பெண்கள் 360: முதல் திருநம்பி பைலட்

பெண்கள் 360: முதல் திருநம்பி பைலட்
Updated on
3 min read

தொகுப்பு: ஆசாத்

கேரளத்தைச் சேர்ந்த ஆடம் ஹாரி என்ற திருநம்பிக்கு விமானப் போக்குவரத்து மேற்படிப்புக்கு அம்மாநில அரசு ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. திருச்சூரைச் சேர்ந்த ஆடம் ஹாரிக்குச் சிறுவயதிலிருந்தே விமான ஓட்டியாக வேண்டும் என்பது லட்சியம். ஆனால், பதின் பருவத்தில் தன்னைத் திருநம்பியாக உணர்ந்தார். இதையறிந்த ஆடம்மின் குடும்பத்தினர் தங்களுடைய மகள் திருநம்பி என்பதை வெளியே சொல்வதை அவமானமாகக் கருதினர். வெளிநாட்டுக்கு அனுப்பினால் மகள் மனம்மாறிவிடுவார் என நினைத்தனர்.

இதற்காக ஆடம் விரும்பிய விமானப் படிப்பைப் படிக்க அவரை ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அனுப்பினார்கள். பயிற்சி முடிந்து 2017-ல் நாடு திரும்பிய ஆடம், தனியார் விமானங்களை ஓட்டுவதற்கான உரிமம் பெற்ற முதல் திருநம்பி எனத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். ஆடம்மின் இந்தச் செயலால் கோபமடைந்த அவருடைய குடும்பத்தினர் அவரை ஓராண்டுக்கு வீட்டிலேயே சிறைவைத்தனர். வீட்டுச் சிறையிலிருந்து தப்பிய ஆடம், பேருந்து, ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்தார்.

பின்னர், மற்றொரு திருநம்பியுடன் சேர்ந்து பல்வேறு பகுதிநேர வேலைகளைச் செய்துள்ளார். இந்நிலையில் கேரள சமூகநலத் துறை அமைச்சர் கே.கே ஷைலஜாவைச் சந்தித்துத் தனக்கு ஏதாவது வேலை வேண்டும் எனக் கேட்டுள்ளார். அமைச்சரும் திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான பயிற்சி மையத்தில் கமர்ஷியல் விமானங்கள் ஓட்டுவதற்கான மேற்படிப்பில் ஆடம்மைச் சேர்த்துவிட்டார். இப்படிப்புக்கான செலவையும் கேரள அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

இப்படிச் சொன்னாங்க: பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

நாகாலாந்து மாநிலத்தில் சமீபத்தில் 2019 மிஸ் கோஹிமா அழகிப் போட்டி நடைபெற்றது. அதில் கேள்வி - பதில் சுற்றில் நடுவர் ஒருவர், “ஒருவேளை நீங்கள் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன சொல்வீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு விக்கோனு சாசூ (Vikuonuo Sachu) என்பவர் அளித்த பதில் அரங்கையே அதிரவைத்தது.

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நான் சந்திக்க நேர்ந்தால், பசுக்களுக்குப் பதிலாகப் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள் எனச் சொல்வேன்” என அவர் சொன்னதும் அரங்கமே ஆரவாரத்தால் அதிர்ந்தது. இந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றாலும் காலத்துக்கு ஏற்ற பதிலைச் சொல்லி மக்கள் மனத்தில் முதலிடம் பிடித்துவிட்டார் விக்கோனு சாசூ.

பார்வையற்ற முதல் ஆட்சியர்

பார்வைக் குறைபாடு கொண்ட பிரஞ்சல் பாட்டீல் (pranjal patil), திருவனந்தபுரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மகாராஷ்டிரத்தின் உல்லாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பிரஞ்சல் பாட்டீல், பார்வைக் குறைபாட்டுடன் பிறந்தவர். வளரும்போது முழுமையாகப் பார்வை பாதிக்கப்படும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் பிரஞ்சலுக்கு ஆறு வயதானபோது வகுப்பில் உடன் படித்த மாணவர் பென்சிலால் குத்தியதில் அவரின் பார்வைத் திறன் முழுமையாகப் பாதிக்கப்பட்டது.

பத்தாம் வகுப்புவரை மராட்டிய மொழியில் படித்த பிரஞ்சல், 11-ம் வகுப்பிலிருந்து ஆங்கில வழியில் படித்தார். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் (International Relations) துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பல்கலைக்கழகத்தில் நண்பர் ஒருவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து பிரஞ்சலும் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படித்தார். 2017-ம் ஆண்டு நடந்த தேர்வில் இந்திய அளவில் 733-ம் இடத்தைப் பெற்றார். இதையடுத்து பிரஞ்சலுக்கு ரயில்வே துறையில் கணக்காளர் பணி வழங்கப்பட்டது.

ஆனால், பிரஞ்சலின் பார்வைக் குறைபாட்டைக் காரணம் காட்டி ரயில்வே துறை பணி வழங்க மறுத்துவிட்டது. பின்னர் அஞ்சல் துறையில் பணி ஒதுக்கப்பட்டது. வேலையில் இருந்துகொண்டே 2018-ல் மீண்டும் ஐ.ஏ.எஸ். தேர்வெழுதினார். அதில் 124-ம் இடத்தைப் பெற்று ஐ.ஏ.எஸ். பதவிக்குத் தேர்வானார்.

பின்னர் எர்ணாகுளத்தில் துணை ஆட்சியர் பயிற்சியை மேற்கொண்டார். ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் துணை ஆட்சியராக பிரஞ்சல் பாட்டீல் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்மூலம் பார்வைக் குறைபாடுகொண்ட முதல் துணை ஆட்சியர் என்ற பெருமையை பிரஞ்சல் பெற்றிருக்கிறார்.

முதல் பட்டதாரி காமினி ராய்க்குச் சிறப்பு டுடூல்

வங்கக் கவிஞர் காமினி ராயின் 155-ம் பிறந்தநாளையொட்டி அக்டோபர் 12 அன்று சிறப்பு டுடூலை கூகுள் நிறுவனம் வெளியிட்டது. கிழக்கு வங்கத்தில் 1864-ல் பிறந்தவர் காமினி ராய். இவருடைய தந்தை பிரிட்டிஷ் இந்தியாவில் நீதிபதியாகப் பணியாற்றியவர்.

இதனால் காமினிக்குச் சிறு வயதிலேயே சிறப்பான கல்வி வழங்கப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள பெத்யூன் கல்வி மையத்தில் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தார். பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட அந்தக் காலத்திலேயே சம்ஸ்கிருதப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்று இந்தியாவில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் பெண் என அறியபட்டார்.

பெண் கல்விக்காகப் பாடுபட்ட அபலா போஸைக் கல்லூரிக் காலத்தில் காமினி ராய் சந்தித்தார். அவருடன் இணைந்து பெண்களின் முன்னேற்றத்துக்காகப் போராடத் தொடங்கினார். பெண்கள் அடைய வேண்டிய உயரத்தைத் தன் கவிதைகளின் வாயிலாக வெளிப்படுத்தினார். பெண்களுக்குக் கல்வி வழங்குவதன் மூலம் அவர்களுக்கு வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்திய காமினி, எட்டு வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார்.

இவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘அலோ ஓ சாயா’ (Alo O Chhaya) 1889-ல் வெளியானது. வங்கப் பெண்களுக்கு வாக்குரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர்களில் இவரும் ஒருவர். 1933 செப்டம்பர் 27 அன்று, மறைந்த காமினி ராய், தன் இறுதிகாலம் வரை வங்க இலக்கியத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in