Published : 03 Nov 2019 11:09 AM
Last Updated : 03 Nov 2019 11:09 AM

இனி எல்லாம் நலமே 30: கருத்தடைக்கு காப்பர்-டி சிறந்ததா?

அமுதா ஹரி

இரண்டு குழந்தைகளுக்கு இடையே போதுமான இடைவெளி இருப்பது முக்கியம். பிறந்த குழந்தையைச் சரியாக வளர்க்கவேண்டும், பிரசவித்த தாய் தன் உடல் நலத்தைத் திரும்ப நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற இரண்டு கடமைகள் அதில் முக்கியமானவை.

ஒரு குழந்தை பிறந்த உடனேயே அடுத்த கர்ப்பத்துக்குத் தயாராகும்போது தாயின் உடல் நிலை பாதிக்கப்படும். ஊட்டச்சத்து பற்றாக்குறை, ரத்தசோகை போன்ற பிரச்சினைகள் ஏற்படும். தாய் தன்னைப் பராமரிப்பதும் சிக்கலாகும். ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடையே இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாவது இடைவெளி இருக்க வேண்டும். குழந்தை இயற்கையான முறையில் பிறந்திருந்தாலும் அறுவை சிகிச்சைமூலம் பிறந்திருந்தாலும் அடுத்த குழந்தை உடனடியாக உண்டாகாமல் இருப்பதற்கான வழிமுறைகளை கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இருவரும் சேர்ந்துதான் அதைத் தீர்மானிக்க வேண்டும்.

இடைவெளி அவசியம்

சிலநேரம் குழந்தைப் பிறப்பை ஒட்டிய வேதனையில் இருக்கக்கூடிய பெண், கருத்தடை முறைகளைப் பற்றி யோசிப்பதற்குத் தயாராக இருப்பதில்லை. கணவரிடம் கலந்தாலோசிக்காமலேயே அவர் ஆணுறையை அணிந்துகொள்வார் என்று மனைவியே முடிவெடுத்துவிடுவார். அல்லது, “நாங்கள் இருவரும் கொஞ்ச காலத்துக்குத் தாம்பத்திய உறவைத் தவிர்த்து விடுவோம்” என்று சொல்வார்கள். சிலர் பாதுகாப்பான நாட்களில் உறவுகொள்ளலாம் என்று நினைப்பார்கள். ஆனால், தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் சீரற்று வரலாம்.

பல நேரம் இப்படி முடிவெடுத்த பெண்கள், குழந்தை பிறந்த ஆறே மாதங்களில் கருவைக் கலைப்பதற்கு வந்து நிற்பார்கள். காப்பர் டி அணிவதால் பிரச்சினை வரும், கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடுவதால் பிரச்சினை வரும் என்று நினைத்து அதைத் தவிர்க்க நினைப்பவர்கள் கடைசியில் கருவைக் கலைக்கவோ கர்ப்பத்தைத் தொடரலாமா என்று அறிவுரை கேட்கவோ வருவார்கள். இதையெல்லாம் தவிர்க்க, குழந்தை பிறந்தவுடனேயே கணவன் - மனைவி இருவரும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குக் குழந்தையை தவிர்ப்பது பற்றி முடிவெடுப்பது நல்லது.

ஹார்மோன் கருத்தடை முறை

இரண்டு குழந்தைகளுக்கான இடைவெளிக்காகக் கருத்தடை முறை என்று வரும்போது அந்தப் பெண்ணுக்கு 25, 30 அல்லது 35 வயதுகூட இருக்கலாம். பால் கொடுக்கும் தாய்மார்கள் ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. பாலூட்டாத தாய்மார்கள் கருத்தடை மாத்திரைகளை, அது அவர்களுக்கு வசதியாக இருக்கும்பட்சத்தில் எடுத்துக்கொள்வதில் தவறில்லை. மாத்திரைகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டி இருப்பதால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தேவையான மருத்துவச் சோதனைகள் செய்த பிறகு எடுத்துக்கொள்ளலாம்.

ஹார்மோன் சம்பந்தப்பட்ட கருத்தடை மாத்திரைகளை எடுக்கும்போது எடைகூடுதல், நீர்கோர்த்தல் போன்ற பிரச்சினைகள் வரக்கூடும். மற்றவர்கள் சொன்னார்கள் என்று நாமாகவே கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது. மாத்திரைகளைத் தீர்வாக நினைப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளையே உட்கொள்ள வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊசி போட்டுக்கொள்ளும் கருத்தடை முறையில் சில பெண்களுக்கு மூன்று மாதமும் மாதவிடாய்ச் சுழற்சி வராமல் போகலாம். அதனால், அவர்கள் தாங்கள் கர்ப்பம் தரித்துவிட்டதாகப் பயப்படலாம். ஊசி மூலம் எடுக்கும் கர்ப்பத்தடை முறையில் மாதவிடாய்ச் சுழற்சி வராமல் போகக்கூடும் என்று டாக்டர்கள் எடுத்துக் கூறினாலும் அதை 30 முதல் 40 சதவீதப் பெண்களால்தான் புரிந்து கொள்ளமுடிகிறது. மற்றப் பெண்கள் தான் கர்ப்பமோ என்று பயந்து டாக்டரிடம் வருகிறார்கள்.

ஆலோசித்து முடிவெடுங்கள்

ஆணுறை என்பது ஆண்களுக்கான தற்காலிகக் கருத்தடை முறை. ஆணுறை பெண்களுக்கு வேண்டுமானால் வசதியாக இருக்கலாம். ஆனால், ஆண்கள் பொதுவாக ஆணுறை அணிவதை விரும்புவதில்லை. அதனால், பெண்கள் முதல் குழந்தைக்குப் பிறகு கணவருடன் கலந்தாலோசித்து சரியான கருத்தடை முறையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
காப்பர்-டி என்பது இரண்டு குழந்தை களுக்கு இடையிலான கருத்தடை முறைகளில் சிறந்தது. காப்பர்-டி பாதுகாப்பானது என்றும் 99 சதவீதம் கருத்தடைக்கு உகந்தது என்றும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனே அகற்றிவிடலாம் என்பது இன்னுமொரு சிறப்பு. மாதவிடாய்ச் சுழற்சி முடிந்தவுடன் மருத்துவமனையிலேயே ஐந்து நிமிடங்களில் காப்பர்-டியை அகற்றிவிடலாம். எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.

காப்பர்-டி குறித்த மூடநம்பிக்கைகள்

1. காப்பர்-டி பொருத்தும்போது முதல் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு சில பெண்களுக்கு ரத்தப்போக்கு சற்று அதிகமாக இருக்கலாம். பிறகு அது ஒரு வரைமுறைக்கு வந்துவிடும். அதற்குள் பயந்துகொண்டு காப்பர்-டியை அகற்ற வேண்டியதில்லை.
2. காப்பர்-டியில் இணைக்கப்பட்டிருக்கும் நூல் கருப்பையின் வெளியே லேசாகத் தொங்கும். இதனாலும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. குறிப்பாக உறவின்போது, இதனால் எந்தத் தொந்தரவும் கணவனுக்கு ஏற்படாது. உறவுக்கும் காப்பர்-டிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
3. லட்சத்தில் ஒருவருக்கு காப்பர்-டி சரியாகப் பொருந்தாமலோ காப்பர்-டியின் காலாவதிக்குப் பிறகும் மாற்றாமல் இருந்தாலோ சிலநேரம் காப்பர்-டி கருப்பையை விட்டு விலக வாய்ப்புள்ளது. இது வெகு அபூர்வம்.
4. காப்பர்-டி போட்டால் எடை கூடிவிடும் என்ற கருத்தும் தவறானது. காப்பர்-டிக்கும் எடைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கர்ப்பத்தின் போது உடல் எடை கூடுகிறது. பிரசவத்துக்குப் பிறகு உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவை மூலம் உடல் எடையைக் குறைக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் குழந்தைக்குப் பால் கொடுப்பதாலும் பிரசவம் ஆகியுள்ளது என்று அதிகமாக ஓய்வெடுப்பதாலும் சரியாகத் தன்னைத் தானே கவனித்துக்கொள்ளாததாலும் உடல் எடை தானாகவே கூடுகிறது.
5. காப்பர்-டியை மாதவிடாய்ச் சுழற்சி முடிந்தவுடன் பொருத்துவது அல்லது எடுப்பது என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அந்த நாட்களில் கருப்பையின் வாய் லேசாகத் திறந்திருக்கும். எனவே, பொருத்துவதும் அகற்றுவதும் எளிது. அந்தப் பெண் காப்பர்-டியைப் பொருத்தும்போது கர்ப்பம் இல்லை என்பதை உறுதிசெய்து கொள்வதற்காகவும் மாதவிடாய்ச் சுழற்சி முடிந்ததும் அதைப் பொருத்துகிறார்கள். கர்ப்பம் இருப்பது தெரியாமல் காப்பர்-டி போடக் கூடாது.

காப்பர்-டியை எடுத்த பிறகு அடுத்த மாதமேகூட கர்ப்பம் தரிப்பதற்கு வாய்ப்புள்ளது. அவ்வாறு கர்ப்பம் தரிப்பதால் எந்தப் பாதிப்பும் குழந்தைக்கு ஏற்படாது.

(நலம் நாடுவோம்)
கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x