இசைபட வாழ்தல்: நவரசங்களும் மிளிர்ந்த நடனம்

இசைபட வாழ்தல்: நவரசங்களும் மிளிர்ந்த நடனம்
Updated on
1 min read

தமிழ்ச்செல்வி

திருச்சி என்.ஐ.டி.யில் பட்டம் பெற்று, மேற்படிப்பை டெக்ஸாஸ் A&M பல்கலைக்கழகத்தில் படித்தவர் அக்ஷயா. தற்போது கலிபோர்னியாவில் இன்டல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சர்க்யூட் டிசைன் இன்ஜினீயராக பணியாற்றுகிறார்.

படிப்புக்கேற்ற வேலை, கைநிறையச் சம்பளம், வசதியான வாழ்க்கை முறை என இருந்தாலும் அவரது மனம் பரத நாட்டியக் கலையை மறக்கவில்லை. ஆறுவயது சிறுமியாக இருந்தபோதே குரு மாலதி தோத்தாத்ரியிடம் முறையாக நடனப் பயிற்சி எடுத்துக்
கொண்டு 13 வயதில் அரங்கேற்றமும் செய்திருக்கிறார். அதன்பின்னும் பல சபைகளில் நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கிவந்தார். “தினமும் நாட்டியப் பயிற்சி, யோகா பயிற்சி போன்றவற்றை செய்ய மறந்ததே இல்லை” என்னும் அக் ஷயா, தன்னுடைய குரு மாலதி தோத்தாத்ரியிடம் ஸ்கைப் வழியாகவே தனக்கு நடனத்தில் எழும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டதோடு, நாட்டியப் பயிற்சியையும் தொடர்ந்தார்.

அக் ஷயாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி அண்மையில் சென்னை, ஆர்.கே.சுவாமி அரங்கில் நடந்தது. தான் கற்ற நடனக் கலையை உயிர்ப்போடு அவர் வைத்திருப்பது அவரின் அபிநயங்களிலும் உடல்மொழியிலும் அற்புதமாக வெளிப்பட்டது. பொதுவாகவே பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் தெலுங்கு, சம்ஸ்கிருதத்தில் அமைந்த பதங்களும் ஜாவளிகளும்தான் அதிகம் இடம்பெற்றிருக்கும். ஆனால், அக் ஷயாவின் அன்றைய நிகழ்ச்சியில் தமிழ்ப் பதங்களும் பாடல்களும் அதிகம் பயன்படுத்தப்பட்டன.

லால்குடி ஜெயராமனின் ‘தேவர் முனிவர்’ சாகித்யத்தை வர்ணத்துக்கு எடுத்துக்கொண்டு, வேங்கடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாபலி சக்கரவர்த்தி, அர்ஜுனன் உள்படப் பலருக்கும் அருளிய விஸ்வரூப தரிசனத்தைத் தனது செறிவான அபிநயங்களால் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தினார். ‘திருவொற்றியூர் தியாகராஜர்’ பதம், (‘வள்ளி கணவன் பேரை’) காவடிச் சிந்து, ஆண்டாளின் ‘வாரணம் ஆயிரம்’ என அக் ஷயாவின் பரத நாட்டியத்தில் தமிழ் மணந்தது. கலாசாகரா குரு மாலதி தோத்தாத்ரியின் நட்டுவாங்கம், கிரிஜா ராமசாமியின் பாட்டு, விஜயராகவனின் மிருதங்கம், கலையரசனின் வயலின், தேவராஜனின் புல்லாங்குழல் ஆகியோரின் பக்கபலத்தில் அக் ஷயாவின் நடனத்தில் நவரசங்களும் மிளிர்ந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in