Published : 13 Oct 2019 12:22 PM
Last Updated : 13 Oct 2019 12:22 PM

சர்வதேசப் பெண் குழந்தைகள் நாள்: அக். 11 - பெண் குழந்தைகள்- உண்மை நிலை என்ன?

தொகுப்பு: எல். ரேணுகாதேவி

லகில் இயற்கை வளங்கள், உயிரினங்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவு வன்முறைகளை எதிர்கொள்பவர்களாகப் பெண்களே உள்ளனர். பாலினப் பாகுபாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதே பெண்களின் இந்த நிலைக்குக் காரணம். அதிலும் குறிப்பாக, பெண் குழந்தைகள் மீதான வன்முறை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உலக அளவில் அதிகரித்துள்ளது. அதனால்தான் அன்றாடம் சிக்கலை எதிர்கொள்ளும் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா. அவை ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 11 அன்று சர்வதேசப் பெண் குழந்தைகள் நாளைக் கடைப்பிடிக்கிறது.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, முன்னேற் றத்தை வலியுறுத்தி 2012-ம் ஆண்டிலிருந்து இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டின் மையக்கரு: ‘பெண் ஆற்றல்: எழுதப்படாததும் தடுக்க முடியாததும்’.

நவீன வளர்ச்சிகளை எட்டிவிட்டதாக மார்தட்டிக் கொள்ளும் இந்த 21-ம் நூற்றாண்டிலும் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தை வலியுறுத்த வேண்டிய நிலையிலேயே உள்ளோம். கல்வி என்ற திறவுகோல் போதும் பெண்கள் முன்னேறுவதற்கு. ஆனால், உலக அளவில் அறுபது லட்சம் பெண் குழந்தைகள் கல்வி கிடைக்காமல் உள்ளனர்.
இந்திய அளவில் இரண்டு கோடிக் குழந்தைகள் வகுப்பறைக்கு வெளியே உள்ளனர். ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ எனப் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தியும் அவர்களுக்கான கல்வி, உணவு, மருத்துவம் ஆகிய அடிப்படை உரிமைகள் தடையின்றிக் கிடைக்கவும் நடவடிக்கை எடுத்துவருவதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால், நடைமுறையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் கல்வி உரிமையும் உண்மையிலேயே உறுதிசெய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கான பதில், நம்முடைய வீடுகளிலும் சமூகத்திலுமே உள்ளது.

பெண் கல்வி

* நாட்டில் எழுத்தறிவு பெற்ற பெண்களின் விகிதம் 65 சதவீதம் மட்டுமே.
* ஐந்திலிருந்து ஒன்பது வயதுள்ள 53 சதவீதப் பெண் குழந்தைகள் கல்வி கிடைக்காதவர்களாக உள்ளனர்.
* தமிழகத்தில் 73.9 சதவீதம் பெண்களே கல்வி அறிவு பெற்றவர்கள்.

பெண் குழந்தை பிறப்பு

* சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க. ஆளும் மாநிலமான உத்தராகண்டில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள 132 கிராமங்களில் ஒரு பெண் குழந்தைகூடப் பிறக்கவில்லை என்பது சாதாரணத் தகவல் அல்ல. பெண் சிசுக் கொலை மோசமான நிலையை எட்டியுள்ளதன் வெளிப்பாடு.
* நாட்டில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 940 பெண் குழந்தைகளே பிறக்கின்றனர். இது சமூகத்தில் பல்வேறு மோசமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது.
* கடந்த பத்தாண்டுகளில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 0.75 சதவீதம் மட்டும் அதிகரித்துள்ளது.
* தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 995 பெண் குழந்தைகள். ஆனால் கேரளம், புதுச்சேரியில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல்.
* தமிழகத்தில் நீலகிரியில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 1,041 பெண் குழந்தைகள் எனப் பிறப்பு விகிதம் உயர்ந்து காணப்படுகிறது. தருமபுரியில் 946, தலைநகர் சென்னை யில் 986 எனப் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
* குஜராத் மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 918 மட்டுமே உள்ளது. இந்த சதவீதம் முந்தைய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பைவிட -0.22 சதவீதம் குறைவு.

மருத்துவமும் குழந்தைகளும்

* ஒவ்வோர் ஆண்டும் பத்து லட்சம் பெண் குழந்தைகள் பிறந்து சில மாதங்களிலேயே இறக்கின்றனர்.
* நாட்டில் ஆறு பெண் குழந்தை களில் ஒருவர் தன்னுடைய பதினைந்தாம் பிறந்த நாளைப் பார்க்கும் முன்பே இறந்துவிடுகிறார்.
* நான்கு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் இறப்பு ஆண் குழந்தைகளைவிட அதிக மாக உள்ளது.
* ஆண் குழந்தைகளைவிடப் பெண் குழந்தைகளே அதிக சுகாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
* உரிய மருத்துவ சேவை கிடைக்காத காரணத்தாலேயே பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

பெண் குழந்தைக் கடத்தல்

* ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் பெண் குழந்தைகள் 1.2 கோடிப் பேர் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படுகிறார்கள்.
* இந்தியாவில் கடந்த 2016-ம் மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி கடத்தப்பட்டுள்ள பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் எண்ணிக்கை 20,000.
* கிராமப் பகுதிகளில்தான் குழந்தைக் கடத்தல் அதிக அளவு நடைபெறுகிறது.
* குழந்தைக் கடத்தல் நடைபெறும் மாநிலங்களில் தென்னிந்தியாவில் கர்நாடகம், ஆந்திரத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
* கடத்திச் செல்லப்படும் பெண் குழந்தைகளில் 22 சதவீதத்தினர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என அரசின் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.
* கடத்திச் செல்லப்படும் குழந்தைகள் பாலியல் தொழிலிலும், வீட்டு வேலைகளிலும் ஈடுபடுத்தப் படுகிறார்கள்; சிலருக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
இயற்கை வளங்களை அழித்துவிட்டால் பூமியில் வாழ முடியாது. அதுபோல் பாலினப் பாகுபாட்டால் பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் தடுக்கப்படுவது, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, முன்னேற்றம் சார்ந்து ஒவ்வொரு தனிநபரின் எண்ணத்தில் மாற்றம் நிகழ்வது போன்றவை தொடங்காதவரை பெண்களுக்கு மட்டுமல்ல, உலகுக்கும் விடிவு இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x