

கனி
புகழ்பெற்ற தெருக்கூத்துக் கலைஞரான கண்ணப்பத் தம்பிரானின் 16-ம் ஆண்டு நினைவு நாடக விழாவை ‘புரிசை கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்து மன்றம்’ அக்டோபர் 5, 6 ஆகிய இரண்டு நாட்கள் புரிசை கிராமத்தில் ஏற்பாடு செய்திருக்கிறது. திருவண்ணா மலை மாவட்டம் செய்யாறுக்கு அருகில் உள்ளது புரிசை.
2003-ல் கண்ணப்பத் தம்பிரான் மறைவுக்குப் பிறகு, 16 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் புரிசை கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு இந்த நாடக விழா கோலாகலமாக நடைபெறுகிறது. தமிழ் நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த விழாவுக்கு நாடகக் கலைஞர்களும் ரசிகர்களும் வருகை தருகிறார்கள்.
இரண்டு நாட்களும் மாலையில் தொடங்கும் இந்த விழா அடுத்த நாள் அதிகாலைவரை நடைபெறுகிறது. “நாடகங்களில் குழந்தைகளின் பங்களிப்பு குறைந்துவருகிறது. பெரியவர்களுக்காக எடுக்கப்படும் நாடகங்களையே குழந்தை களும் பார்க்க வேண்டியிருக்கிறது. அதனால், இந்த ஆண்டு நாடக விழாவில் குழந்தைகள் பங்களிப்புடன் குழந்தைகளுக்கான நாடகங்களை இணைத்திருக்கிறோம்.
‘கதை சொல்லி’ சதீஷ், புரிசை அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பத்து நாட்கள் நாடகப் பயிற்சி பட்டறை நடத்தியிருக்கிறார். அவர்களின் சிறப்பு நாடகமும் இந்த விழாவில் மேடையேறுகிறது. அத்துடன், நாகப்பட்டினம் வானவில் பள்ளி மாணவர்களின் ‘பொம்மை முகச் சிங்கங் கள்’ உள்ளிட்ட குழந்தைகள் நாடகங்கள் இந்த ஆண்டு விழாவின் சிறப்பு” என்று சொல்கிறார் நாடகக் கலைஞரும் விழா ஒருங்கிணைப்பாளருமான பழனி முருகன். தமிழ்நாடு, புதுச்சேரியின் பிரபல நாடகக் குழுக்களின் நாடகங்கள் இந்த ஆண்டு கண்ணப்பத் தம்பிரான் நாடக விழாவில் மேடையேறவிருக்கின்றன. அக்டோபர் 6 அன்று மாலை 7.30 மணி முதல் நாடகங்கள் தொடங்கும்.