

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூலகம் திறக்கப்பட்ட புதிதில் அங்கே சென்றிருந்தேன். அதற்குப் பிறகு சிலமுறை சென்றிருந்தாலும் கடந்த மாதம்தான் இந்நூலகத்தின் மகத்துவத்தை முழுமையாக உணர வாய்ப்புக் கிடைத்தது. அவசரத்துக்குத் தேடிக் கிடைக்காத சில நூல்களை அங்கே காண முடிந்ததே இன்ப அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ச்சியாகச் சில நாட்கள் செலவிட்டு, வேண்டிய குறிப்புகளை எடுத்துக்கொண்டேன்.
தமிழகத்தின் பெருமைகளுள் ஒன்று அண்ணா நூலகம் என்பதை மறுக்க முடியாது. நாட்டில் எந்த மாநில முதல்வரும் குடிமக்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க இப்படியொரு கனவு கண்டு, அதைச் செயல்படுத்தியிருப்பாரா என்பது சந்தேகமே. அவ்வகையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி என்றென்றைக்கும் நம் நன்றிக்குரியவராகிறார்.
மொத்தம் எட்டுத் தளங்கள் கொண்ட பிரம்மாண்டக் கட்டிடத்தில், பல்வேறு பிரிவுகள் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கான சிறப்புப் பிரிவு தரைத்தளத்தி லேயே அமைந்துள்ளது. வெளிப்புறத் தோற்றம், குளிரூட்டப்பட்ட பெரிய பெரிய அறைகள், நூலக அலமாரிகள், இருக்கைகள் என்று எல்லாமே மிகுந்த அழகியல் உணர்வோடு கட்டமைக்கப்பட்டுள்ளன.
நூலகத்தின் அழகியலுக்கு ஒரு நல்ல உதாரணம் குழந்தைகள் பிரிவு. எந்தவொரு குழந்தைக்கும் இது பிடிக்காமல் போகாது. வீட்டு வேலைகள், டிவி, மொபைல் போன்ற கவனச்சிதறல்களிலிருந்து முழுமையாக விடுவித்து, நாம் விரும்பும் நூல்களை, பைசா செலவில்லாமல் பொறுமையாக உட்கார்ந்து வாசிக்க அற்புதமான இடம் அண்ணா நூலகம். ஒப்புக்கென்று செய்யாமல் வாசிப்பு என்பதை ஓர் உயரிய அனுபவமாக மாற்றப் பெருமுயற்சி எடுத்துள்ளார்கள். மொழி, சமூகம், அரசியல், பொருளாதாரம், இலக்கியம், விளையாட்டு என்று சகல பிரிவுகளையும் சார்ந்த நூல்கள் மிகுந்த ஒழுங்கோடு தனித்தனிப் பிரிவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நாளிதழ்கள், பருவ இதழ்கள் தனி.
ஓராண்டுக்காவது, அருகிலேயே வீடெடுத்துத் தங்கி, ஒரு பட்டியல் தயாரித்து அத்தனையையும் வாசித்து முடித்துவிட வேண்டும் என்று ஏங்குகிறது மனம். இவ்வளவு அற்புதமான இடத்துக்குத் திருஷ்டிப் பரிகாரம்போல் அமைந்திருக்கிறது நூலகத்தின் கழிப்பறை. கழிப்பறைக்குள் நுழையும்போதே நாற்றம் குடலைப் புரட்டுகிறது. கிருமிநாசினிகள் பயன்படுத்தியற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
காலை, பகல், மாலை என்று எந்நேரம் சென்றாலும் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது கழிவறை. பல மணி நேரம் செலவழித்து நிம்மதியாக வாசிக்கலாம் என்று நினைப்பவர்களை இந்த ஒரு விஷயமே வராமல் செய்துவிடும் ஆபத்தும் உள்ளது. குறிப்பாகப் பெண்களின் வருகை இதனால் நிச்சயம் பாதிக்கப்படும். இந்த ஒரு குறையை மட்டும் சரிசெய்துவிட்டால் அனைவரும் நூலக வாசிப்பை நேசிப்பார்கள்.
| நீங்களும் சொல்லுங்களேன் தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவம் முதல் கடைசியாகப் படித்த புத்தகம்வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனத்துக்குத் தெளிவைத் தரலாம். |
- சித்ரா, சென்னை.