Published : 03 Nov 2019 11:09 AM
Last Updated : 03 Nov 2019 11:09 AM

வாசிப்பை நேசிப்போம்: இசையில் தொடங்குதம்மா

என் அப்பாதான் என் வாசிப்புப் பழக்கத்தின் ஆசான். தொடக்கப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கால் தவறி படிகளில் உருண்டு விழந்துவிட்டதால் கீழ் தாடையில் அடிபட்டு வாய் ஒரு பக்கமாகச் சென்றுவிட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

நாளடைவில் ஒரளவு சரியாகிவந்தாலும் பேசும்போது சரியான உச்சரிப்பு இருக்காது. ழ, ள,ல ஆகிய எழுத்துகளை முறையாக உச்சரிக்க முடியாமல் அவதிப்பட்டுவந்தேன். நான் சகஜமாக இருக்க முடியாமல் தவிப்பதைப் பார்த்த சுற்றத்தார், “பெண் குழந்தை வேறு; வளர்ந்த பிறகு ரொம்ப கஷ்டப்படுவாள்” என அப்பாவைப் பயமுறுத்திவிட்டனர். மற்றவர்கள் என்னைப் பரிகாசத்தோடு பார்ப்பதை நினைத்து அம்மா அப்பாவிடம் அழ, அதை சீர்செய்யும் செய்யும் முயற்சியில் அப்பா இறங்கினார்.

சரியாகப் பேச முடியாமல் வீட்டில் முடங்கி இருந்த என்னை மீண்டும் பள்ளிக்கு அனுப்பினார். “யாருடைய புறக்கணிப்பாலும் மனம் தளர்ந்துவிடக் கூடாது. வாழ்க்கையில் அழியாத செல்வம் கல்வி மட்டுமே. அதை நீ விரும்பிப் படிக்கத் தொடங்கினால் உன்னுடைய தாழ்வு மனப்பான்மை என்ற இயலாமையிலிருந்து வெளிவர முடியும்” என தைரியமூட்டினார்.

தினமும் பள்ளியில் நடக்கும் விஷயங்களை ஒன்றுவிடாமல் சொல்லச் சொல்வார். அதன் பிறகு நாளிதழ்களை சத்தம்போட்டு வாசிக்கச் சொல்வார். மனதுக்குள் என்னைச் செய்தி வாசிப்பாளராக நினைத்துக்கொண்டு ஏற்ற இறக்கத்தோடு சத்தமாக வாசிப்பேன். வார இதழ்களை படித்தபோதெல்லாம் கிடைத்த அனுபவங்கள் வாசிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தின.

பள்ளியில் நடக்கும் பேச்சுக் போட்டிகளில் வெற்றி பெறுவதைவிடப் போட்டியில் கலந்துகொள்வதுதான் முக்கியம் என தைரியப்படுத்துவார் அப்பா. தலைப்புக் கேற்ற புத்தகங்களை வாங்கித் தருவார். இப்போது என் மகன்கள் பேச்சுப் போட்டிகளில் கலந்து பரிசுடன் திரும்பும்போது என் அப்பா சொன்ன வாசிப்பு மந்திரத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்.

கடையில் பொருட்கள் வாங்கும் பொட்டலங்களைக்கூட விட்டுவைத்ததில்லை நான். பலவற்றையும் வாசித்து, பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டேன். எங்கள் வீட்டில் தொலைபேசி இல்லாத காலத்தில் கடிதங்கள்தான் உறவுகளை ஒருங்கிணைக்கும் பாலங்களாக இருந்தன. கடிதத்தை மடிக்கும் இடம், ஒட்டும் இடம் என ஒரு இடத்தையும் விட்டுவிடாமல் எல்லா இடங்களிலும் எழுதுவேன்.

மனதுக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அந்தக் கடிதங்களை வாசித்துப் பார்ப்போம். அம்மா, அப்பா எழுதிய கடிதங்களை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன். பேசவே முடியாது என்ற நிலையில் இருந்த எனக்கு வாசிப்புதான் வழிகாட்டியாக இருந்து என் பேச்சை மீட்டுக்கொடுத்தது. அதற்குத் துணையாக இருந்தவர் என் அப்பா.

என் மகனின் கல்லூரி விழாவில் பேச அழைத்தபோது என் பேச்சு சரியாக இருக்காது என்றுதான் தொடங்கினேன். ஆனால், பேசி முடித்த பிறகு பலத்த கைதட்டல் எழுந்தது. அப்போது அப்பாதான் என் கண்முன் தெரிந்தார். அவர் மறைந்தாலும் அவரால் எனக்கு உண்டான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் நினைத்துப் பெருமைப்படுகிறேன். நம் மனத்தில் நிறைந்திருக்கும் குழப்பங்கள், வேதனைகள், தேடல்கள், எதிர்பார்ப்புகள் என எல்லாவற்றுக்கும் வாசிப்பில்தான் பதில் அடங்கியுள்ளது. வாசிப்பு என்பது இசையைப் போன்றது. வாசிக்கிறவர்களால் மட்டுமே அதை உணர முடியும்.

- டி.ஜெயபாரதி.

விடுதலையின் வாசல்

நாளிதழ்களின் இணைப்பாக வரும் சிறுவர் இதழ்களை மூன்றாம் வகுப்பிலிருந்தே படிக்கத் தொடங்கினேன். அதற்கு உந்துசக்தியாக இருந்தவர் என் அப்பா. அந்த நாட்களில் விற்பனையான நாளிதழ், வார, மாத இதழ்களை எல்லாம் ஒன்றுவிடாமல் வாங்கி வந்துவிடுவார். அண்ணன் ‘அம்புலி மாமா’, ‘பால மித்ரா’ படக்கதைகள் வாங்கி வருவான். அப்போது தொடங்கியதுதான் வாசிப்பின் மீதான நேசம். இன்றுவரை தொடர்கிறது.

கல்லூரியில் சேர்ந்த பிறகு நாவல், சிறுகதைகளைப் படிக்கத் தொடங்கினேன். சிவசங்கரி, இந்துமதி, திலகவதி போன்ற பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் எனக்கு வாழ்வின் பரிமாணங்களை உணர்த்தின. சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், பட்டுக்கோட்டை பிரபாகர், தேவிபாலா போன்றவர்களின் கதைகளும் என் வாசிப்பு ஆர்வத்துக்குத் தீனிபோட்டன. எழுத்தாளர் பிரபஞ்சனின் சிறுகதைத் தொகுப்பைத் தற்போது படித்துக்கொண்டிருக்கிறேன்.

என் வயதில் உள்ள பல பெண்கள் தொலைகாட்சித் தொடர்களில் மூழ்கி நேரத்தையும் மகிழ்ச்சியையும் தொலைத்துவருகின்றனர். அதைப் பார்க்கப் பார்க்க வேதனையாக இருக்கிறது. பெண்களுக்கு வாசிப்புதானே விடுதலையின் வாசல். நம் மூளையை மழுங்கடிக்கும் தொலைக்காட்சித் தொடர்களில் இருந்து அவர்கள் விடுபட்டு, தினமும் சிறு சிறு கட்டுரைகளையாவது படிக்க வேண்டியது அவசியம். வாசிப்பு மன மாற்றத்தையும் குண மாற்றத்தையும் தரவல்லது.

- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை.

எதையும் சமாளிக்கலாம்

பள்ளிப் பருவத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியை ஒருவர்தான் என் வாசிக்கும் பழக்கத்துக்கு வித்திட்டார். பாடப் புத்தகங்களைத் தவிர்த்து ஒவ்வொரு மாணவரும் தாங்கள் வாசித்த கதை, கட்டுரைகள் போன்றவற்றை வகுப்பில் மற்றவர்களுக்குச் சொல்லச் சொல்வார்.

பெண் பிள்ளைகள் படிப்பதோடு உலக விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் என அப்பா வலியுறுத்துவார். அவரது தூண்டுகோல் என் வாசிப்பு ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. அப்துல் கலாமின் ‘அக்னிச் சிறகுகள்’, கிருஷ்ணசாகரின் ‘Summit your Everest’, சர்வதிகாரி ஹிட்லரின் ‘Mein Kampf’ போன்றவை என் வாசிப்புத் தேடலில் கிடைத்த முக்கியப் புத்தகங்கள். வாசிப்பதன் மூலம் பல விஷயங்களை அறிந்துகொள்வதுடன் எந்தச் சூழ்நிலையையும் சமயோசிதத்துடனும் துணிச்சலுடனும் கையாள முடிகிறது.

- மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.

லெனின் சொன்ன பாடம்

பழையதாகிக் கிழிந்த புத்தகங்களால் புதியவளாக உருப்பெற்றவள் நான். நாம் இருக்கும் இடத்திலிருந்தே புத்தகங்களின் வழியாக உலகைச் சுற்றி வரலாம். அல்லது தொன்மையான பழங்காலத்துக்குச் சென்று வரலாம் அல்லது சாதனையாளர்களோடு உரையாடி மகிழலாம். சாதனை புரிந்த பெண்கள், விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும்போது நமக்கு வரும் இன்னல்கள் எல்லாம் மிகவும் சாதாரணம் எனத் தோன்றும். ராஜராஜன் எழுதிய ‘விளாதீமிர் இலியிச் லெனின்’ என்னும் நூலைப் படித்தேன்.

இந்தப் புத்தகம் என்னுள் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தந்தையையும் தமயனையும் ஜார் அரசாங்கத்தின் அதிகார வெறிக்குப் பலிகொடுத்தும் சிறிதும் துவளாமல் நெருப்புப் பந்தாய் எழுவார் புரட்சியாளர் லெனின். படிக்கும் காலத்தில் நல்ல மதிப்பெண் எடுத்தும் அவரால் மூன்றாண்டு போராட்டத்துக்குப் பிறகுதான் சட்டக் கல்லூரியில் சேரமுடிந்தது. இதைப் படித்தபோது எத்தனை தடைகள் வந்தாலும் நாமும் உறுதியோடு நின்று வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது. வெ.இறையன்பு எழுதிய ‘படிப்பது சுகமே’, சுகி சிவம் எழுதிய ‘முதல் இடம்’ போன்ற புத்தகங்கள் வாசிப்பில் என்னை ஏற்றம்காணச் செய்தன. படித்த கருத்துகள் நம்மோடு நின்றுவிடாதபடி பிறருடன் பகிர்ந்துகொள்வது சாலச் சிறந்தது. இன்றும் என்றும் நம்மை நல்வழிபடுத்தும் நூல்களைப் படித்துச் சுகிப்போம்; வாசித்து மகிழ்வோம்.

- ர.ரஜினி பியூலா ஷோபிகா, மதுரை.

வாசிப்பை நேசிப்போம்

புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக்கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்க்க முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்கள் ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x