Published : 29 Sep 2019 10:48 AM
Last Updated : 29 Sep 2019 10:48 AM

நட்சத்திர நிழல்கள் 25: ருக்குமணி ஊருக்குப் புதியவள்

செல்லப்பா

திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் வெகுஜனங்களுக்குப் பிடித்தவாறு இருந்தாலொழிய திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறுவது கடினம். எனவே, பெரும்பாலும் வெகுஜன மன ஓட்டத்தை ஒட்டியே கதாபாத்திரங்கள் அமைக்கப்படும். சில அரிதான விதிவிலக்கும் உண்டு. அப்படியான விதிவிலக்கு ருக்குமணி.

கதையாசிரியராக அறியப்பட்டிருக்கும் அன்னக்கிளி R. செல்வராஜ் இயக்கிய முதல் படம் ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ (1979). சரிதா ஏற்று நடித்திருந்த அதன் நாயகிக் கதாபாத்திரம் ருக்குமணி. அவள் பண்ணைபுரத்துக்குள், சேலையில் சைக்கிளை மிதித்தபடி ‘சோலைக்குயிலே….’ பாடலை உற்சாகமாகப் பாடியபடியே நுழைவார். அவர் சைக்கிளில் வரும் ஜோரைப் பார்த்து, “மூக்கும் முழியுமாக இருக்கா. யார் வீட்டுக்குச் சக்களத்தியா வரப்போறாளோ” என்று பண்ணையாரின் மனைவி லட்சுமி சொல்வார். அந்த லட்சணத்தில் இருக்கிறது அந்த ஊர் ஆண்களின் யோக்கியதையும் பெண்களின் புரிதலும்.

ஊருக்கு ஒரு சாபம்

பண்ணைபுரத்துக்குக் குடும்பக் கட்டுப்பாட்டு பிரச்சாரத்துக்காக அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட சமூக சேவகி அவள். ஒரு சாபம் காரணமாக அந்த ஊரின் மக்கள்தொகை 300 ஆண்டுகளாக வெறும் 999தான். அதிலொன்று கூடினாலும் குறைந்தாலும் ஊருக்கு நல்லதல்ல என்பதால் ஊர்க்காரர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். ஊரின் நுழைவில் உள்ள கோட்டைவாசலை இரவில் பூட்டிவிடுவார்கள்.

இது அந்த ஊரின் கட்டுமானம். அதை யாரும் மீறக் கூடாது. ருக்குமணியின் அலுவலக உதவியாளன் சோலையப்பன் அவள் வந்த அன்றே, ஊரின் சாபத்தைப் பற்றிக்கூறி அவளை வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிப் போகச் சொல்கிறான். ஆனால், தன் தந்தை சுந்தர்ராஜன் ஒரு கறுப்புச் சட்டைக்காரர் என்று கூறி அதை மறுத்துவிடுகிறாள் ருக்குமணி. அவள் ஊருக்குள் புதிதாக வந்ததால் புள்ளி ஒன்று கூடிவிட அந்த ஊரில் செக்கு வைத்து ஓட்டும் பிச்சமுத்து கோட்டைவாசலில் படுத்துக்கொள்ளச் சம்மதிக்கிறான்.

ருக்குமணியை ஊரைவிட்டு விரட்ட ஏட்டையாவின் மனைவி சுந்தரி, பண்ணையாரின் இரண்டாம் மனைவி பஞ்சவர்ணம் ஆகியோர் முயல்கிறார்கள். ஆனால், ருக்குமணி அவர்களது வார்த்தைகளுக்குச் செவிமெடுக்கவில்லை. துணிச்சலுடன் அதை எதிர்கொள்கிறாள். ஒரு நாள் தாமதமாக ஊருக்கு வரும் ருக்குமணி பிச்சமுத்துவுடன் கோட்டைவாசலில் தங்க நேர்கிறது.

தன்னைப் பார்த்து அஞ்சுகிறாளோ என நினைத்துப் பேச்சுக் கொடுக்கும் பிச்சமுத்துவிடம், “நான் சாமிக்கே பயப்பட மாட்டேன்” என்று பட்டென்று சொல்லிவிடுகிறாள் ருக்குமணி. கடவுள் நம்பிக்கை இல்லாத பெண்ணாக, சமூகத்தில் தன்னை அறியப்படுத்தும் பெண் அந்த ஊருக்குப் புதியவள். பிச்சமுத்து அவளை ஆச்சரியத்துடன் பார்க்கிறான். மறுநாள் காலை சாலையில் நடந்துசெல்லும் பிச்சமுத்துவை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஊருக்குள் செல்கிறாள் ருக்குமணி. இளவட்ட ஆண் ஒருவன் தன் சைக்கிளில் இளம்பெண்ணை ஏற்றிக்கொண்டு வந்தாலே வாய்பிளக்கும் ஊர்க்காரர்களுக்கு ருக்குமணியின் இந்தச் செயல் அதிசயமாகப்பட்டது.

வைகுந்தமும் குடும்பக் கட்டுப்பாடும்

பிச்சமுத்துவை சைக்கிளில் ஏற்றிக்கொண்டுவந்ததால் ஊர் அவளைத் தப்பாகப் பேசுவதாகச் சொல்கிறான் சோலையப்பன். ருக்குமணியோ “உனக்கும் வேலையில்லை உங்க ஊருக்கும் வேலையில்லை” என்று அதை எளிதாகக் கடந்துசென்றுவிடுகிறாள். கு.க. பிரச்சாரம் செய்வதற்காகக்கிராமம் ஒன்றுக்குச் செல்கிறாள் ருக்குமணி. அங்கே ஒருவர் வைகுந்தம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்.

அவரிடம் பிரச்சாரத்தைத் தொடங்குகிறாள் ருக்குமணி. “கல்யாணம் ஆகாத நீ குடும்பக் கட்டுப்பாட பத்தி என்ன பேசப்போற?” என்கிறார் அவர். பதிலுக்கு ருக்குவோ, “நீங்க இதுக்கு முந்தி செத்திருக்கீங்களா?” என்று கேட்கிறாள். அவர் “இல்லை” என்கிறார். “அப்புறம் எப்படி நேரில் பார்த்த மாதிரியே வைகுந்தம் பத்திப் பேசுறீங்க” என்று வெடிக்கிறாள். இந்த மாதிரி பகுத்தறிவுடன் அவள் எழுப்பும் கேள்விகளை ஊர்க்காரர்களால் எதிர்கொள்ளவே முடியவில்லை.

அந்த ஊர்ப் பெண்களைப் போல் அவள் மூடத்தனமான நம்பிக்கைகளைக் கைக்கொண்டிருக்கவில்லை. மாறுபட்ட பெண்ணான ருக்குமணியிடம் அந்த ஊர்ப் பெண்களின் வாய்ச்சவடால் எடுபடவில்லை. எனவே, அந்த ஊரின் முரட்டு ஆளான வெள்ளைச்சாமி அம்பலம் என்பவனும் ருக்குமணியை அதட்டிப் பார்க்கிறான். அதற்கும் அவள் அலட்டிக்கொள்ளவேயில்லை.

ஆகவே, கிராமத்தில் கடைகளில் அவளுக்கு எந்தப் பொருளையும் தர மறுக்கிறார்கள். இதன் பின்னர், பண்ணையாரின் மகன் கண்ணாயிரம் அவளுக்கு உதவும் சாக்கில் அவளை அணுகுகிறான். அவள் அதற்கு இடந்தராமல் அவனை அனுப்பிவிடுகிறாள். அதே நேரம், இரவில் பட்டினியாகப் படுப்பாளே என்று நினைத்து வீட்டிலிருந்து அவளுக்கு எள்ளுப் புண்ணாக்குக் கொண்டுவந்து தருகிறான் பிச்சமுத்து. அந்த அன்பும் அவனது வெள்ளந்திக் குணமும் ருக்குமணிக்கு மிகவும் பிடித்துவிடுகின்றன. யாரை எங்கே நிறுத்த வேண்டும் என்பதில் அவளுக்குத் தெளிவு இருந்தது.

அவர்களுக்குள் ஓர் ஒட்டுதல் ஏற்பட்டுவிட, அவனையே மணந்துகொள்கிறாள். மீண்டும் புள்ளி பிரச்சினை வருகிறது. ருக்குமணியைக் கோட்டைவாசலுக்கு அனுப்பத் துடிக்கிறாள் பஞ்சவர்ணம். ஆனால், அப்பவோ இப்பவோ என்று இழுத்துக்கொண்டிருந்த குப்பம்மா கிழவி இறந்துவிடுகிறாள். சிக்கல் தீர்ந்துவிட்ட நிலையில் பிச்சமுத்துவின் தங்கை வெளியூர்க்காரனான நாகராஜைத் திருமணம் செய்துகொண்டுவந்துவிடுகிறாள். மீண்டும் புள்ளி ஒன்று கூடுகிறது.

பேயா, ஹிஸ்டீரியாவா?

தன் காதலனைத் தன்னிடமிருந்து தந்திரமாகப் பிரித்துத் தன்னை இரண்டாம் மனைவியாக்கிக்கொண்ட பண்ணையார் குடும்பத்தை நிர்மூலமாக்க வேண்டும் என்பதே பஞ்சவர்ணத்தின் எண்ணம். கூடவே இருந்து குழிபறிக்கும் சகுனியாகவே பஞ்சவர்ணம் இருக்கிறாள். அதற்காகப் பண்ணையாரின் மகனையே உறவுக்கு அழைக்கிறாள்.

பண்ணையாரின் மனைவி லட்சுமிக்குப் பேய்பிடித்துவிட்டது என நம்பச்செய்கிறாள். அது குறித்து தன்னுடைய மாமியாரிடம் பேசும் ருக்குமணி, பண்ணையாரின் மனைவிக்குப் பேயெல்லாம் பிடிக்கவில்லை, ஹிஸ்டீரியா என்னும் மன நோய் அது என்கிறாள். காட்டிலும் மேட்டிலும் இரவு பகலாக அலையும் தன்னை ஏன் எந்தப் பேயும் பிடிக்கவில்லை எனத் தர்க்கரீதியாகக் கேள்வி கேட்கிறாள். ஈ.வெ.ரா. பெரியார் மாதிரி இன்னும் ரெண்டு, மூணு பேர் வந்தால்தான் இந்த நாட்டைத் திருத்த முடியும் என்கிறாள்.

பஞ்சவர்ணத்தின் திட்டங்களை முழுமையாகப் புரிந்துகொண்டவளாக இருக்கிறாள் ருக்குமணி. அதன் காரணமாகவே பஞ்சவர்ணத்துக்கு ருக்குமணி மீது பகையுணர்வு வந்துவிடுகிறது. மேலும், பஞ்சவர்ணத்துக்குத் தொடக்கம் முதலே ருக்குமணியைப் பிடிக்கவில்லை. அவளை எப்படியாவது பழிவாங்க நினைக்கிறாள். அதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறாள். அப்படியொரு தருணம் வாய்க்கிறது. ஓரிரவில் கோட்டைவாசலில் ருக்குமணியும் கண்ணாயிரமும் தங்க நேர்கிறது. அதைவைத்து ஊருக்குள் கதைகட்டிவிடுகிறாள் பஞ்சவர்ணம். அந்த நேரத்தில் ருக்குமணி கர்ப்பம் தரிக்கிறாள். பிச்சமுத்துவையும் ஊர்க்காரர்கள் குழப்பிவிடுகிறார்கள்.

ருக்குமணியை மாமியார்கூடச் சந்தேகப்படவில்லை. ஆனால், பிச்சமுத்து சந்தேகப்படுகிறான். இவ்வளவுக்கும் தன்னளவில் பெரிய திறமையற்ற முட்டாள் ஆடு போன்றவன் அவன். ஆண் என்ற ஒரு காரணத்தாலேயே அவனால் இப்படிச் சந்தேகப்பட முடிகிறது. இதை அறிந்த ருக்குமணி அவனால் உருவான கருவை அழித்துக்கொள்கிறாள். வலி மிகுந்த அந்தச் செயலைத் தன்மானத்தை முன்னிட்டுச் செயல்படுத்துகிறாள்.

எப்போது கணவன் தன்னை நம்புகிறானோ அப்போது அவனுக்குக் குழந்தை பெற்றுத் தருகிறேன் என்று மாமியாரிடம் கூறுகிறாள். ஊரின் தவறான தகவல்களால் நிலைதடுமாறிய பிச்சமுத்து படத்தின் இறுதியில் ருக்குமணி என்று நினைத்து பஞ்சவர்ணத்தைக் கொலையே செய்துவிடுகிறான். பஞ்சவர்ணம்களும் பிச்சமுத்துகளும் மூடத்தனங்களும் நிறைந்த எத்தனையோ ஊர்கள் இந்த நாட்டில் உள்ளன. அந்த ஊர்களுக்கு எல்லாம் எத்தனை எத்தனை ருக்குமணிகள் தேவை?

(நிழல்கள் வளரும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x