

செல்லப்பா
ஆதிகாலத்தில் காதலைக் கொண்டாடிய சமூகம் நம்முடையது. ஆனால், இடையில் ஏற்பட்ட சமூக மாற்றம் காதலை ஒழுக்கமீறலாகக் கருதியது ஒரு பண்பாட்டு விபத்து. காதல் என்னும் சொல்லே சமூகத்தின் அடிவயிற்றை அநியாயத்துக்குக் கலக்குகிறது. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே காதல் மலர்வது இயல்பானதுதான் என்னும் புரிதல் இன்னும்கூடப் பரவலாகவில்லை. வேண்டா விருந்தாளியாகத்தானே காதலைச் சமூகம் கருதுகிறது. அதுவும் ஒரு பெண் காதலித்தால் சமூகமே பேதலித்துப் போய்விடுகிறதே.
பெண்ணின் காதலை இமாலயக் குற்றமாகப் பார்க்கும் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது என்றபோதும் முற்றாக ஒழிந்துவிடவில்லை. அதனால்தான் நம் சமூகத்தில் ஒரு பெண் தன் காதலைச் சொல்வது பெரிய வைபவமாகப் பார்க்கப்படுகிறது. இன்பத் தென்றலாகத் தொடங்கும் காதல் பெரும்பாலான பெண்களின் வாழ்வில் துன்பச் சூறாவளியாகிவிடுவதால் பெண்களும் காதல் விவகாரத்தில் அவ்வளவு எளிதாக முடிவெடுத்துவிடுவதில்லை. சமூகத்தின் அழுத்தம் காரணமாகத் தனது காதலைச் சொல்ல காலம் தாழ்த்தும் ஆயிரக்கணக்கான பெண்களில் ஒருத்தி சுபத்ரா. ஆனால், காலன் வரும்வரையா சுபத்ரா காத்திருக்க வேண்டும்?
கற்பு என்பது வெறும் கற்பிதம்
பெண்கள் பலருக்கு முன்மாதிரியானவள் சுபத்ரா. அதற்குக் காரணம் அவளுடைய நாகரிக நடத்தை. அதுவும் புடவையைத் தோளோடு தோளாக இழுத்துப் போர்த்தி அவள் கல்லூரிக்கு வரும் அழகில் ஆண்கள் மட்டுமல்ல; பெண்களும் தம் மனத்தைப் பறிகொடுத்திருந்தனர். போர்வையின் கச்சிதத்துடன் புடவையைக் கையாளும் சாமர்த்தியம் அறிந்த அவள் கற்புக்கரசி கண்ணகி வழியில் வந்த மாதரசி. கற்பென்பதே கற்பிதம்தானே என்று நீங்களும் நானும் வேண்டுமானால் கூறலாம். ஆனால், சுபத்ரா அப்படி நினைக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை கற்பைக் கட்டிக்காப்பதையே கௌரவமாகக் கருதுபவள். அது மாத்திரமே குடும்பப் பெருமையைக் கோபுரம் அளவுக்கு உயர்த்திக் காட்டும் என்பது அவளது நம்பிக்கை. இதென்ன பைத்தியக்காரத்தனம் என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், அவளுக்கு அப்படித் தோன்றவில்லை. அந்நிய ஆடவன் வந்து அருகில் அமர்வதையே விரும்பாதவள் அவள். அப்படியான பண்புதான் அவளது தனித்துவம். அவள் புராண காலத்துப் பதிவிரதைபோல் கடும் விரதம் பூண்ட சுபாவத்தினள். ஏன் சுபத்ரா இப்படியோர் அரணமைத்து வாழ்கிறாள் என்று தோன்றுகிறதா? காரணம் இல்லாமலில்லை. அப்பா இல்லாத குடும்பத்தில் பிறந்தவள் சுபத்ரா. அவளை வளர்த்தெடுத்ததெல்லாம் அம்மாதான். கல்லூரியில் படிக்கும் அவளுக்கு ஒரு தங்கை. தகப்பனில்லாத குடும்பம் என்பதால் சுபத்ராவின் தாய் சுசீலா ஊர் வாயில் விழுந்தெழுந்தவர்.
சுசீலா பருவ வயதில் ஒருவனைக் காதலித்தார். ஆனால், மணந்ததோ வேறு ஒருவரை. நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத இந்தியப் பெண்கள் வாழ்வில் இப்படித்தானே நடக்கிறது என்கிறீர்களா? உங்களுக்குக் கற்பூரப்புத்தி. ஆனால், சுசீலாவின் கணவனுக்கோ சந்தேகப்புத்தி. அதுவும் நம் பண்பாட்டில் புதிதில்லையே. இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பிறகு அந்த மனிதன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு குடும்பத்தை விட்டுப் பிரிந்துசென்றுவிட்டான். அவன் சுசீலாகூடவே இருந்திருந்தாலும் சந்தேகப்பட்டே அவர்களுடைய நிம்மதியைக் குலைத்திருப்பான். அவன் ஓடிப்போனது ஒருவகையில் நல்லதுதான். ஆனால், சுசீலாவுக்கோ அவன் இல்லாதது பெருந்துயரமானது.
கனிந்த காதல் கனியாச் சொல்
தனது வாழ்க்கை தந்த பாடத்தால் பெண் குழந்தைகளைக் கவனமாக வளர்த்துவருகிறார் சுசீலா. ஆனால், ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் உலகில் அப்படியெல்லாம் ஒரு பெண்ணை ஆணின் பார்வையில் படாமல் வளர்த்துவிட முடியுமா என்ன? சுபத்ராவின் ராஜா அவளது கல்லூரிக்கே வந்துவிடுகிறான். அவனுடைய தந்தை சிங்கப்பூரில் வாழ்கிறார். அவருக்கு அங்கேயும் ஒரு குடும்பம். அவரது ஆஸ்தி கிடைத்த அளவுக்கு அன்பு கிடைக்கவில்லை ராஜாவுக்கு. சுபத்ரா, ராஜா இருவரும் ஒரே ரயிலில் பயணம் செல்கிறார்கள். பருவ வயது; எதிரெதிர் பாலினம் எனும்போது, விழிகளின் விளிம்பில் கனிந்த காதல் தளும்பத்தானே செய்யும். பார்த்ததுமே காதலைப் பரிமாறிக் கொள்கின்றன கண்கள். கண்களில் காதலைக் கசியவிட்ட சுபத்ரா இதழ்களை இறுக்கிக்கொண்டாள். பேசும் விழிகளும் பேசா இதழ்களும் சுபத்ராவின் அடையாளங்கள்.
என்னதான் சுபத்ரா வாயை மூடிக்கொண்டிருந்தாலும் ஊர் வாயை மூடும் உலைமூடி இல்லையே? சுசீலாவுக்கு அரசல்புரசலாக ராஜா - சுபத்ரா விஷயம் தெரியவருகிறது. சுசீலா ஜாடைமாடையாகக் கேட்கும்போது, “இது நீ வச்ச மரம்மா, உம் மனசு போல வளரும்” என்கிறாள் சுபத்ரா. “நான் உன் பொண்ணும்மா” என்று பருவ வயது மகள் சொல்லும்போதுதான் தாய்க்கு உண்மையிலேயே பதைபதைக்கும். ஏனெனில், தாயும் அந்த வயதையும் அந்த வார்த்தையையும் கடந்திருப்பாரே.
ஆனால், ஏன் இப்படிப் பதைபதைக்க வேண்டும்? தாயற்ற பிறருக்கு இந்த அங்கலாய்ப்பு அர்த்தமற்றதாகவே தென்படும். ஒரு தாய்க்கு மட்டுமே அது புரியும்போல.
ஒருவழியாக சுபத்ரா அம்மாவைச் சமாளித்துவிட்டாள் என்றபோதும், அவளால் காதலைச் சமாளிக்க முடியவில்லை. கரையைத் தாண்டாத அலையாக அவளது நெஞ்சாங்கூட்டில் வந்து வந்து மோதியபடியே இருக்கிறது காதலெனும் அலை. அந்த அலை கரையைக் கடக்கவும் இல்லை; கடலிலேயே கிடக்கவும் இல்லை. குடும்பச் சூழல் என்னும் சிறு மதில், காதல் எனும் தொடரலையைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறது. மனத்தில் பொங்கும் காதலை வெளிப்படுத்த அவள் துணியும் நேரத்திலெல்லாம் ஏதாவது ஒரு சம்பவம் பொங்கும் காதலை நீரூற்றி அணைத்துவிடும். மீண்டும் நத்தையாய்ச் சுருங்குவாள்.
துணிந்து நில், திறந்து சொல்
காதலின் பாதையில் பருவம் அவளைச் சில அடிகள் முன்னகர்த்தும்; சமூகமோ பல அடிகள் பின்னிழுக்கும். இரண்டுக்கும் இடையில் அகப்பட்டு அல்லலுற்றாள் அவள். உற்சாகமாக ராஜாவைப் பார்க்க வரும்போதெல்லாம் சுசீலா தொடர்பான சம்பவங்களைக் குத்திக்காட்டி யாராவது பேசிவிடுவார்கள். இல்லையென்றால் சுசீலா எதையாவது சாடையாகச் சொல்லிச் சங்கடப்படுத்துவார். சட்டென்று நொறுங்கிவிடுவாள் சுபத்ரா. அவளது இந்தப் பலவீனத்தைச் சமூகம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. சுசீலாவிடமிருந்து சுபத்ராவிடம் பரவிய பலவீனம் இது. இது போதாதென்று சுசீலா தன் பயத்தில் ஏதாவது அறிவுறுத்திக்கொண்டேயிருப்பார்.
ஒருமுறை கைதவறி அரிக்கேன் விளக்கைக் கீழே போட்டு உடைத்துவிடுகிறாள் சுபத்ரா. அப்போது சுசிலா, “இப்ப ஒடஞ்ச கண்ணாடி மாதிரிதான் பொம்பளங்க மனசு. அத ஜாக்கிரதையா பாத்துக்கணும். கைதவறி விட்டதுபோல மனச விட்டுட்டனா, அப்புறம் அத ஒட்ட முடியாதுடி” என்கிறார். இதையே ஓர் ஆணுக்கு ஒரு தாய் சொல்வாரா? சொல்லியிருக்க மாட்டார். அப்படியெனில் இது எவ்வளவு பெரிய அபத்தம். இப்படியான அபத்தங்களை எதிர்த்து நிற்கத் துணிவு வேண்டும். அந்தத் துணிச்சலை சுபத்ரா பெற்றிருந்தால் அவள் இவ்வளவு கலங்கியிருக்க வேண்டியதில்லை. துணிச்சல் இல்லாததால்தான், அவள் நிம்மதியை இழந்தாள். சமூகம் ஏற்றிவைத்த சுமையை உதற முடியாமல் அதற்கு உடன்பட்டாள் அவள்.
ஆனாலும், ஒரு கட்டத்தில் சமூகத்தின், அதன் பிரதிநிதியான தன் அம்மாவின் அச்சுறுத்துதல்களை எல்லாம் துச்சமாக மதித்துத் தூக்கியெறியத் துணிந்தாள். ராஜா மீது தான் வைத்திருந்த காதலை அவனிடம் சொல்லிவிட முடிவெடித்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டுவருகிறாள். ரயிலில் அமர்ந்திருக்கும் ராஜாவுடன் வாய் ஓயாமல் பேசுகிறாள். குனிந்த தலை நிமிராமல் இருக்கிறான் அவன். அவனைத் தொட்டு உலுக்கும் சுபத்ராவைத் தவிக்கவிட்டு அவன் நிரந்தரமாகப் பிரிந்துவிடுகிறான். காலாவதியான காதலை வைத்துக்கொண்டு கைபிசைந்து நிற்கிறாள் சுபத்ரா. சுபத்ராவின் காதலைக் கொன்ற ‘ஒருதலை ராகம்’ (1980) ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பெண் காதலைச் சொல்வது பண்பாட்டுக்கு அழகல்ல என்னும் போலித்தனம் போய்விட்டால் போதும்; சுபத்ராக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்பதை ரசிகர்கள் உணர்ந்திருப்பார்களோ?
(நிழல்கள் வளரும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@hindutamil.co.in
படம் உதவி: ஞானம்