Published : 20 Oct 2019 11:12 AM
Last Updated : 20 Oct 2019 11:12 AM

நோபல் பரிசு: வெற்றிகளும் விடுபடல்களும்

கோபால்

நோபல் பரிசுகளுக்கான அறிவிப்பு வெளியானதுமே வழக்கம்போல் வரவேற்பும் விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாகப் பெண்களுக்குக் கிடைத்த அங்கீகாரமும் புறக்கணிப்பும் பேசுபொருளாயின. சிலரது வெற்றி கொண்டாடப்படும் அதேவேளையில் இன்னும் அதிக எண்ணிக்கையில் பெண்களின் பெயர்கள் நோபல் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற கருத்தும் ஒலித்தது.

2019-ல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கும் எஸ்தர் டுஃப்லோ, அப்பிரிவில் பரிசு பெறும் இரண்டாம் பெண். இதற்கு முன், 2009-ல் எலினார் ஓஸ்ட்ரோம் என்பவருக்கு இதே பிரிவில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1972-ல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிறந்த டுஃப்லோ, வரலாற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். ரஷ்யாவில் சில ஆண்டுகள் பணியாற்றியபோது பொருளாதார நிபுணரிடம் உதவியாளராக இருந்தார்.

அப்போதுதான் பொருளாதாரம் மூலமாகத்தான் உலகில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று தீர்மானித்தார். 1999-ல் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி மையத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 2002-ல் அந்தக் கல்வி மையத்தின் உதவிப் பேராசிரியரானார்.

தனது முனைவர் பட்ட ஆய்வின் மேற்பார்வையாளர்களில் ஒருவரான அபிஜித் பானர்ஜியுடன் இணைந்து வளர்ச்சிப் பொருளாதாரம் தொடர்பான ஆய்வுகளிலும் அவற்றின் மூலம் வறுமை ஒழிப்புக்கான வழிமுறைகளைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்தினார். 2015-ல் டுஃப்லோவும் பானர்ஜியும் மணந்துகொண்டனர். உலக வறுமையை ஒழிக்க ஆய்வுசார்ந்த அணுகுமுறையுடன் செயல்பட்டதற்காக இந்த இணையரும் மைக்கேல் க்ரெமர் என்பவரும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

2018-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றிருப்பவர் ஓல்கா டொகார்சுக். நடுவர் குழுவில் இருந்த ஒருவரின் கணவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையானதால் கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

எனவே, இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 1962-ல் போலந்தில் பிறந்தவரான ஓல்கா, வார்ஸா பல்கலைக்கழகத்தில் உளவியலாளராகப் பயிற்சிபெற்றவர். 1989-ல் இவர் எழுதிய ‘சிட்டீஸ் இன் மிரர்ஸ்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளியானது. 1993-ல் வெளியான ‘தி ஜர்னி ஆஃப் தி புக் பீப்பிள்’ இவரது முதல் நாவல். தொடர்ந்து பல கதைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ள டொகார்சுக், ‘ஃபிளைட்ஸ்’ என்கிற நாவலுக்காக 2018-ம் ஆண்டின் மேன் புக்கர் பரிசைப் பெற்றார். தேச எல்லைகளைக் கடப்பவர்களைப் பற்றி எழுதியதற்காக இவர் நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

நோபலும் பெண்களும்

* பெண்கள் அதிகம் பெற்றிருப்பது அமைதிக்கான நோபல் பரிசைத்தான். 17 பேருக்கு அந்தப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. 15 பெண்கள் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார்கள். அறிவியல் பிரிவுகளில் மருத்துவத்துக்கான நோபல் பரிசை 12 பேர் பெற்றிருக்கிறார்கள். இயற்பியல், வேதியியல் பரிசுகள் தலா மூவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை இரண்டு பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.
* 1903-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றதன் மூலம் நோபல் பரிசை வென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் மேரி கியூரி. 1911-ல் வேதியியலுக்கான நோபல் பரிசையும் அவர் பெற்றார்.
* பெண்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட 54 நோபல் பரிசுகளில் இரண்டு பரிசுகளை ஒருவரே பெற்றிருப்பதால் நோபல் பரிசைப் பெற்ற பெண்களின் எண்ணிக்கை 53.
* இயற்பியல், வேதியியல், மருத்துவம் ஆகிய அறிவியல் பிரிவுகளில் இதுவரை நோபல் பரிசு வாங்கிய 600 பேரில் பெண்களின் எண்ணிக்கை 19 மட்டுமே.
* 2009-ல் மருத்துவம் (2), இலக்கியம் (1), வேதியியல் (1), பொருளாதாரம் (1) என ஐந்து பெண்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் வரலாற்றிலேயே அதிக பெண்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது அந்த ஆண்டில்தான்.
* 2015-ல் து யுயு (Tu Youyou) மருத்துவத்துக்கான நோபலைப் பெற்றார். இதன் மூலம் நோபல் பரிசை வென்ற முதல் சீனப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
* 2018-ல் டோனா ஸ்ட்ரிக்லாண்ட் என்பவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 55 ஆண்டுகள் கழித்து அப்பிரிவில் ஒரு பெண்ணுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதே ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு ஃப்ரான்சஸ் அர்னால்ட் என்பவருக்கு வழங்கப்பட்டது.

விடுபடல்களின் அநீதி

1903-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு முதலில் மேரி கியூரியின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த கணிதவியலாளர் கோஸ்டா மிட்டாக்-லெஃப்லரின் தீவிர முயற்சியால்தான் மேரி கியூரியின் பெயர் சேர்க்கப்பட்டு அவருக்குப் பரிசு கிடைத்தது. பல முக்கியக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள் உட்படத் தகுதி வாய்ந்த பெண்கள் பலர் நோபல் பரிசுக் குழுவால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கான சில உதாரணங்கள்:
* கரும்பொருளை (Dark matter) 1980-களிலேயே கண்டுபிடித்த வேரா ரூபினுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டிருக்க வேண்டும். அவர் 2016-ல் இறந்தார். இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்க முடியாது என்பதால் ரூபினுக்கு நோபல் அங்கீகாரம் அளிக்காத குறையைச் சரிசெய்யவே முடியாது.
* அணுப் பிளவைக் கண்டுபிடித்ததற்காக 1944-ல் ஓட்டோ ஹானுக்கு வேதியி யலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், அந்தக் கண்டுபிடிப்பில் சம பங்களித்த லிசே மெய்ட்னருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. 1935 முதல் 1965வரை 48 முறை அவரது பெயர் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டபோதும் ஒருமுறைகூட அவருக்குப் பரிசு வழங்கப்படவில்லை. 1968-ல்
அவர் இறந்துவிட்டார்.
* மரபணுவின் வடிவமைப்பைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் வாட்ஸன், ஃப்ரான்சிஸ் கிரிக், மாரிஸ் வில்கின்ஸ் ஆகியோருக்கு 1962-ல்
மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பில் முக்கியப் பங்காற்றிய ரோசலிண்ட் ஃபிராங்ளின் என்ற பெண் 1958-ல் இறந்துவிட்டதால் அவருக்கு அந்தப் பரிசு கிடைக்காமல் போனது.
* கதிர்வீச்சுத் துடி விண்மீன்களைக் (Radio pulsars) கண்டுபிடித்த ஜோஸ்லின் பெல் பர்னலுக்குப் பரிசு வழங்கப்படவில்லை. அந்த ஆராய்ச்சியின் மேற்பார்வையாளர் அந்தோணி ஹெவிஷுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
* லீன் ஹாவ், சியான்-ஷிங் வு எனத் தகுதியிருந்தும் நோபல் கிடைக்காத பெண்களின் பட்டியல் மிக நீளமானது.
* இயற்பியல், வேதியியல் பிரிவுகளில் பரிசு பெற்ற பெண்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. கடந்த ஆண்டு இரண்டு பிரிவுகளிலும் பெண்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது நல்ல முன்னேற்றமாகப் பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மருத்துவம் உட்பட மூன்று அறிவியல் பிரிவுகளிலும் ஒரு பெண்ணுக்குக்கூட நோபல் வழங்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x