

அன்பு
இன்று பெரும்பாலானோருக்கு வெடிச் சத்தத்துடன்தான் விடிந்திருக்கும். பனியில்லாத மார்கழிக்குப் பழகியவர்கள்கூட வெடியில்லாத தீபாவளியை ஏற்றுக்கொள்வதில்லை. விளைவு? மூச்சுத் திணறவைக்கும் புகை மண்டலம்தான். தீபாவளியன்று தீக்காயங்களுக்கு அடுத்த படியாக மூச்சுத் திணறலால்தான் பலர் அவதிப்படுவர்.
இந்தியாவில் புற்றுநோயாளிகளைத் தொடர்ந்து மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள்தான் அதிகம். அப்படியிருக்கையில் பட்டாசுப் புகையால் உண்டாகும் மாசு, காற்றில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இருக்கும். அது சுவாசம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதிக ஒலியெழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதால் காது கேட்பதில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என விளக்குகிறார் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் பொதுநல மருத்துவர் ரகுநாதன்.
# ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் பட்டாசு வெடிக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
# இன்ஹேலர், மாத்திரைகள் போன்றவற்றை வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.
# பட்டாசு வெடித்த கையால் கண்களைத் தொடக் கூடாது. பட்டாசின் மருந்து கைகளில் ஒட்டியிருந்தால் அது பார்வை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
# பட்டாசு வெடித்துவிட்டு கை, கால், முகத்தை நன்றாக சோப்புப் போட்டு கழுவிய பிறகே சாப்பிடவேண்டும்.
# வெடிக்காத பட்டாசுகளில் உள்ள மருந்துகளை எடுத்துப் பயன்படுத்துவது தவறு.
# பட்டாசு வெடிக்கும்போது அருகில் வாளி நிறைய தண்ணீரை வைத்திருக்க வேண்டும்.
# பருத்தி ஆடையையும் செருப்பையும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
# பட்டாசுகளை வாகனங்களுக்கு அருகிலோ எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு அருகிலோ வைத்து வெடிக்கக் கூடாது. திறந்த வெளியில் வெடிப்பதே நல்லது.
# புகை வெளியேற வழியுள்ள இடத்தில் அமர்ந்து பலகாரங்களைச் செய்ய வேண்டும்.
# சமையலறையில் நீண்ட நேரம் நிற்க வேண்டியிருந்தால் அதிக அளவு திரவ உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
# நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் பண்டிகைக்குப் பிறகு உடலில் சர்க்கரையின் அளவைச் சோதித்துக்கொள்வது நல்லது.
# தீபாவளியன்று வெடி, மத்தாப்புப் புகையில் ஆட்டம்போடும் குழந்தைகள் அதற்கு அடுத்த நாள் உடல்நிலை பாதிக்கப்பட்டுப் பள்ளிக்குச் செல்ல முடியாமல் போகலாம். வெடிச் சத்தத்தால் குழந்தைகள், முதியவர்கள் ஓய்வெடுக்க முடியாமல் சிரமப்படுவார்கள். அதிக ஒலி எழுப்பும் வெடிகளைக் குடியிருப்புகள் அதிகமில்லாத இடங்களில் வெடிக்க வேண்டும். தீப்புண் ஏற்பட்டால் எரிச்சல் அடங்கும் வரை தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும்.