

கா.சு.வேலாயுதன்
பிறந்த குழந்தையையும் தாயையும் குறைந்தது மூன்று மாதங்களுக்காவது வெளியே அழைத்துச் செல்ல மாட்டார்கள். ஆனால், குழந்தையைப் படம் எடுப்பதற்காகவே 100 கி.மீ. பயணம் செய்து ஸ்டுடியோவுக்கு அழைத்துச் செல்வார்களா? “செல்வார்களே” எனச் சிரிக்கிறார்கள் அனுவும் சர்வீனாவும். பச்சிளங் குழந்தைகளைப் படமெடுப்பதற்காகவே தனித்துவமான ஸ்டுடியோவை இவர்கள் அமைத்திருக்கிறார்கள்.
கோவை சிங்காநல்லூர் குளக்கரை அருகே உள்ள அந்த காலனியில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாம் மாடியில் பளீர் வெண்மையில் வரவேற்கிறது அந்த ஸ்டுடியோ. திரும்பின திசையெல்லாம் வெளிச்சம். குழந்தைகளுக்கான டிரெஸ்ஸிங் அறையில் ஆயிரக்கணக்கான ஆடைகள், குல்லா, பொம்மைகள் போன்றவை இருக்கின்றன. குட்டிக் கட்டிலில், பெட்டிக்கூடையில், தொட்டிலில், குல்லாவுடன், குண்டுக்கட்டாகக் கட்டி என விதவிதமாகப் படங்கள் எடுக்கப்படுகின்றன. ஃபிளாஷ் இல்லாமல் சர்வீனா படம் பிடிக்க, குழந்தையையும் பெற்றோரையும் தயார்படுத்தும் பணியைச் செய்கிறார் அனு.
‘‘நானும், சர்வீனாவும் பி.இ., எம்.பி.ஏ., படிச்சோம். எனக்குக் கல்லூரி படிக்கும்போதே படம் எடுப்பதிலும் ஆல்பம் தயாரிப்பதிலும் ஆர்வம். 2007-ல் டி.எஸ்.எல்.ஆர். கேமராவை வாங்கி ஆர்வமா படம் எடுத்துட்டிருந்தேன். அப்போ குழந்தைகளை எடுக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. பிறந்த குழந்தையைப் படம் எடுக்கக் கூடாதுன்னு இங்கே பலரும் சொல்றாங்க. ஆனால், இணையத்தைப் பார்த்தா பிறந்த குழந்தைகளைப் படம் பிடிப்பதையே உலக அளவில் பலரும் வேலையா செய்யறது தெரிந்தது. இந்தியாவிலும் இது போன்ற இணையதளங்கள் இருந்தது. அதைப் பெரும்பாலும் ஆண்களே ஆக்கிரமிச்சிருந்தாங்க” என்று சொல்லும் அனு, அதன் பிறகே இந்தத் துறையில் களம் இறங்கியிருக்கிறார்.
உறவினர்கள், நண்பர்கள் வட்டத்தில் வரவேற்பு கிடைக்க, பலரும் தங்கள் குழந்தைகளைப் படம் எடுத்துத்தரச் சொன்னார்கள். “அஞ்சு வருஷமா இந்த வேலையைச் செய்யறேன். வருஷத்துக்கு நூறு குழந்தைகளுக்கு மேல படம் எடுத்திருப்பேன். ஃபேஸ்புக், இண்ஸ்டாகிராம் பார்த்து இப்ப நிறையப் பேர் தேடி வர்றாங்க” என்கிறார் அனு.
இணைந்த கைகள்
‘விமன் போட்டோகிராபி ஃபோரம்’ மூலம் சர்வீனாவின் அறிமுகம் கிடைக்க, அதன் பிறகு இருவரும் சேர்ந்து களம் இறங்கியிருக்கிறார்கள். ‘‘குழந்தை பிறந்து 14 நாட்களுக்குள் படம் எடுக்கணும். அதுதான் மழலைத் தன்மை மாறாமல் இருக்கும். பச்சிளங் குழந்தைகளைப் படம் எடுப்பதால் பொறுப்புடனும் அக்கறையுடனும் செயல் படணும். குழந்தைகளுக்கு அணிவிக்கிற ஒவ்வொண்ணையும் கவனமா பார்த்துச் செய்யணும். அதுதான் வெளியூர்களில் இருந்தெல்லாம் எங்களைத் தேடி வாடிக்கையாளர்களை வரவைக்குது” எனச் சிரிக்கிறார் சர்வீனா.
பச்சிளங் குழந்தைகளைப் படம் எடுப்பதற்காகவே அனுவும் சர்வீனாவும் பெங்களூருவில் சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கின்றனர். இவர்கள் எடுக்கும் படங்களை எடிட் செய்து ஆல்பம் தயாரிக்கும் பணியிலும் பெண்களையே வைத்துள்ளனர். ஈரோட்டிலிருந்து படம் எடுக்க வந்த செளம்யா -கார்த்திக் தம்பதிக்கு ஆஸ்திரேலியாவில் பணி. அனுவையும் சர்வீனாவையும் பற்றிக் கேள்விப்பட்டு இங்கே வந்திருக்கிறார்கள். மூலதனம் அதிகம் தேவைப்படும் இந்தத் தொழில் லாபகரமானதா என்று கேட்டால், “நாங்கள் லாப நோக்கில் இதைச் செய்யவில்லை. மழலைகளின் புன்னகைக்கு ஈடாக வேறென்ன இருக்கிறது?” எனச் சிரிக்கிறார்கள் அனுவும் சர்வீனாவும்.