கண்காணித்து, பாதுகாப்பாக உள்ளதா எனப் பதிவேட்டில் பதிய வேண்டும். அவ்வாறு பாதுகாப்பாக இல்லை எனில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.ஒவ்வொரு ஆழ்துளைக் கிணற்றின் விவரமும் நமது அரசு பதிவேட்டில் இடம்பெற வேண்டியது இனிவரும் காலத்தில் மிகவும் முக்கியம்.

- மஞ்சுமதி, நாமக்கல்.

பிஞ்சினைப் புதைத்த மண் காய்வதற்குள் அடுத்த பேசுபொருளை நோக்கிய ஊடகங்களின் நகர்வும், அதன்வழியே செல்லும் மக்களின் மனங்கள் எனத் தீர்வுகளை நோக்கிய எந்தவித முன்னகர்வும் இல்லாமலேயே தற்போதைய சமூக அமைப்பு செல்கிறது. மீட்புப்பணியைக் காட்சிப்படுத்திய ஊடகங்கள் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தவறுக்காக வழங்கப்பட்ட தண்டனையும் மக்கள் மனதில் பதிய முயன்றிருக்க வேண்டும்.

- தனப்பிரியா, கோவை.

ழ்துளைக் கிணறு மரணங்கள் மட்டுமல்ல; பேனர் விழுந்து இறந்தது, சாக்கடைக் குழி மரணங்கள் என்று எல்லாவற்றுக்கும் அரசு, தனிநபர், சமூகம் என்று எல்லாமேதான் பொறுப்பேற்க வேண்டும். சுயநலமான சமூகம், பொறுப்பில்லாத தனிநபர்கள், கண்டுகொள்ளாத அரசாங்கம் என அனைவருமே இவற்றுக்குக் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தத் தீபாவளியை யாராலும் மறக்கவே முடியாது. எந்தப் பெற்றோரும் குழந்தை சாகட்டும் என்று அசிரத்தையாக இருக்க மாட்டார்கள். மனவேதனையில் இருப்பவர்களை மேலும் நோகடிப்பதுபோல் கருத்து கந்தசாமிகள் பதிவிடும் வக்கிரமான பதிவுகள் உள்ளன. தற்கொலை செய்யும் எண்ணமுள்ளவர்களை ஆழ்துளை கிணற்றில் விழுந்தால் முப்பது இலட்சம் கிடைக்கும் என்று நகைச்சுவை(?) மீம்கள் பதிவிடுவது சம்பந்தப்பட்டவர்களை எப்படி மனவருத்தம் கொள்ளச்செய்யும் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத அறிவிலிகள் நிறைந்த சமுதாயம் இது. கண்முன்னால் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு உயிர் பிரிவதை டி.ஆர்.பி. ரேட்டிங்குக்காக நேரடி ஒளிபரப்பு செய்த ஊடகங்களும் இந்த மரணத்துக்குப் பொறுப்பு. குழந்தையின் கொடூர மரணத்தில் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்ட அரசியல்வாதிகளும் பொறுப்பு.

இதில் யாரை நாம் நோவது? நமக்கு சுஜித்தின்மேல் நான்கு நாள் மட்டுமே பாசம். ஆனால், காலமெல்லாம் கண்ணீர்வடிக்கப் போகும் அவன் பெற்றோருக்கு என்ன கொடுத்தாலும் அவனது இழப்புக்கு ஈடாகுமா? இதுபோன்றதொரு அகால மரணத்தில் இறந்து போன நபர் உயிருடன் இருந்தால் ஈட்டக்கூடிய வருமானத்தைக் கணக்கில் கொண்டு இறந்து போன நபரின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு அளிக்கப்படுவது வழக்கம். அதுபோலத்தான் சுஜித்தின் பெற்றோருக்கும் அரசு இழப்பீடு வழங்கியுள்ளது. அதைக் கொச்சைப்படுத்தும் கருத்துகளை நாம் ஆதரிக்கக் கூடாது.

- தேஜஸ், கோவை.

தாய்மையைப் போற்றும் இந்தியத் தாய்நாட்டில் இப்படியொரு அவலம் நிகழ்ந்ததற்கு அனைவருமேதான் பொறுப்பு. சொல்லறைகளைக் கல்லறையாய் எழுப்பியவர் ஒரு புறம்; மாண்ட உயிர் மீண்டு வராதா என ஏங்குபவர் இன்னொரு புறம். பால் மணம் மாறாக் குழந்தை சுஜித்தின் மரணம் அரசுகள் அப்பாலும் சிந்திக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

- மீ. ஷாஜஹான், தலைமையாசிரியர் (ப.நி.), திருவிதாங்கோடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x