

அமுதா ஹரி
பிரசவம் என்பது குழந்தை பிறந்தவுடன் முடிந்துவிடுவதில்லை. கர்ப்ப காலப் பராமரிப்பு, பிரசவம், பிரசவத்துக்குப் பின் 6–8 மாதம் வரையிலான காலகட்டப் பராமரிப்பு எல்லாம் சரிவர அமைவதுதான் சுகப்பிரசவம்.
பிரசவம் முடிந்ததில் தொடங்கி 6 முதல் 8 வாரங்கள் வரையிலான காலகட்டத்தை postpartum period என்கிறோம். இந்தக் காலகட்டத்தில் தாய், சேய் இருவரும் மிக எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நிலையில் இருப்பர். வேறு பிரச்சினைகளும் ஏற்படக்கூடும். தாய்க்கு மனரீதியான அழுத்தங்கள் ஏற்படலாம்.
எனவே, கர்ப்ப காலத்தில் பரிசோதனை எவ்வளவு முக்கியமோ அதே அளவு பிரசவத்துக்குப் பிந்தைய (postpartum) காலத்திலும் பரிசோதனை முக்கியம். ஆனால், பெரும்பாலான அம்மாக்கள் பிரசவத்துக்குப் பிந்தைய பராமரிப்புக்குப் போதுமான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தங்களைச் சரியாகக் கவனித்துக்கொள்வதும் கிடையாது. குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பங்கள், அதே அளவு கவனத்தைத் தாய்மார்களுக்குக் கொடுத்து அவர்களைக் கவனித்துக்கொள்வது கிடையாது.
தொற்று ஏற்படும் ஆபத்து
அம்மாவைப் பொறுத்தவரை அதிக ரத்தப்போக்கு, தொற்று, வலிப்பு வருவது போன்றவை ஏற்படக்கூடும். வலிப்பு போல வருவதை அந்தக் காலத்தில் ஜன்னி வருவது என்று சொல்வார்கள். அதாவது, பெல்விக் பகுதியில் தொற்றுகள் வரலாம். குழந்தையின் தலை வெளியே வருவதற்காகப் பிறப்புறுப்புப் பகுதியில் திறப்பை அதிகப்படுத்துவார்கள். அந்தப் பகுதி சரியாக ஆறாமல் இருந்தால் தொற்றுகள் ஏற்படக்கூடும்.
அரிதான தருணங்களில் குழந்தையை ஒட்டி இருக்கக்கூடிய அமினியோட்டிக் திரவம், சில செல்கள் தாயின் ரத்தச் சுற்றில் கலக்க நேரிடலாம். இது பொதுவான பிரச்சினை இல்லை என்றாலும் குழந்தை வெளியே வந்த பிறகும்கூட இம்மாதிரியான பிரச்சினைகள் வரக்கூடும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இவை குறித்து கவனத்துடன் இருக்க வேண்டும்.
எது அசாதாரண வலி?
கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் இருந்திருந்தால் அது அதிகமாகி வலிப்பு வரலாம். சர்க்கரை இருந்திருந்தால் அது தீவிரப்படலாம். எனவேதான் பிரசவத்துக்குப் பிந்தைய காலகட்டத்தை ஒருவிதத்தில் சிக்கலான காலகட்டம் என்கிறோம். பிரசவத்தால் உடல் ஏற்கெனவே பலவீனம் அடைந்திருக்கும். உதிரப்போக்கால் ரத்த இழப்பும் ஏற்பட்டிருக்கும். இவற்றால்தான் தாய் அசௌகரியமாக உணர்கிறாள்; அதனால்தான் வலி தோன்றுகிறது என்று எண்ணலாம். பிரசவத்துக்குப் பிறகு சாதாரணமாக வரக்கூடிய வலிக்கும் அசாதாரணமான வலிக்கும் வேறுபாடு தெரியாமல்கூடப் போகலாம்.
பிறந்த குழந்தையின் மீதே அதிக கவனம் இருப்பதால் தாயும் அவளைச் சார்ந்தவர்களும் இந்த வலியைப் புரிந்துகொள்ளாமல் போகலாம். காய்ச்சல், அதிகப்படியான உதிரப்போக்கு, அதீதமான வலி இப்படி எந்த அறிகுறி இருந்தாலும் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்றவை இருந்தவர்கள் மருத்துவரிடம் சரியான இடைவெளியில் சென்று கண்காணித்து வர வேண்டும்.
தாய் என்ன செய்ய வேண்டும்?.
தாய் சத்தான உணவைச் சாப்பிட வேண்டும். பழங்காலத்தில் காரம் அதிகம் உள்ள உணவைத் தர மாட்டார்கள். பூண்டு ரசம் தருவார்கள். காரத்துக்கு மிளகு சேர்ப்பார்கள். இவையெல்லாம் வயிற்றில் எரிச்சலைத் தடுக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் உடம்புக்கு வலுச் சேர்க்கவும் பின்பற்றப்பட்டவை. ராஜஸ்தான் மாதிரியான பகுதிகளில் அம்மாவுக்கு நெய் போட்டு வாரம் இரு முறை அல்லது மூன்று முறை மசாஜ் செய்வார்கள். சுகப்பிரசவமாக இருந்தால் உடனடியாக ஆரம்பித்துவிடுவார்கள்.
வாய்ப்புள்ளவர்கள் டாக்டரின் பரிந்துரைப்படி இந்த மசாஜை செய்துகொள்ளலாம். தேவையில்லாமல் வெளியாட்களை அதிகப்படியாக வீட்டுக்கு அழைக்கக் கூடாது. பிரசவித்தவுடனேயே வெளியிடங்களுக்குச் செல்லுதல், வெளி உணவை உண்ணுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். குழந்தையை எல்லோரும் தொடுதல், தூக்குதல், முத்தமிடுதல் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் தாய்க்கும் குழந்தைக்கும் தொற்று ஏற்படுவதைக் குறைக்க உதவும்.
தாயின் மன அழுத்தம்
பிரசவத்துக்குப் பிந்தைய மன அழுத்தம் என்பது பொதுவாக ஏற்படுவது. திடீரென்று எல்லோரும் குழந்தையை மட்டுமே கவனிப்பதால், பிடிக்காத உணவை உண்ணச் சொல்லி வற்புறுத்துவதால் மன அழுத்தம் ஏற்படுத்தலாம். தாய் அசந்து தூங்கிக்கொண்டிருக்கலாம். குழந்தை அழுகிறது என்று சொல்லி ஆளாளுக்கு எழுப்பிப் பால் கொடுக்கச் சொல்வார்கள். குழந்தை சிணுங்கினால் தட்டிக் கொடுப்பது, அழும்போதெல்லாம் பால் கொடுப்பது, குழந்தை துணியை நனைத்துவிட்டால் உடைகளை மாற்றுவது என இப்படியாகக் குழந்தைக்கு 24 மணி நேரமும் ஈடுகொடுக்க வேண்டியிருக்கிறது.
இளம் தாய்மார்கள் இதற்குப் பழகாததால் எரிச்சல் வருகிறது. தூக்கம் கெட்டுப்போனால் கோபம் வருகிறது. வெளிப்படுத்த முடியாத உணர்வுகள் மன அழுத்தமாக மாறுகிறது. இவை தவிர கர்ப்பகாலம், பிரசவம் இவற்றுக்குப் பின் ஹார்மோன் சுரப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்களும் உணர்வுகளில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறது. குடும்பத்தின் ஆதரவும் அனைவருக்கும் இது பற்றிய புரிதலும் இருந்தால் பெரிய பாதிப்பு ஏற்படாது. அது இல்லாதபோது மன அழுத்தம் ஏற்படும் சாத்தியம் அதிகம்.
சிக்கல்களைச் சமாளிப்பது எப்படி?
18 வயதில் ஒரு பெண்ணை அவள் குழந்தையுடன் தாய் கூட்டி வந்தார். அந்த பெண், “குழந்தையைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு இந்தக் குழந்தை வேண்டாம். குழந்தையைப் பார்த்தாலே கோபம் வருகிறது” என்று கூறினார். குழந்தை மேல் கோபம் வருகிறது என்றால் அது லேசாக ஒதுக்கிவிடக்கூடிய பிரச்சினை இல்லை. இது பிரசவத்துக்குப் பிந்தைய மன அழுத்தம். இவர்களுக்கு மருத்துவ உதவியும் கவுன்சலிங்கும் தேவை. இதைக் குடும்பத்தினர் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நேரத்தில் தாய்மார்களுக்குக் கணவனின் ஆதரவும் குடும்பத்தினர் ஆதரவும் அதிகமாகத் தேவைப்படும். அதனால்தான் தாய் வீட்டில் மூன்று அல்லது நான்கு மாதங்கள் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஏனென்றால் தாய், தன் மகளை அதிக அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அதனால்தான் நம் பண்பாட்டிலேயே முதல் பிரசவம் தாய் வீட்டில் என்று வைத்துள்ளார்கள். இதனால் முதல் பிரசவத்திலேயே பெண்களுக்கு இந்தப் பிரச்சினைகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரிந்துவிடும். மனப்பக்குவம் வந்துவிடும்.
இந்தப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு முதலில் இவை பற்றிய புரிதல் வேண்டும். தொடர்ச்சியாக மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். திடீரென்று படபடப்பு, எரிச்சல், சோகமாக இருத்தல், பிறப்புறுப்புத் திரவத்தில் துர்நாற்றம், அதிகமாகக் கோபம் வருதல், அதிக வெள்ளைப்படுதல், அதிக ரத்தப்போக்கு, குழந்தைமீது கோபம் வருதல், அதிக வலி என எது ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
| குழந்தை பிறந்த பிறகு தாய்க்கு ஏற்படக்கூடிய மனப் பதற்றமும் மனசோர்வும் பொதுவானவை. ஏழில் ஒரு பெண்ணுக்கு Postpartum depression ஏற்படுகிறது. தனிமை, மன அழுத்தம், சோர்வு, அழுகை போன்றவை குடும்பத்தினரின் அனுசரணையான கவனிப்பால் இரண்டு முதல் 12 வாரங்களுக்குள் குறைந்துவிடும். போதுமான கவனிப்பு இல்லாதபோது இது குணமாக நாட்கள் ஆகும். |
(நலம் நாடுவோம்)
கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in