விவாதக் களம்: சட்டத்தை வலுவாக்கிப் பெண்களைக் காப்போம்

விவாதக் களம்: சட்டத்தை வலுவாக்கிப் பெண்களைக் காப்போம்
Updated on
3 min read

தாய்மை என்ற பெயரில் சமூகம் கொடுக்கும் அழுத்தமே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 74 வயது எர்ரமட்டி மங்கயம்மாவைச் செயற்கைக் கருவூட்டல் மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுக்க வைத்தது. தாய்மை புனிதப்படுத்தப்படுவது குறித்தும் பெண் என்றால் குழந்தை பெற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்ற கற்பிதம் குறித்தும் செப்டம்பர் 29 அன்று வெளியான ‘பெண் இன்று’வில் ‘உயிரைப் பணயம் வைப்பதா தாய்மை’? என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.

இது குறித்து வாசகர்களின் கருத்துகளைக் கேட்டிருந்தோம். தாய்மையை அடைவதற்காகப் பெண்கள் மீது திணிக்கப்படும் நிர்ப்பந்தத்தைக் கண்டித்தே பலரும் எழுதியிருந்தனர். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள் உங்கள் பார்வைக்கு. தாய்மை என்பது ஒரு உணர்வே. கற்பு போன்றே அது இரு பாலருக்கும் பொதுவானது. பெண்மையோடு தாய்மையைத் தொடர்பு படுத்துவதுகூடப் பெண்ணடிமைத்தனத்தின் அங்கமே. பத்து மாதம் சுமக்கும் மகப்பேறு இல்லையெனில் குறுகி வெதும்பும் பெண்களின் மனநிலை மாற வேண்டும். தாய்மையின் பரிமாணங்கள் மாற வேண்டும். அதற்கேற்ப சட்ட மாற்றங்களும் கொண்டுவரப்பட வேண்டும்.

- இரா.பொன்னரசி, வேலூர்.

குழந்தைப்பேற்றுக்கான சிகிச்சைக்கு 98 சதவீத ஆண்கள் செல்வதே இல்லை. ஆண்கள் சிகிச்சைக்குச் செல்லாததால் ஏதோ அவர்கள் மீது எந்தக் குறையும் இல்லை என்பது போன்ற எண்ணம் படர்ந்து விரிந்து பலரது கண்ணையும் மறைத்துவிடுகிறது. குழந்தை இல்லாவிட்டால் வாழ்க்கையே போய்விடும் என்கிற பெண்களின் பயம்தான் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் முளைக்க மூல காரணம். எந்தப் பிரச்சினை வந்தாலும் பெண்தான் துணிந்து நிற்க வேண்டும்.

- ஜே.லூர்து, மதுரை.

ஏன் இன்னும் குழந்தை இல்லை என்ற கேள்வியை முதலில் குடும்பங்களே எழுப்பும். பிறகு உறவினரும் சுற்றத்தினரும் கேட்டுக் கேட்டு அந்தப் பெண்ணை நிலைகுலைய வைத்துவிடுகின்றனர். காரணம் பெண்ணின் பெருமையை எல்லாம் தாய்மையில்தானே நாம் ஏற்றிவைத்திருக்கிறோம்? இதுபோன்ற செய்திகளைப் படிக்கும்போதுதான் பெரியார் நமக்கு இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறார் எனத் தோன்றும். பெண்களை அடிமைப்படுத்தும் கருப்பையை அறுத்து எறியச் சொன்னவர்தானே அவர். தாய்மையின் பெயரால் பெண்கள் மனரீதியாக வதைக்கப்பட்டும் உடல்ரீதியாகச் சிதைக்கப்பட்டும்வருவதைப் பார்க்கும்போது பெரியார் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் எனத் தோன்றுகிறது.

- சித்ரா, திருநின்றவூர்.

பெண்கள் தாய்மை அடைந்த பிறகுதான் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கிறது இந்தச் சமூகம். ஏதோ சில காரணங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்கள் குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்படுவதால் கருவூட்டல் மையங்களை நாட வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பெண்கள் பிள்ளைபெறும் இயந்திரம் அல்ல என்பதை இந்தச் சமூகம் உணராதவரை நாட்டில் செயற்கைக் கருவூட்டல் மையங்கள் வளர்வதைத் தடுக்க இயலாது.

- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.

திருமணமானபின் எத்தனையோ ஆண்டுகள் குழந்தைக்காக ஏங்கியிருந்த நிலையில் ஏதோவொரு வகையில் குழந்தை பிறந்தால் போதும் என்ற தவிப்பால்தான் பலரும் செயற்கைக் கருவூட்டல் மையங்களை நாடிச் செல்கின்றனர். அப்படியான தேடலில் அவசரகதியில் யோசிக்காமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் மங்கயம்மா போன்றவர்கள், குழந்தையை வளர்த்து ஆளாக்கத் தங்கள் வயதும் உடல்நலமும் பொருளாதாரமும் ஒத்துழைக்குமா என்பதைச் சிந்திக்க மறந்துவிடு கின்றனர். பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் செயற்கைக் கருவூட்டல் மையங்கள், இந்திய மருத்துவக் கழகத்தின் வழிகாட்டலை மதிக்காமல் இதுபோன்ற செயல்களுக்குத் துணைபோகின்றன.

- ஆர்.ஜெயந்தி, மதுரை.

கருத்தரிப்பு மருத்துவமனைகள் பெரும்பாலும் பணம் பறிப்பதிலேயே குறியாகச் செயல்படுவது வேதனையானது. வயதான பிறகும் செயற்கைக் கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுகொள்ளும் தம்பதியினர் குழந்தையை வளர்த்து ஆளாக்கும்வரை ஆரோக்கியமாக இருப்பார்களா? எத்தனை வயதானாலும் தன் மனைவிதான் குழந்தையைச் சுமக்க வேண்டும் என்று சிலர் கட்டாயப்படுத்துவதாலும் சிலர் வயது கடந்த பிறகும் பிள்ளை பெற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆண்களாகப் பார்த்து மனம் மாறினால்தான் பெண்களுக்கு இது போன்ற கொடுமையில் இருந்து விடிவுகாலம் கிடைக்கும்.

- உஷா முத்துராமன், திருநகர்.

74 வயது பெண், செயற்கைக் கருவூட்டல் மூலமாக இரண்டு குழந்தைகளைப் பெற்றிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயமல்ல. இப்படி வயது கடந்த பிறகு உயிரைப் பணயம் வைத்துக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா என மக்கள் யோசித்தால்தான் இந்தப் பிரச்சினை தீரும்.

- பிரகதா நவநீதன். மதுரை

மக்களிடம் செயற்கைக் கருவூட்டல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாகவும் குழந்தைகளைத் தத்தெடுப்பதன் அவசியத்தை எடுத்துரைப்பதன் மூலமாகவும் தகுந்த அரசாணைகள் மூலமாகவும் புற்றீசல்போல் முளைத்துவரும் கருவூட்டல் மையங்களைக் கட்டுப்படுத்தலாம்.

- தி.ஸ்ருதி, மதுரை.

ஐம்பது வயதைக் கடந்த பெண் கருத்தரிப்பது, அந்தப் பெண்ணுக்கும் கருத்தரிப்பு மையத்துக்கும் வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் குழந்தைக்கு? தாய்ப்பால், உடல் உழைப்பு சார்ந்த அரவணைப்பு போன்ற அடிப்படை உரிமைகள் அந்தக் குழந்தைக்குக் கிடைக்காது என்பதே நிதர்சனம்.

- கே. பிரேமாகுமாரி.

வணிகமயமாகிவிட்ட மருத்துவ உலகம், மக்களின் உணர்வுகளைக் காசாக மாற்றுகிறது. குழந்தைகள் இல்லாத தம்பதியினருக்கு அரசு மனநல ஆலோசனையைக் கட்டணமில்லாமல் வழங்க வேண்டும். என்னுடன் பணிபுரிந்தவர் 60 வயதில் குழந்தை பெற்றுக்கொண்டார். இதை வாரிசு உணர்வு எனலாம். கைத்தறித் தொழிலாளி ஒருவர் 65 வயதில் பிள்ளை பெற்றார். அவருடைய மகளும் அப்போது தாய்மை அடைந்திருந்தார் என்பது நெருடலாக இருந்தது. 1975-ல் இது நடந்தது. முப்பது ஆண்டுகளைக் கடந்தும் நிலைமை மாறாதாது வேதனையளிக்கிறது. பிள்ளை பெற்றால்தான் சமூகத்தில் பெண்கள் மதிக்கப்படுவார்கள் என்னும் நிலை என்று மாறும்?

- சி. இரமேசு, விசுவநாதபுரம்.

முன்னணி ஐ.டி. நிறுவனமான ‘காக்னிசன்ட்’டில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை உலக அளவில் ஒரு லட்சத்தை எட்டியிருக்கிறது. இதில் இந்தியாவிலுள்ள பெண்களின் எண்ணிக்கை மட்டும் 75,000.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in