

அமுதா ஹரி
வாழ்க்கையில் பலவற்றைப் பற்றியும் அறிவியல்பூர்வமான அணுகுமுறைகளைவிடக் கற்பிதங்களையே பலரும் கடைப்பிடிப்பார்கள். மருத்துவத் துறை எவ்வளவோ வளர்ந்த பிறகும் அவர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்வதில்லை. தாய் - சேய் தொடர்புடையவற்றுக்கு இப்படியான மூடநம்பிக்கைகள் கேடு விளைவிக்கக்கூடும்.
பெண்ணின் திருமண வயது 18 என்பது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கலாம். ஆனால், கர்ப்பம் தரிப்பதற்கான சரியான வயது 20 முதல் 35. கருப்பை, இடுப்பெலும்பு ஆகியவற்றின் வளர்ச்சி 20 வயதுக்குப் பிறகுதான் முழுமையடைந்து கருவுறத் தகுதிபெறும். பதின்பருவத்தில் கருவுறுவதும் 35 வயதுக்குப் பிறகு முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்வதும் ஆரோக்கியமான கர்ப்பம் அல்ல. 35 வயதுக்குப் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளும்போது மரபணு தொடர்புடைய நோய்கள் குழந்தைக்கு வரக்கூடும்.
கர்ப்ப காலத்தின்போது சில பெண்களுக்கு முகம், மார்புக்காம்பு, பிறப்புறுப்பு போன்ற இடங்களில் கருமை நிறம் படிவது இயல்பு. பிரசவம் முடிந்தபிறகு இது தானாக மறைந்துவிடும். இது குறித்துப் பயப்படத் தேவையில்லை. ஹார்மோன் சுரப்பை ஒட்டி சிலருக்கு மார்பகங்களில் வலி ஏற்படலாம். வலி தொடர்ந்து இருந்தாலோ பொறுக்க முடியாமல் இருந்தாலோ மருத்துவரை அணுக வேண்டும். பால் சுரப்பு தொடர்பான சிக்கல்களுக்கும் மருத்துவரை அணுகுவதே நல்லது. இடுப்பெலும்புப் பகுதிகளில் ரத்த ஓட்டத்தால் வளர்ச்சி தூண்டப்படுவதால் வலி வரலாம். வேறு அறிகுறிகள் இல்லாதவரை பிரச்சினையில்லை.
வேறுபாடு அறிவோம்
Ultra sound, X-ray, MRI scan, CT scan ஆகியவற்றுக்கான வித்தியாசம் பலருக்கும் புரிவதில்லை. ultra sound என்பது ஒலி அலைகள் மூலம் கண்டறியப்படும் முறை. இதை எடுப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை. சொல்லப்போனால் கர்ப்ப காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளைக் கண்டறிய ultra sound உதவுகிறது. பிரசவ காலத்தில் சிலருக்கு உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க மாதம் ஒரு முறைகூட ultra sound செய்ய நேரிடலாம். இதில் தவறில்லை. இதனால் குழந்தைக்கு எந்தப் பிரச்சினையும் வராது.
கர்ப்ப காலத்தில் X-ray, MRI scan, CT scan போன்ற கதிரியக்கம் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளைத் தவிர்ப்பது மிக நல்லது. நீங்கள் கருவுற்றிருப்பது தெரியாமல் வேறு ஏதோ பிரச்சினைக்காக மருத்துவர் இத்தகைய முறைகளைப் பரிந்துரைத்தால், கர்ப்பம் பற்றி அவசியம் குறிப்பிட வேண்டும். கர்ப்பமாக இருக்கும்போது ஏதாவது விபத்து ஏற்பட்டால் அந்த நேரத்தில் ஸ்கேன் எடுப்பதைத் தவிர்க்க முடியாது. அது போன்ற சந்தர்ப்பங்களில் abdominal shield என்று சொல்லக்கூடிய குழந்தையையும் வயிற்றையும் மறைக்கக்கூடிய பட்டையை அணிந்துகொண்டு பரிசோதனை செய்யலாம். இது கதிரியக்கத்தின் பாதிப்பைக் குறைக்கும். தவிர்க்க முடியாத நேரத்தில் மட்டுமே இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒருக்களித்துப் படுப்பது நல்லது
கர்ப்பம் தரித்த இரண்டாம் மூன்றாம் மாதங்களிலேயே, சுற்றி உள்ளவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று பலர் “எப்படிப் படுத்துத் தூங்குவது?” என்று கேட்பார்கள். குழந்தை வளர வளர எடை அதிகரிக்கிறது. இந்த நேரத்தில் நிமிர்ந்தவாக்கில் படுத்துத் தூங்கினால் வயிற்றில் இருக்கும் பெரிய ரத்தக்குழாய்களைக் கருப்பை அழுத்தக்கூடும். ஆகவே, ஒருக்களித்துப் படுப்பதுதான் நல்லது. குறிப்பாக, இடப் புறமாக ஒருக்களித்துப் படுப்பதுதான் நல்லது. ஆனால், கர்ப்ப காலத்தின் பின் பகுதியில்தான் இந்தப் பிரச்சினை வரும். இரண்டாம், மூன்றாம் மாதங்களில் நேராகப் படுப்பதில் தவறில்லை. இந்தக் காலகட்டத்தில் கருப்பையே மிகச் சிறியதாகத்தான் இருக்கும்.
குழந்தைக்குக் கழுத்தில் கொடி சுற்றிக்கொள்ளும் பிரச்சினை வரும்போது அதற்குத் தான்தான் காரணம் என்று சிலர் நினைக்கிறார்கள். இது தவறு. இதேபோல் உடற்பயிற்சி செய்யலாமா, பயணம் செய்யலாமா, நடக்கலாமா என்றெல்லாம்கூடச் சிலருக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கர்ப்ப காலத்தில் வேகமாக நடப்பதையும் குதித்து நடப்பதையும் தவிர்க்கச் சொல்வார்கள். அதிர்ச்சியால் கர்ப்பம் கலைந்துவிடும் என்ற எண்ணத்தில் அப்படிச் சொல்வார்கள். உண்மையில், ஆரோக்கியமான கர்ப்பம் என்றால் இவற்றையெல்லாம் தாண்டி வளரும்.
நடைபயிற்சி அவசியம்
சிலருக்கு முந்தைய கர்ப்பம் கருச்சிதைவு ஆகியிருக்கலாம். அவர்களை மருத்துவர் படுக்கையிலேயே இருக்கச் சொல்லியிருக்கலாம். மற்றபடி கர்ப்ப காலத்துக்கு முன்னதாகப் பேருந்தில் 20 கி.மீ. பயணம் செய்து வேலைக்குப்போன பெண்கள் அதைத் தொடரலாம். இதேபோல் கர்ப்பம் தரிப்பதற்குமுன் தொடர்ந்து உடற்பயிற்சிகளைச் செய்துவந்த பெண்கள் அதையும் தொடரலாம். வயிற்றுப் பகுதிக்கு அழுத்தத்தைத் தரக்கூடிய சில பயிற்சிகளை மட்டும் தவிர்க்கலாம். அதுவரை உடற்பயிற்சியே செய்யாதவர்கள் கர்ப்ப காலத்தில் செய்யத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். நடைப்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று பயிற்சி செய்யும் பழக்கமுள்ளவர்கள் வயிற்றுக்கு அழுத்தத்தைத் தராத பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
மன உளைச்சலையும் பயத்தையும் உருவாக்கக்கூடிய வன்முறை நிறைந்த படங்களையும் காட்சிகளையும் பார்ப்பதைத் தவிர்க்கலாம். அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆறேழு மாதத்துக்குப் பிறகு இடப்புறமாகத் திரும்பிப் படுப்பது நல்லது. எழுந்திருக்கும்போது சட்டென எழாமல் மெதுவாக எழ வேண்டும். எதையுமே கொஞ்சம் பொறுமையுடன் செய்வது நல்லது.
பதற்றம் வேண்டாம்
இதேபோல் கருச்சிதைவுக்கு ஆளானோர் தன்னுடைய நடவடிக்கையினால்தான் கர்ப்பம் கலைந்தது என்று எண்ணி மறுகுகிறார்கள். ஆரோக்கியமான, உறுதியான கர்ப்பம் எதற்கும் ஈடுகொடுக்கும். பொதுவாகத் தாயின் நடவடிக்கைகளால் கர்ப்பம் கலைந்துவிடாது.
சிலருக்கு மூன்றாம், நான்காம்
மாதங்களில் உதிரத்துளிகள் கொஞ்சமாக வரலாம். கர்ப்பம் தன்னைப் பொருத்திக்கொள்வதற்கான ரத்தப்போக்கு என்று இதைச் சொல்வார்கள் (Implantation bleed). இதைப் பார்த்த உடனேயே கர்ப்பம் கலைந்துவிட்டது என்று பதற வேண்டாம். மருத்துவரைப் பார்க்க வேண்டும். பயப்படத் தேவையில்லை.
கர்ப்ப காலத்தின்போது இல்லற உறவில் ஈடுபடுவது பற்றிப் பலருக்கும் கேள்விகள் இருக்கிறது. மென்மையான முறையில் உறவு இருந்தால் தவறில்லை. வேகம் கூடும்போது இத்தகைய தூண்டுதல் கருப்பையைச் சுருங்கச் செய்யலாம். கர்ப்ப காலத்தில் உறவு வைத்துக்கொண்டால்தான் நார்மல் டெலிவரி நடக்கும் என்று நினைக்கிறார்கள். இதுவும் தவறான எண்ணமே.
(நலம் நாடுவோம்)
கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in