

தீபாவளிக்காக ஆவலோடு காத்திருப்பதைப் போல் தீபாவளி மலர்களுக்காகக் காத்திருக்கிறவர்கள் அதிகம். பல்சுவையைத் தாங்கிவரும் கட்டுரைகளே அதற்குக் காரணம்.
இந்து தமிழ் திசை
இந்து தமிழ் திசை நாளிதழின் ஏழாம் ஆண்டு தீபாவளி மலர் இது. கானா கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் ‘இன்றைய கானா’ தொகுப்பு, கானா இசைக் கலைஞர்களின் வாழ்க்கை அனுபவத்தைக் காட்சிப்படுத்துகிறது. கவிஞர்கள் நரன், சுகிர்தராணி, ரவிசுப்பிரமணியன், சுதந்திரவள்ளி, வேல் கண்ணன் ஆகியோரது படைப்புகள் கவனம் ஈர்க்கின்றன. பேராசியர் சா.பாலுசாமியின் நேர்காணல், சிற்பக் கலைஞர் தனபாலின் வாழ்க்கை வரலாறு, ஓவியர் பத்மவாசனின் நேர்காணல் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. ‘நதியும் நானும்’ தொகுப்பில் வண்ணநிலவன், அ.கா.பொருமாள், தேவிபாரதி, சாம்ராஜ் உள்ளிட்டோரின் அனுபவக் கட்டுரைகள் மலருக்குச் சுவை கூட்டுகின்றன. மலரின் மற்றொரு சிறப்பம்சமாக 1970 முதல் 2019-ம் ஆண்டு வரை தீபாவளியன்று வெளியான திரைப்படங்களின் தாக்கம் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பார்வைக்கு ரசனையாக ‘வாழ்வு இனிது’ பகுதி அமைந்துள்ளது.
கலைமகள்
புராணக்கதை, சிறுகதை என வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும்வகையில் வெளிவந்துள்ளது கலைமகள் தீபாவளி மலர். முதல் கட்டுரையாக ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி மஹா ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. வாழ்க்கைக்கு வழிகாட்டும் எண்பது பழமொழிகளை ‘முதுமொழி எண்பது’ என்ற தலைப்பில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி எழுதியுள்ளார். ஓவியர் பாபுவின் வாழ்க்கை வரலாறு, முக்கியக் கட்டுரையாக இடம்பெற்றுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷின் பேட்டி, முனைவர் இதய கீதம் அ. இராமானுஜம் எழுதியுள்ள ‘திருக்குறள் அறம் சார்ந்தது’ கட்டுரை எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
விகடன்
பல்சுவைப் பலகாரக் கடைக்குள் நுழைந்த உணர்வைத் தருகிறது விகடன் தீபாவளி மலர். இனிப்புப் பிரியர்களுக்குத் திகட்டத் திகட்ட இலக்கியமும் நேர்காணல்களும் இருப்பதைப் போல கார விரும்பிகளுக்குக் திரைத்துறை சார்ந்த விறுவிறு கட்டுரைகள் கொட்டிக் கிடக்கின்றன. வாழ்க்கையைப் பெரும் தத்துவமாகப் பார்க்கிறவர்கள் ஆன்மிகச் சாரத்தை அள்ளிப் பருகவும் கட்டுரைகள் உண்டு.
கலைஞர்களைக் கொண்டாடும் பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் நாம் என்பதை நூற்றாண்டு காணும் கலைஞர்களான ஓவியர் சில்பி, ஒவியர் எஸ். ராஜம், நடிகர் எஸ்.வி.ரங்காராவ் ஆகியோர் குறித்த எழுத்துச் சித்திரங்கள் உணர்த்துகின்றன. நாற்பது ஆண்டுகள் கழித்துத் தரிசனம் தந்த அத்திவரதர் குறித்த கட்டுரை அருமையான தத்துவ விசாரம். கலை, வரலாறு, நடப்பு
நிகழ்வு, பயணங்கள் என வானவில்லின் வண்ணங்கள் அனைத்தையும் தாங்கி வந்திருக்கிறது விகடன் தீபாவளி மலர்.
பேசும் புதிய சக்தி
பேசும் புதிய சக்தி மாத இதழின் முதல் தீபாவளி மலர் இது. நவீன தமிழ் இலக்கியத்தின் மரபான நீட்சியுடனும் புதிய தலைமுறையின் சிந்தனை மாற்றங்களுடனும் இக்கால இலக்கியத்தின் மாற்றங்கள் இந்த மலரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் ‘மற்றை நம் பாவங்கள் பாற்று’ எனும் கட்டுரை செந்தமிழ் மீது தொடரும் சமீபத்திய தாக்குதல் குறித்துப் பேசுகிறது. அமெரிக்கப் பெண் இயக்குநர் டீ ரீஸ் குறித்து ஜா. தீபா எழுதியுள்ள கட்டுரை குறிப்பிடத்தகுந்தது. பதினைந்து கட்டுரைகள், பத்துச் சிறுகதைகள், பதினாறு கவிதைகள் என ஒவ்வொன்றும் பண்பட்ட எழுத்துகளால் நிரம்பியுள்ளது.
அமுதசுரபி
ஆன்மிகம், தமிழக இலக்கிய முனோடிகள், தற்கால இலக்கியம், வாழ்வியல், பயண இலக்கியம் எனப் பலவற்றைத் தாங்கி வெளிவந்துள்ளது அமுதசுரபி தீபாவளிச் சிறப்பிதழ். ‘இலக்கிய முன்னோடி’ எனும் தொகுப்பில் எழுத்தாளர்கள் சாவி, கி.ரா., டி.கே.சி ஆகியோர் கடந்துவந்த பாதை, எழுத்துலகப் பயணங்கள் பற்றி விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் ‘கடைசி ஆசை’ வாஸந்தியின் ‘நரிகள் பரிகளானது’ ஆகிய சிறுகதைகள் இந்தச் மலரின் சிறப்பிதழின் சிறப்புகள்.
கல்கி
ஆன்மிகம், சிறுகதை, சுற்றுலா, பயணம் எனப் பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது கல்கி தீபாவளி மலர். ‘மகாராணி அகல்யாபாய்’, ‘விஜயநகரப் பேரரசி கங்காதேவி’, ‘சோழப் பேரரசி செம்பியன் மாதேவி’, ‘மேவார் மகாராணி மீரா’ ஆகியோர் குறித்த கட்டுரைகள் ஆன்மிகச் சாரத்துடன் வெளியிடப்பட்டுள்ளன. பிரபல செய்தியாளர்கள் குறித்த ‘அறிந்த முகங்களும் அறியாத செய்திகளும்’ கட்டுரை அருமை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவின் ‘ஒரே நாடு, ஒரே மொழி இந்தியாவுக்கு ஏற்றதல்ல’ என்ற தலைப்பிடப்பட்ட பேட்டி முக்கியமானது.