

அன்பு
அன்புகடலின் நீலமும் சூரியச் சிவப்பும் இரவின் கருமையும் நிலவின் வெண்மையும் நமக்குள் பல விஷயங்களைக் கடத்தும் வல்லமை கொண்டவை. நம் உணர்வுகளைத் தீர்மானிப்பதில் வண்ணங்களுக்குப் பங்குண்டு என்பதைத் தன்னுடைய ஓவியங்கள் மூலம் உணர்த்துகிறார் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த அக் ஷயா செல்வராஜ்.
சென்னை நகரைச் சுற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களை ஓவியமாக ஆவணப்படுத்தியதன்மூலம் அறியப்பட்டவர் அக் ஷயா. சிறுவயதிலேயே சுயமாக ஓவியம் வரையக் கற்றுக்கொண்ட இவர், சாமானியப் பெண்கள் முதல் சாமியாக வணங்கப்படும் பெண்கள்வரை பெண்களை மையப்படுத்திய ஓவியங்களை வரைவதில் ஈடுபாடு கொண்டவர்.
கோலம் தந்த கலை
கட்டிட வடிவமைப்பாளரான அக் ஷயா, ஓவியத் துறையிலும் கவனம் செலுத்திவருகிறார். தனிமையை நாடிச் செல்லும் பெண்களின் மகிழ்ச்சி எதை மையப்படுத்தி இருக்கும் என்பதை அவரது ஓவியங்கள் வெளிப்படுத்துகின்றன. புத்தகங்களுக்கான முகப்பு அட்டை, வாழ்த்து அட்டை, மரச் சிற்பங்கள், களிமண் சிற்பங்கள், ஞெகிழிக் கழிவுகளில் இருந்து கலைப் பொருட்களை உருவாக்குவது எனப் பல்வேறு வகையில் தன் திறனை அவர் வெளிப்படுத்திவருகிறார்.
“என் அம்மா வரைந்த கோலங்கள்தான் ஓவியம் மீதான ஆர்வத்தைத் தூண்டின. அதிலிருந்துதான் என்னைச் சுற்றியுள்ள விஷயங்களை ஓவியங்களாகப் பார்க்கத் தொடங்கினேன். சென்னையில் எங்கே ஓவியப் போட்டிகள் நடைபெற்றாலும் என்னை அழைத்துச் செல்வார் அம்மா. வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி என் விருப்பத்துக்காக நிறையப் போட்டிகளில் கலந்துகொண்டேன். அதனால்தான் என்னால் ஓவியக் கலையில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளைச் செய்ய முடிகிறது” என்கிறார் அக் ஷயா.
இவரது ஓவியங்கள் பளிச்சிடும் வண்ணங்களையும் எளிமையான கோடுகளையும் கொண்டதாக உள்ளன. ஓவியங்கள் மூலம் நற்சிந்தனைகளை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட அக் ஷயா, தனிமையில் காட்டுக்குச் செல்லும் பெண்ணுக்கு நட்சத்திரங்கள், நிலவொளி, இரவின் கருமை ஆகியவையே துணை என ஓவியம் மூலம் உணர்த்துகிறார். வசந்த சேனா, மாலதி - மாதவன் போன்ற சித்திரக் கதைகளை அஞ்சல் அட்டையில் தீட்டியுள்ளார். புற்றுநோயின் பாதிப்பிலிருந்து தைரியமாக மீண்டெழுந்த பேச்சாளர் அனிதா மூரஜனி, ரூமி, பாரதியார் ஆகியோரது கவிதைகளை உள்ளடக்கிய ஓவியங்களை வரைந்துள்ள அக் ஷயா, பெண் மனம் குறித்து ஆழமான தேடலில் உள்ளார் என்பதை அவரது ஓவியங்கள் வெளிப்படுத்துகின்றன.
“நாம் கடந்து செல்லும் விஷயங்களே ஓவியங்களாக மாறுகின்றன. அதை வண்ணங்களாலும் வடிவமைப்பு முறையாலும் வேறுபடுத்திக் காட்டுவதால் மக்களிடம் எளிதில் கொண்டு செல்ல முடியும். வார்த்தைகளால் சொல்ல முடியாதவற்றை ஓவியமாக வெளிப்படுத்துவதே என் நோக்கம்” என்கிறார் அக் ஷயா.