

வா.ரவிக்குமார்
மன்னார் வளைகுடா பகுதியில் 21 கிராமங்களில் கடல்பாசி சேகரிக்கும் பணியில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ளனர். ‘மன்னார் வளைகுடா பாசி சேகரிப்போர் சங்கம்’ என்னும் அமைப்பின்கீழ் இரண்டாயிரம் பெண்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
எந்த அரசும் நிர்ப்பந்திக்காமலேயே கடல்பாசியைச் சுரண்டி எடுப்பதைத் தடுப்பது, ஆண்டுக்கு 60 நாட்கள் பாசியை எடுக்காமல் இருப்பது போன்ற கட்டுப்பாடுகளைத் தங்களுக்குள்ளாகவே செயல்படுத்திவருகின்றனர். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன் இவர்கள் செய்யும் இந்தச் செயலைப் பாராட்டி, அமெரிக்காவைச் சேர்ந்த ‘சீக்காலஜி’ எனும் நிறுவனம் பசுமைப் பாதுகாவலர் விருதை இவர்களது சங்கத்துக்கு அண்மையில் அளித்திருந்தது.
சிறந்த ஆளுமை கொண்ட தலைவருக்கான விருதை கடல்பாசி சேகரிப்பவர்களான மீனாட்சிக்கும் ராக்கம்மாளுக்கும் காந்தி ஜெயந்தி அன்று வழங்கியது ‘டான்’ அறக்கட்டளை. அண்மையில், ‘சென்னையில் கலை தெருவிழா’வில் பங்கெடுப்பதற்காக இருவரும் ராமநாதபுரத்திலிருந்து வந்திருந்தனர்.
இவர்களின் வாழ்க்கை முறையை, கடல்பாசி எடுக்கும் நேர்த்தியை ஐ.சி.எஸ்.எஸ். நிறுவனம் ஆவணப்படமாக எடுத்திருக்கிறது. விழாவில் அந்தப் படத்தையும் திரையிட்டனர். சர்வதேச அளவில் இரண்டாவது சிறந்த ஆவணப்படத்துக்கான விருதைப் பெற்றிருக்கிறது இந்த ஆவணப்படம்.
மரிக்கொழுந்து கடல்பாசியை ஐந்து பாகம் ஆழம் இருக்கும் கடலில் (5 முதல் 10 மீட்டர்) இவர்கள் எடுக்கின்றனர். செயற்கை சுவாசக் கருவிகள் எதுவும் இல்லை. மூன்று நிமிடங்களுக்குள் இது எடுக்கப்படுகிறது. கடல்பாசி எடுப்பதில் இருக்கும் நுணுக்கங்கள், போராட்டங்கள், சவால்கள், அரசிடம் இவர்கள் வேண்டும் கோரிக்கைகள் எனப் பலவற்றையும் உள்ளடக்கி இருந்தது அவர்களின் பேச்சு.
தீவுகள் மீனவர்களின் சொத்து
“மாசத்துல பதினைஞ்சு நாள்தான் வேலைக்குப் போவோம். எந்தத் திசையிலருந்து காத்து வருதோ அதுக்கேத்த மாதிரி அனுசரிச்சுதான் கடலுக்குள்ளே இறங்குவோம். நாங்க பரம்பரை பரம்பரையா இந்தத் தொழிலைத்தான் செய்துகிட்டு இருக்கோம். சுனாமிக்குப் பிறகு கடலில் அலைகளின் சீற்றம், திடீரென்று உள்வாங்குவது இப்படி எங்களால் கணிக்க முடியாத அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. காலநிலை பார்த்துத்தான் கடலில் முங்கி பாசி சேகரிக்க வேண்டும். எங்க அப்பா, தாத்தா, ஏன் நாங்களேகூட 2010 வரைக்கும் கடல்பாசி சேகரிக்கச் சென்றால் மன்னார் வளைகுடாவில் இருக்கும் தீவுகளில் தங்கித்தான் கடல்பாசி சேகரித்தோம். ஆனால், கடந்த பத்தாண்டுகளாகத் தீவுகளில் நாங்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கடலும் தீவும் மீனவர்களோட சொத்து. எங்களைத் தீவுகளில் தங்க அனுமதிக்கணும்னு ரொம்ப வருஷமா கேட்டுட்டிருக்கோம். எங்க பக்கத்து நியாயத்த சமூகத்தில இருக்கிற எல்லா சனமும் உணரணும்னுதான் நாங்க உங்க முன்னாடி நிக்கறோம். நீங்களும் எங்களுக்காகப் பேசணும்” என்று தங்களது சிரமங்களைப் பகிர்ந்துகொண்டார் மீனாட்சி.
போட்டியால் விலை குறைப்பு
ராமேசுவரம், பாம்பன், சின்னபாலம் உள்ளிட்ட 25 கிராமங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவப் பெண்களின் வாழ்வாதாரமாக இருப்பது கடல்பாசி எடுக்கும் தொழில்தான். மன்னார் வளைகுடா பகுதியில் குருசடைத் தீவு, மணலி தீவு, மணலிபுட்டி தீவுகளை ஒட்டிய கடல் பகுதிகளில் இருந்து மரிக்கொழுந்து, கட்டக்கோரை, கஞ்சிப் பாசி, பக்கோடா பாசி போன்ற வகைகளை இந்தப் பெண்கள் சேகரிக்கின்றனர்.
“நிறைமாத கர்ப்பமா இருக்கறப்பவும் நாங்க கடல்பாசி சேகரிப்போம். எம்மக வயித்துல இருந்தப்ப நானும் சேகரிச்சிருக்கேன். நாங்க மூச்சடக்கிக் கடலுக்குள்ல போகையில வயித்துல இருக்கிற குழந்தையும் மூச்சடக்கித்தான் இருக்கும். அப்படிச் சேகரிக்கிற கடல்பாசியை முதல்ல கிலோ 20 ரூபாய்க்கு வாங்கினாங்க. இப்ப கரையிலயே வெயில்ல கயிறுகட்டி விளையற பெப்ஸி பாசியால, 15 ரூபாய்க்குத்தான் வாங்குறாங்க. நாங்க உயிரைப் பணயம் வெச்சு சேகரிக்கிற பாசிக்கான விலைய குறைக்கக் கூடாது” என்றார் ராக்கம்மாள்.